கிழக்கு முஸ்லிம்களுக்கு புதிய தேர்தல் முறையினால் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கள் இல்லை; என்றும் கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் சிதறி வாழ்வதால் தங்கள் விகிதாசாரத்திற்கேற்ப தொகுதிகளை ஒரு போதும் பெற்றுக்கொள்ள முடியாது; என்றும் பகுதி-1 இல் பார்த்தோம்.
சிலர் இத்தேர்தலும் நூறு வீதம் விகிதாசாரத் தேர்தலே! தொகுதிகள் குறைவு என்றாலும் அது விகிதாசாரத் தேர்தல் என்பதால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாது; என்ற அபிப்பிராயத்தை முன்வைக்க முனைகிறார்கள். அமைச்சர் பைசர் முஸ்தபாகூட அண்மையில் இத்தேர்தல் முஸ்லிம்களுக்கு பாதிப்பானதல்ல; என்ற கருத்தை முன்வைத்தார். சில தேசியக்கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம்கள் இத்தேர்தல் முறை முஸ்லிம்களுக்குப் பாதிப்பானதல்ல; முஸ்லிம்கட்சிகளுக்கே பாதிப்பானது; அவர்களின் சுயநலத்திற்காகவே அவர்கள் பேசுகிறார்கள்; என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள்.
சிலர் அவர்களது தேசியக்கட்சி எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம்களின் முதுகில்
இவ்வாறு குத்துகிறார்கள். இன்னும் சிலர் இத்தேர்தல் முறையைப் புரிந்துகொள்ளாமல் புரிந்ததாக நினைத்துக்கொண்டு பேசுகின்றார்கள்.
மிகவும் அவதானமாக இதனைப் புரிந்துகொள்ளுங்கள். இத்தேர்தல் நூறுவிகிதம் விகிதாசாரத்தேர்தலாக அல்லது உண்மையான கலப்புத் தேர்தலாக இருந்தால் இவர்கள் கூறுவதுபோல் எதுவித பிரச்சினையும் இருக்காது. ஆனால் இப்புதிய உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்முறை 100% விகிதாசாரமும் இல்லை, 50% விகிதாசாரமும் இல்லை. 1% விகிதாசாரமுமில்லை. சுருங்கக்கூறின் இது விகிதாசாரத் தேர்தலே இல்லை. ஆனால் இத்தேர்தலின் சில அடிப்படை அம்சங்களை தெளிவுபடுத்தும்போது இது பழைய தேர்தலைப்போன்று இதுவும் 100% விகிதாசாரமே என்று கூறுகின்றோம். அல்லது அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப அவர்களுக்கு புரியக்கூடிய விதத்தில் சொற்களைப் பாவிக்கின்றோம்.
இது மக்களின் இலகுவான புரிதலுக்காகும். புதியமுறை என்பதால் தேர்தலின் அடிப்படையே புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும்போது மிகவும் நுணுக்கமான யதார்த்த உண்மைகளுக்குள் செல்லமுடியாது. குறிப்பாக, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்று ஓரளவு நிதர்சனமாக புரிகின்றவரை பலர் உள்ளூராட்சித் தேர்தல்முறையை 60% வட்டாரம் 40% விகிதாசாரம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எனவே, அவர்களுக்கு இது 100% விகிதாசாரம் என்பதை பலகோணங்களில் சொல்ல வேண்டியிருந்தது .
அப்படியானால் இது 100% விகிதாசாரம் இல்லையா? என்ற நியாயமான கேள்வி எழலாம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுதும் இது 100% விகிதாசாரமே! அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இது 100% என்ன, 1% கூட விகிதாசாரத் தேர்தல் அல்ல. இந்த இரண்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்தால் இத்தேர்தலில் உள்ள பிரச்சினை என்ன? இது கிழக்கிற்கு வெளியே ஏன் முஸ்லிம்களைப் பாதிக்கின்றது; என்பது புரியும்.
