Top News

ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி முஸ்லிம் உம்மாவின் வெற்றியா ?


துருக்கியில் இடப்பெற்ற ஜனாதிபதித்துவ மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ரஜப் தையூப் அர்தோகன் மற்றும் அவர் தலைமை தாங்கும் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் கூட்டணி பெற்றுக்கொணட வெற்றி உள்நாட்டில் அதன் எதிர்கட்சிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட மகத்தான வெற்றியாக மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் தளங்களில் பெற்றுக்கொண்ட இரட்டை வரலாற்று வெற்றியாக வர்ணிக்கப்படுகின்றது .
துருக்கியில் இடப்பெற்ற ஜனாதிபதித்துவ தேர்தலில் ரஜப் தையூப் அர்தோகன் 52.3 வீத வாக்குகளை பெற்று துருக்கியின் முதல் உத்தியோகபூர்வ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பெரும்பான்மை மக்களினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதேவேளை அர்தோகனை தலைவராக கொண்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மற்றும் அதன் கூட்டணி 600 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 344 இடங்களை கைப்பற்றியுள்ளது இதன் மூலம் AK கட்சி துருக்கியில் பாரிய வரலாற்று வெற்றியை ஈட்டியுள்ளது என வர்ணிக்கப்படுகின்றது .
கடந்த ஏப்ரல் மாதம் 2017 ஆம் ஆண்டு துருக்கியின் யாப்பை மாற்றுவதற்கான மக்களின் அனுமதியை கோரும் மக்கள் கருத்துக்கணிப்பில் அர்தோகன் வெற்றிபெற்றதை தொடர்ந்து துருக்கியின் பாராளுமன்ற நிர்வாக முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ நிர்வாக முறை யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது அதை தொடர்ந்து இம்மாதம் கடந்த 24 ஆம் திகதி துருக்கியில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபத்திக்கான தேர்தல் இடம்பெற்றது இந்த தேர்தலில் எதிராணிகளின் ஐந்து வேட்பாளர்களையும் படுதோல்வியடைய செய்த அர்தோகான் சுமார் 52.3 வீத வாக்குகளை பெற்று மகத்தான வெற்றி பெற்றார்
இதன் மூலமாக பிரதமரை தலைவராக கொண்ட பாராளுமன்ற நிர்வாக முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தலைவராக கொண்ட அமைச்சரவை நாட்டின் அரசியல் நிர்வாகத்தை பொறுப்பேற்கும் , உருவாகும் இந்த புதிய அரசாங்கத்தினதும் ,அரசினதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராக அர்தோகான் உருவெடுப்பார் இவரே துருக்கியின் முப்படையை தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பவராகவும் , நாட்டின் வரவு செலவு திட்டத்தை கட்டுப்படுத்துபவராகவும் நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்டவராகவும் , பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் பெற்றவராகவும் , விளங்குவார் , இதேவேளை துருக்கியின் உள்நாட்டு ,வெளிநாட்டு கொள்கை வரைபும் இவரின் செறிவான செல்வாகிற்கு உட்பட்டதாகவே விளங்கும் பாராளுமன்றத்திலும் இவரின் கட்சி மற்றும் கூட்டணி பெரும்பான்மையை பெற்றுக்கொண்டதன் மூலமாக அங்கும் இவரின் செல்வாக்கு செறிவு மிக்கதாகவே இருக்கப்போகிறது , முஸ்தபான கமால் அதாதுர்க் உருவாக்கிய மொடன் துருக்கி 1923 க்கு பின்னர் சந்திக்கப்போகும் அதிகூடிய அதிகாரம் கொண்ட அரச தலைவராக இவர் இருக்கப்போகிறார் என இவர் பெறப்போகும் அதிகூடிய அதிகாரத்துக்கு சாதகமாகவும் ,பாதகமாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது, ஒரு சாரார் அர்தோகான் துருக்கியை சர்வாதிகாரம் நோக்கி உறுதியாக நகர்த்திச்செல்கிறார் என்று கூற மற்றுமொரு சாரார் இவர் துருக்கியின் அரசியல் ,பொருளாதார ,சமூக மற்றும் பாதுகாப்பு மீதான ”நிச்சயமற்றதன்மையை” வெற்றிகொள்ள போராடிவருகிறார் என கூறுகின்றனர்
மறுபுறத்தில் இஸ்லாமிய உலகு பெற்றுக்கொண்ட வெற்றியாக இவரின் வெற்றி வர்ணிக்கப்படுகின்றது பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களும், அமைப்புக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் அவரின் வெற்றியை துருக்கியின் வெற்றியாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவின் வெற்றியாகவும் வர்ணித்துள்ளன குறிப்பாக யூஸுப் அல் கர்ழாவி தலைமையிலான சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களுக்கான ஒன்றியம் துருக்கியின் வெற்றி எமது இஸ்லாமிய உம்மாவின் ஒரு வெற்றியாகும் என வர்ணித்துள்ளது .
