Top News

முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி கௌரவிப்பு



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 21ஆவது வருடாந்த மாநாட்டில் சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்த இரு பிரமுகர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் மற்றும் நீண்ட காலம் ஊடகத்துறையில் பணிபுரிந்த 07 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் அடங்களாக 9 பேருக்கு அவர்களின் ஊடகப் பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

பேராதனைப் பல்கலைக் கழக அரபு, இஸ்லாமிய நாகரீகத்துறை முன்னாள் முதுநிலை விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம் (எம்.ஏ) மற்றும் சிங்களத்தில் இஸ்லாமிய பணி புரிந்துவரும் தஹ்லான் மன்சூர் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இது தவிர நீண்டகாலம் ஊடகப் பணி புரிந்த ஹம்ஸா ஹனீபா, தயா லங்காபுர, ரீ. ஞானசேகரன், எம்.இஸட். அஹமத் முனவ்வர், எம்.ஐ.எம். சம்சுடீன், மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, திருமதி ஸகிய்யா சித்திக் பரீத் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் ஊடகத் துறைப் பங்களிப்பை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இம்மாநாடு காலை 9.00 மணிக்கு கொழும்பு - 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா  ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே.எம்.ஏ. முஹம்மத் அபூபக்கர் விசேட பேச்சாளராகவும் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மாநாட்டின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

இதன்போது Media Directory இன் 6ஆவது பதிப்பு வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post