ஏன் 100% விகிதாசாரம் என்கின்றோம்?
—————————————————-
பழையமுறைபோன்றே இத்தேர்தலிலும் 100% விகிதாசார அடிப்படையில் ஆசனங்கள் பங்கிடப்படுகின்றன. அதாவது ஒரு மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் பெற்ற செல்லுபடியான வாக்குகளைக் கூட்டி, அதன் மொத்தத்தை அம்மாவாட்டத்திற்குரிய மாகாணசபை அங்கத்தவர்களின் எண்ணிக்கையால் பிரித்து ஒரு அங்கத்தவருக்குரிய வாக்கு கணிப்பிடப்பிடப்படுகின்றது. (இங்கு “ கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் பெற்ற” என்ற சொற்றொடரை கவனத்திற்கொள்க. அதற்கு மீண்டும் வருவோம்.) அதன்பின் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளுக்கேற்ப ஆசனம் பங்கிடப்படுகின்றது. பழைய முறையும் இதுதான். எனவே, இது பழையமுறைபோன்று 100% விகிதாசாரக் கணிப்பீடே! ஆனால் இது விகிதாசாரத் தேர்தல் அல்ல. கணிப்பீடு வேறு! தேர்தல் வேறு. இந்த இரண்டையும் பிரித்தறிவதில் உள்ள பிரச்சினைதான் குழப்பத்திற்கு காரணமாகின்றது.
விகிதாசாரத் தேர்தல் என்பது என்ன?
————————————————-
நாம் விகிதாசாரத் தேர்தலில் நன்கு அனுபவப்பட்டவர்கள். விகிதாசாரத்தேர்தல் என்பது ஒரு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற “சகலகட்சிகளும் சுயேச்சைகளும் பெறுகின்ற” வாக்குகளைக் கூட்டி கணிப்பிடுவது என்று மேலே பார்த்தோம்.
இப்பொழுதுதான் இப்பிரச்சினையின் அச்சாணியான, அதற்குரிய தீர்வினதும் அச்சாணியான கேள்விக்கு வருகின்றோம்.
இத்தேர்தல்முறையில், “ கட்சிகளுக்கு வாக்களிக்கப்படுகின்றதா?” என்பதுதான் அக்கேள்வியாகும். பழையமுறையில் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றோம். இம்முறையில் கட்சிகளுக்கு ஒரு வாக்கும் நாம் அளிப்பதில்லை. கட்சியின் பெயர், சின்னம் இருக்கலாம். அவை வேட்பாளரை அடையாளப்படுத்துவதற்கு. ஆனால் நாம் வாக்களிப்பது வேட்பாளருக்கே! கட்சிக்காக அவருக்கு வாக்களிக்கலாம். அது அவருக்கு வாக்களிப்பதற்கான காரணம். ஆனால் நாம் வாக்களிப்பது அவருக்கே! அது கட்சியின் வாக்காக கருதப்படுவதில்லை.
நாங்கள் 1977ம் ஆண்டுவரை தொகுதிமுறைத் தேர்தலில் அனுபவப்பட்டிருக்கின்றோம். அம்முறையில் கட்சிக்குரிய வாக்கு கணிப்பிடவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் கட்சிக்கென்று எந்த அங்கத்தவரும் ஒதுக்கப்படுவதில்லை. வெற்றிபெற்றவர் கட்சியின் அங்கத்தவராக இருப்பார். அது வேறுவிடயம். அவருடைய வாக்குகள் அறிவிக்கப்படும்போது கட்சியின் பெயர் குறிப்பிடப்படும். அது மேற்கூறியதுபோல் அவரை அடையாளப்படுத்துவதற்காகவாகும்.
எனவே கட்சிக்கென்று ஒரு வாக்கும் அளிக்காமல் கட்சிக்கு வாக்குகள் வருவதெப்படி. வாக்குகள் எதையும் பெறாத கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கேற்ப அங்கத்துவம் பங்கிடுவதெப்படி? இது முதலாவது ஒரு ஜனநாயகப் படுகொலையாகும்.