இதேவேளை மலேஷியாவில் முன்னாள் துணை பிரதமரும் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல் பிரமுகருமான அன்வர் இப்ராஹிம் அர்தோகானின் வெற்றியை இஸ்லாமிய உலகின் வெற்றி என வர்ணித்துள்ளார் ,
இதேவேளை இடம்பெற்ற தேர்தல்களில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சிக்கு எதிராக உள்நாட்டு சக்திகளுக்கு மேலதிகமாக பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளினால் வலுவூட்டப்பட்டதாக நம்பப்படும் எதிர்க்கட்சிகள் களத்தில் கடுமையாக உழைத்தபோதும் அந்த எதிர்கட்சிகளினால் அர்தோகானை அல்லது நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை அல்லது அதன் கூட்டணியை தேற்கடிக்க முடியாது போயுள்ளது . அர்தோகானும் அவரின் கட்சியும் இம்முறை தோல்வியை சந்திப்பர் , இந்த தேர்தல்களில் துருக்கி இளம் வாக்காளர்களின் ஆதரவை அர்தோகான் இழந்துவிடுவார்போன்ற பிரசாரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில் அர்தோகானும் அவரின் கட்சியும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளன . இது பற்றி பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது
ஒரு சாரார் எதிர்கட்சிகளுக்கு துருக்கி ஊடகங்களில் போதுமான இடம் வழங்கப்படவில்லை குர்திஸ் தேசியவாத பின்புலம் கொண்ட கட்சிகளும் இன்னும் சில எதிர்கட்சிகளும் ஊடக அடக்குமுறையையும் ,அரசாங்க பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிகளை எதிர்கொண்டனர் மறுபுறத்தில் அரச ஊடகங்கள் முழுவதும் அர்தோகனுக்கும் அவரின் கட்சிக்கும் சார்பாக செயல்பட்டன மேலும் அர்தோகானும் அவரின் கட்சியினரும் மக்களிடம் இஸ்லாமிய உணவையும் ,உஸ்மானிய சாம்ராஜிய கனவையும் தூண்டி நலன்சார் அரசியல் சிந்தனைக்கு எதிராக அவர்களை சிந்திக்க தூண்டினர், போன்ற குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சியின் தேல்விக்கு காரணங்களாக சொல்லப்படுகிறது ஆனால் அவை அரசியல் கோணத்தில் அர்தோகனின் சாதனைகளுக்கு முன்னாள் மிக சிறிய தாக்கம் கொண்டதாகவே பொதுவாக பல அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகின்றது. இந்த வெற்றியை பற்றி கூறும் பைசல் காஸிம் போன்ற அரபுலக அரசியல் ஊடகவியலாளர்கள் இது அர்தோகனின் அரசியல் சாணக்கியத்துக்கும் அவரின் அரசியல், பொருளாதார சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி என வர்ணிக்கின்றனர்.
