Top News

விடுதலைப் புலிகள் பற்றிக் கதைக்காமல், வடக்கு அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியாது



எம்.றொசாந்த்


விடுதலைப் புலிகள் பற்றிக் கதைக்காமல், வடக்கு அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, “தேர்தல்களின் போது, விடுதலைப் புலிகளின் பாடல்களை பிரசாரக் கூட்டங்களில் ஒலிக்கவிடுவது, அவர்களைப் பற்றிப் பேசுவது, அவர்களின் நினைவுச் சின்னங்கள் தொடர்பில் பேசியே, அரசியல் செய்ய முடியும்” என்றார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (11) நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்ஷ, யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். 
“வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளைப் பெற்றுத் தருகின்றோம். வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருகின்றோமென அவர்களை முன்னேற்றும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். அது தொடர்பில் பேச மாட்டார்கள். வடக்கு மக்களை அபிவிருத்தி அடையாத மக்களாகவே வைத்திருக்க முயல்கின்றார்கள்“ என்றார்.
“இங்குள்ள அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வடக்கில் கல்வி கற்கவில்லை. அவர்களுக்கு வடக்குப் பற்றித் தெரியுமோ தெரியாது. பலர் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றார்கள்” என்று தெரிவித்த அவர், “இங்குள்ள அரசியல் தலைவர்கள் யாரும் வடக்கு மக்களை முன்னேற்ற வேண்டுமென முயற்சிப்பதில்லை. தமது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றுவதற்கு உழைக்கின்றார்கள்” என்றார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் வடக்கின் வசந்தம் எனும் பெயரில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால், இன்று வடக்கில் எந்தவிதமான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன?” எனக் கேள்வியெழுப்பிய நாமல் எம்.பி, “எந்தவிதமான அபிவிருத்தித் திட்டங்களையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை” என்றார்.
“நாங்கள் பயங்கரவாதிகளுடன் இணைந்து எந்தக் காலத்திலும் அரசியல் செய்தவர்கள் அல்லர்” என்று தெரிவித்த அவர், “இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு நாட்டின் இளைஞர்கள், யுவதிகளே உயிரிழக்கப் போகின்றனர். இந்த மக்களே மீண்டும் அவ்வாறானதொரு சூழல் உருவாக விடமுடியாது.
நாங்கள் எக்காலத்திலும் தீவிரவாதிகளுடன் இனைந்து அரசியல் செய்ததில்லை. அவர்களை நாங்கள் எப்போதும் ஆதரித்ததும் இல்லை. 
அதனால் தீவிரவாதிகளை நாம் ஏற்போது ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.
வடக்குக்கு அரசியல்வாதிகள் தான் போதைப்பொருட்களைக் கடத்தினார் என்ற குற்றசாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விஜயகலா மகேஸ்வரன், ரஞ்சன் ராமநாயக்கவுடன் அலைபேசியில் உரையாடும் போது, வடக்குக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளின் வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டகாவும், மஹிந்த ராஜபக்‌ஷ, பணம் கொடுக்க முற்பட்டதாகவும் கூறப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர்  எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 
“எந்த அரசியல்வாதிகளும் கடந்த ஆட்சிக் காலத்தில் போதைப்பொருட்களை கடத்தவில்லை. ஆனாலும், அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
“அதேவேளை, நாம் அவருக்குப் பணம் கொடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அவருக்குப் பணம் வழங்குவதாக எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை” என்றார்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களுக்குப் பொய்களைக் கூறியே, ஆட்சியமைத்தனர்” என்றார்.
மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்‌ஷவே அறிவிப்பார். அதுவரையிலும் பொறுமையாக இருக்குமாறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் தனக்கில்லை என்றும் நாமல்
ராஜபக்‌ஷ கூறினார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post