2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து இதேபோன்ற ஒரு முறை பொதுத்தேர்தலுக்கு அறிமுகப்படுத்தப்பட முயற்சிக்கப்பட்டபோது, அதாவது, அரசாங்கம் வேறு ஒரு தேர்தல்முறையை முன்வைக்கமுற்பட்டபோது இந்தக்கலப்புத் தேர்தல்முறையை சிறுபான்மைக் கட்சிகளே அரசுக்கு பிரேரித்தன. இதற்கான கலந்துரையாடல் தற்போதைய அமைச்சர் மனோகணேசனின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், இரண்டு மலையகப் பிரதிநிகள் மற்றும் நானும் கலந்துகொண்டோம்.
அங்குதான் ஜேர்மன் முறையைத் தழுவியதான கலப்புத் தேர்தல் முறையைப் பிரேரிக்க முடிவெடுத்தோம். ஜேர்மன் கலப்புமுறை என்பது இரட்டை வாக்கைக் கொண்டது. பிரதமருக்கு கலப்புத் தேர்தலில் உடன்படு. ஆனால் இரட்டை வாக்கில் உடன்பாடு இருக்கவில்லை. ( இரட்டை வாக்கை விளக்கும்போது ஏன் அவர் விரும்பவில்லை என்பதற்கு வருகின்றேன்)
இதுதொடர்பாக பல மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டு, உள்நாட்டு நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன. அதில் வெளிநாட்டு நிபுணர்களுடனான கலந்துரையாடலொன்றில் நான் இதே வாதத்தை முன்வைத்தேன்.
கட்சிகளுக்கு வாக்களிக்காமல் எவ்வாறு கட்சிபெற்ற வாக்கு கணிப்பிடப்பட முடியும். இது ஒரு ஜனநாயகப் படுகொலை. இங்கு ஒரு வாக்கிற்கு இரண்டு தொழில்கள் வழங்கப்படுகின்றன. அதாவது வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக அளிக்கப்படுகின்ற வாக்கை வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கும் பயன்படுத்திவிட்டு அதனை கட்சிக்கு அளித்த வாக்காகவும் கருதுகிறீர்கள். இது எந்த வகையில் முஸ்லிம்களைப் பாதிக்கும் போன்ற விடயங்களை முன்வைத்தபோது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.
இரட்டை வாக்கின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட அவர்கள் இரட்டை வாக்கில் இருக்கின்ற ஒரு பிரச்சினையையும் சுட்டிக்காட்டினார்கள். அதனை பின்னர் நான் விரிவாக குறிப்பிடுகின்றேன். அப்பொழுது இரட்டை வாக்கை ஆதரித்த மு காங்கிரஸ், இந்த எச்சரிக்கைக்குப் பிறகு ( இதே எச்சரிக்கையை பிறகு வந்த நோர்வே நிபுணரும் அவர்களுக்கு சுட்டிக்காட்டியதாக அறிகிறேன்) இரட்டை வாக்கு விடயத்தில் சற்று பின்வாங்குவதாக ஒரு செய்தி. அவர்களின் தயக்கத்திலும் சில நியாயங்கள் இருப்பது மறுப்பதற்கில்லை.
இந்த எச்சரிக்கை என்னவென்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு தீர்வு என்ன என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இதில் படித்த புத்தி ஜீவிகள் அதிக அக்கறை எடுக்க வேண்டும். இதில் கட்சிகள் சரியான நிலப்பாட்டை எடுப்பதற்கு புத்திஜீவிகள் உதவ வேண்டும்.
இந்த கலப்புமுறைத் தேர்தல் ஆங்கிலத்தில் mixed member proportional representation system என்று அழைக்கப்படுகிறது. Proportional representation system என்பது விகிதாசாரத் தேர்தல்முறையாகும். நமது பழைய தேர்தல்முறையும் proportional representation system என்றுதான் அழைக்கப்படுகின்றது. எனவே இரண்டும் அடிப்படையில் விகிதாசாரம் என்பதால் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளைக்கொண்டே அங்கத்துவம் தீர்மானிக்கப்படுகின்றன.
Mixed member என்று சொல்லப்படுவதற்கான காரணம் கட்சிகள் பெறுகின்ற அங்கத்தவர்கள் யார்? என்பதைத் தீர்மானிப்பதில் பாதியை தொகுதிமுறைத் தேர்தலினூடாகத் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இங்கு இரண்டு வாக்குகள் பாவிக்கப்படுகின்றன. ஒன்று கட்சியைத் தெரிவுசெய்வதற்கு. அடுத்தது வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கு. ஆனால் நமது புதிய தேர்தல்முறை இரண்டையும் ஒரேவாக்கை வைத்து செய்யமுனைகின்றது.
இது 100% தொகுதிமுறைத் தேர்தல்
————————————————
இது விகிதாசாரத் தேர்தலுமல்ல, கலப்புத் தேர்தலுமல்ல. இது 100% தொகுதிமுறைத் தேர்தலாகும். 50% தானே தொகுதி என யோசிக்க வேண்டாம். அங்கவர்களின் எண்ணிக்கையில் 50% தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்படும்; என்பது வேறு. ஆனால் ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களும் இந்தத் தொகுதிகளுக்குள் வேட்பாளர்களுக்குத்தான் வாக்களிக்கின்றார்கள். வேறுவிதமான வாக்குகள் இல்லை. எனவே இது 100% தொகுதிமுறைத் தேர்தலாகும்.
தொகுதிமுறைத் தேர்தலை நடாத்திவிட்டு அதனை 100% விகிதாசார முறையில் கணக்கிடுகின்றார்கள். இங்குதான் முஸ்லிம்களின் பிரச்சினை ஆரம்பாகின்றது.
முஸ்லிம் காங்கிரசிடம் ஓர் அன்பான பகிரங்க வேண்டுகோள்
————————————————————-
நீங்கள் பிழையான சட்டமூலத்துக்கு கையுயர்த்திவிட்டு தற்போது பிராயச்சித்தமாக பழையமுறையைக் கேட்கிறீர்கள். பழையமுறைக்கு அரசு ஒத்துக்கொண்டால் சந்தோசம். ஆனால் அவர்கள் பழையமுறை மாற்றப்பட வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இப்பொழுது இன்னுமொரு புதிய தேர்தல்முறையைக் கண்டுபிடிக்க, அல்லது இதைத் திருத்த 10பேர் கொண்ட ஒரு நிபுணர்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
அவர்கள் மீண்டும் ஒரு புதிய முறையைக் கண்டுபிடிக்க அதுவும் நமக்குப் பாதகமாக இருந்து அதனை நாம் எதிர்க்க, இந்த முஸ்லிம்கள் எல்லாவற்றையும் எதிர்க்கின்றார்கள்; என்று வெறுப்படைந்து மொத்தப் பேரினவாதமும் ஒற்றுமைப்பட்டுவிட்டால் நமதுநிலை மோசமாகிவிடும். சிலவேளை நீங்களும் அதற்கு சரண்டைந்துவிடலாம். அதன்பின் முஸ்லிம்கள் நடுரோட்டில்.
எனவே, இதற்கு நமது பக்கம் இருந்து நாம் ஒரு பொருத்தமான தீர்வை முன்வைக்க வேண்டும். கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் சட்டமூலத்துக்கு நீங்கள் கையுயர்த்திய பின்னராவது அதில் உள்ள சாதக பாதகங்களை நீங்கள் ஆராய்ந்திருந்தால் அதேதவறை இம்மாகாணசபை சட்டமூலத்தில் தவிர்த்திருக்கலாம்.