மற்றும் சிலர் இந்த வெற்றி எதிர்கட்சியினரின் பலவீனத்தால் ஏட்பட்டுள்ளது , துருக்கி எதிர்க்கட்சியினர் 16 ஆண்டுகள் துருக்கி அரசியலில் அதிகாரம் செலுத்தும் அர்தோகனை வீழ்த்துவதில் கருத்தியல் ரீதியாக ஒன்றுபட்டாலும் நடத்தை ரீதியாக தமக்குள் முறையாக ஒன்றிணைய வில்லை, கவர்ச்சிகரமான ஒரு அரசியல் ஆளுமையை வேட்பாளராக முன்வைக்க தவறியுள்ளனர் என தெரிவிக்கின்றனர் ஆனால் இதற்கு பதிலளிக்கும் பலரும் சிறந்த ஆளுமைகளை அவர்களின் சாதனைகளும் , சாணக்கியமுமே உருவாக்க முடியும் அப்படியான அரசியல் ஆளுமை கொண்டவர்தான் அர்தோகன் என கூறுகின்றனர் .
அர்தோகனின் வெற்றி பற்றியும் அவரின் எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றபோதிலும் , 90 வீதமான துருக்கிய வாக்காளர்களுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ள இந்த தேர்தலில் பெரும்பாலானவர்கள் அர்தோகனையும் AK கட்சியையும் தமது பெரும்பான்மை வாக்குகளினால் மீண்டும் தெரிவு செய்துள்ளதன் மூலமாக துருக்கி மக்கள் அரசியல் அதிகாரத்தை அவரிடம் வழங்குவதையே விருப்புகின்றார்கள் என்பதுதான் இன்றைய அரசியல் யதார்த்தமாகும்.
அரசியல் கோணத்தில் இவரின் வெற்றிக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துவதை மறுக்க முடியாது அந்த தாக்கம் செலுத்தும் காரணிகளை அர்தோகன் சரியாக விளங்கிக்கொண்டவராக துருக்கியை வழிநடத்துவதில்தான் அவரினதும், கட்சியினதும் தொடர் வெற்றி தங்கியிருக்கின்றது , அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அடைப்படை விழிமியங்களை விட்டுக்கொடுக்காத மாற்றங்களையும் பொருளாதார அபிவிருத்தியையும் சுமந்து செல்லவும், சவால்களை துணிவாக எதிர்கொள்ளவும் இளம் முஸ்லிம் சமூகத்திடம் இருக்கும் எதிர்பார்ப்பு முக்கிய ஒன்றாக அடையாளப்படுத்த முடியும் சில முக்கிய துருக்கி செயல்பாட்டாளர்களுடன் பேசும்போது அர்தோகன் தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு இதை தெளிவாக உணர்த்துவதாக உள்ளது.
இறுதியாக மலேஷியாவில் முக்கிய அரசியல் பிரமுகரும் கல்வியாளருமான அன்வர் இப்ராஹிம் அர்தோகனுக்கு எழுதியுள்ள வெற்றி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ள கருத்துக்கள் துருக்கிய மக்களிடம் மட்டுமல்ல பொதுவாக முஸ்லிம் உம்மா மத்தியில் அர்தோகன் பற்றி இருக்கும் எதிர்பார்ப்பை தெளிவாக காட்டுவதாக உள்ளது “I am also convinced that your victory is also a victory for the Islamic world in portraying a modern and progressive face of Islam that embraces change while not compromising on the values of our faith and the fundamental teachings of the Holy Prophet,”
மறுபுறத்தில் இந்த வெற்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சில முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு மீண்டும் பெரும் தலைவழியை ஏற்றபடுத்தியுள்ளது , மேற்குநாடுகளின் தலைவர்கள் பலருக்கு இந்த வெற்றி தமது நலன்சார் எதிர்பார்ப்புக்கள் மீதான தடைகளை அதிகரிக்கும் ஒன்றாக இருக்கும் என கருதுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது இந்த விடயங்களை உண்மையானதாக, யதார்தமானதாக எடுத்துக்கொண்டால் அர்தோகான் இலட்சியத்துக்கும் , நடைமுறைக்கும் மத்தியில் பயணிக்க வேண்டிய தூரம் நெடுந்தூரமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)- யினால் எழுதப்பட்டு எங்கள்தேசம் பத்திரிகையில் (ஜூன் ) வெளியான கட்டுரையின் இணைத்தளபதிப்பு.

Post a Comment

Previous Post Next Post