எம்.எஸ்.சம்சுல் ஹுதா
பொத்துவில் பிரதேச செயலாளருக்கு எதிராகவும் ஆதரவாகவும் இரு வேறு குழுக்களினால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதேச செயலாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நால்வர் பதாதைகளை ஏந்திய வண்ணம் நேற்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலாளர் சர்வாதிகார முறையில் அதிகாரத்தைப் பிரயோகிக்கிறார், உத்தியோகத்தர்கள், ஊழியர்களிடத்தில் மனிதாபிமான முறையில் நடந்து கொள்வதில்லை, ஏற்கனவே செய்யப்பட்ட முறைப்பாட்டினை வைத்து அதிகாரப் பழிவாங்கல்கள், நான்கு வருடங்களுக்கு மேற்பட்ட 80வீதமான உத்தியோகத்தர்களின் வருடாந்த சம்பள ஏற்றங்களை காரணங்களின்றி இடைநிறுத்தி வைத்துள்ளமை உள்ளிட்ட பல விடயங்களைக் கண்டித்தே குறித்த உண்ணாவிரதத்தை தொடர்வதாக இதில் ஈடுபட்ட சில உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதே வேளை குறித்த கண்டன போராட்டத்தை எதிர்த்தும் பொத்துவில் பிரதேச செயலாளருக்கு ஆதராவாகவும் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், பொத்துவில் தொகுதி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் ஏ.எம்.அப்துல் மஜீத், பிரதேச சபை உறுப்பினர் ஜமாஹிம், என்.எச்.முனாஸ் ஆகியோர் “பிரதேச செயலாளர் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தாதே”, “பிரதேச செயலாளர் முஸர்ரத்திற்கு சரியான முறையில் நிர்வாகம் செய்ய வழிவிடு”, “பிரதேச செயலாளர் நேர்மையான முறையில் சேவை செய்ததற்கு பரிசா ?”, “பொத்துவில் மக்களுக்கு பிரதேச செயலாளர் முஸர்ரத்தின் சேவை தேவை” என்ற ஆதரவு பதாதைகளை ஏந்திய வண்ணம் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களுக்கு முன்னால் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இங்கு கருத்து தெரிவித்த பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் கூறுகையில், பொத்துவில் பொதுமக்கள் சார்பாக இங்கு நாம் கலந்து கொண்டிருக்கின்றோம், பொத்துவிலைச் சேர்ந்த நிர்வாக சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர் பிரதேச செயலகத்திலே பிரதேச செயலாளராகக் கடமையாற்ற வேண்டும் என்பதே எங்களது அவாவாகும். இங்கு எந்த பொதுமக்களுமின்றி இந்த நான்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மாத்திரம் பிரதேச செயலாளரை மாற்ற வேண்டும் எனஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றார்கள். இந்த துண்டுப்பிரசுரத்தை வாசித்தால் புரியும், அவர்கள் அதில் குறிப்பிட்ட விடயங்களுக்கு அரசாங்க அதிபர் உள்ளார், செயலாளர் உள்ளார்கள். ஆனால் பிரதேச செயலாளர் தவறு செய்கின்றார், இலஞ்சம் பெறுகின்றார் என்று ஏழை மக்களை பிழையாக வழிநடாத்த வேண்டாம். இலஞ்சங்களையும் ஊழல்களையும் பிடித்துக் கொடுப்பதற்கு ஆணைக்குழுக்கள் உள்ளன, குறைந்தது பொலிஸ் நிலையத்திலாவது முறையீடு செய்யுங்கள். ஆனால் இங்கு கடமையாற்றும் இந்த நான்கு பேரும் தங்களது சுயநலத்திற்காக வேண்டி செய்வதாகவே நாங்கள் கூறுகின்றோம். காரியாலயத்தில் இவர்களை பற்றி விசாரித்த போது அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு கடமைக்கு சமுகமளிப்பதில்லை, பகல் உணவுக்கு மூன்று மணி நேரத்திற்கு மேலதிகமாக எடுப்பது, தனியார் வகுப்புக்கள் நடாத்துகின்றமை என குற்றம் சுமத்தப்படுகின்றது. எனவே, எங்களுக்கு எங்களது பிரதேசத்தைச் சேர்ந்த நிர்வாக சேவையில் சித்தியடைந்த பிரதேச செயலாளர் தேவை. உங்களது பிரச்சினையை திணைக்களங்கள் ஊடாக தீர்த்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொத்துவில் பிரதேச செயலக செயலாளர் என்.எம்.எம்.முஸாரத் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, எனது அலுவலகத்தில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களது இந்த செயற்பாடானது நியாயமற்றதாகும். ஒரு திணைக்களத் தலைவர் என்ற வகையில் நான் ஒரு சில விடயங்களை அவதானித்து வந்துள்ளேன். குறிப்பாக குறித்த பணிப்பகிஷ்கரிப்பை தலைமைதாங்கி நடாத்தும் எமது அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஆண்டுகளில் 02 முறை கணக்காய்வுக் குழுவினரால் பகல் நேர சாப்பாட்டுக்குச் சென்று உரிய நேரத்திற்கு சமுகமளிக்கவில்லையென எனது அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கணக்காய்வு அதிகாரிகள் என்னைப் பணித்ததற்கமைய நாம் அவரை நெருக்கமாக அவதானித்து வந்தேன். சில நேரங்களில் அவரை அழைத்து நேரில் சொல்லியிருக்கின்றேன். ஆனால் இவ்வாறு கூறுவதால் தனக்கு மன உளைச்சலாக இருக்கின்றது எனக் கூறுகின்றார். இதற்கு நிர்வாகியாகிய என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. சரியான ஒரு நிருவாகத்தைக் குழப்பி அவருடைய காரியத்தை சாதிக்க முனைகின்றார் என்றார்.
Post a Comment