மாகாணசபைத் தேர்தலை ஒத்திப்போடுவதுதான் அப்போது அரசின் இலக்காக இருந்தது. அதற்கு நீங்கள் ஒரு மாற்று ஆலோசனையை முன்வைத்திருக்கலாம். துரதிஷ்டவசமாக சட்டமூலத்தில் என்ன இருந்தது; என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே கையுயர்த்தவேண்டிய நிலை உங்களுக்கு வந்துவிட்டது. அது இவ்வாறான விடயங்களில் உங்களின் அக்கறையீனத்தையே காட்டுகின்றது.
சமூகத்தின் பிரதானகட்சி என்கின்ற உங்கள் கட்சியில் இவ்வாறான விடயங்களைக் கையாள்வதற்கென்று ஒரு புத்திஜீவிகள் சபை இருக்கவேண்டும். அச்சபையும் நீங்களும் தேவையானபோது வெளியில் உள்ளவர்களுடமும் காத்திரமான கலந்தாலோசனைகளை செய்யவேண்டும். இவ்வாறான விடயங்களில் முன்னெச்சரிக்கையாக மாற்றுத்தீர்வுகள் நம்மிடம் இருக்கவேண்டும். சமுதாயத்தின் கட்சியென்று சொல்லிக்கொண்டு பாரதூரமான சமூக விடயங்களில் ஓர் விழிப்புணர்வற்ற கட்சியாக நீங்கள் இருந்தால் அது சமூகத்திற்கு செய்கின்ற பாவம்.
எனவே, இந்த இரட்டை வாக்கில் இருக்கின்ற பிரச்சினைக்கு என்ன தீர்வு என அவசரமாக யோசியுங்கள். சில தீர்வுகளை அந்த வெளிநாட்டு நிபுணர்களே முன்வைத்தார்கள். அதனை ஆராயுங்கள். அல்லது மாற்றுத்தீர்வுண்டா? என்பதைப் பற்றயாவது ஆராயுங்கள்.
We should not be reactive always. We should also be pro active at times.
எனவே, அவசரமாக செயல்படுங்கள். இது இன்றைய நிலையில் உங்கள்மீதுள்ள சமூகக் கடமை. இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளை எதிர்பார்க்க முடியாது. பானையில் இல்லாதது அகப்பையில் வராது. இவ்வாறான விடயங்களில் அவர்கள் பூச்சியத்தால் பெருக்கப்பட வேண்டியவர்கள்.
அவர்கள் அதனால்தான் இவ்வாறான விடயங்களில் உங்களின் நிலைப்பாட்டிற்குப் பின்னால் வருகிறார்கள். முடிவு நன்றாக வந்தால் பாராட்டில் அவர்களுக்கும் பங்கு. பிழைத்தால் ஏச்சுப்பேச்சு இருவருக்குமே! ஆனால் ஏசிவிட்டு மீண்டும் உங்களது கட்சிகளுக்குத்தான் வாக்களிப்பார்கள்; என்பது அவர்களுக்கும்தெரியும், உங்களுக்கும் தெரியும்.
மாகாணசபைத் தேர்தல் சட்டத்திற்கு கையுயர்த்தியதற்கு மக்கள் ஏசினார்கள். பின் என்ன செய்தார்கள்? சங்கு தப்பினால் கணபதி. ஏச்சுப் பேச்சிலும் பங்கு. வாக்கிலும் பங்கு. உண்மையில் பிரகடனப்படுத்தாத கூட்டமைப்பு பழியை பங்கிடுவதில் உங்களுக்குள் ஏற்கனவே இருக்கின்றது. பாவம் அப்பாவி மக்கள்தான் புரிந்துகொள்வதில்லை.
எனவே, பழியையும் வாக்கையும் பங்கிடுவதில் பூச்சியங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். ஆனால் சமூகத்திற்காக அவசரமாக செயற்படுங்கள்; என அன்பாக பகிரங்கமாக வேண்டுகிறேன்.
Post a Comment