சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக செயற்படும் நாடுகள் மத்தியில் இலங்கை முன்னிலையில் காணப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் பாராட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள ஆட்கடத்தல் தொடர்பான நடவடிக்கையின் புதிய அறிக்கைக்கு அமைய இலங்கை இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.
அத்துடன், ஆட்கடத்தலுக்கு எதிராக வெளிநாட்டுச் சேவைப் பணியகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள்குறித்தும் அந்த அறிக்கையில் விசேடமாகப் பாராட்டப்பட்டுள்ளது. இது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு உதவியை பெற்றுக் கொள்வதற்கு பயனுள்ள நிலைமையாகும் என்று பிரதியமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர்,
இலங்கை ஆட்கடத்தலுக்கு எதிராக முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக செயற்பாட்டுப் படையணியொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வெளிநாட்டு சேவை பணியகத்தில் ஆட்கடத்தல் நடவடிக்கையைத் தடுப்பதற்காக விசேட பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் அவை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment