மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியின் 39வது உயர் தர மாணவர் தின நிகழ்வு கல்லூரி அதிபர் பி.எம்.எம். பதுறுத்தீன் தலைமையில் இன்று (16) திங்கட்கிழமை கல்லூரியின் அஷ்ரஃப் மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல். ஜவ்பர் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது அகில இலங்கை தமிழ் மொழித் தின பேச்சுப் போட்டியில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்ற இப்பாடசாலை மாணவி எஸ்.ஆர். றீனத் சதா பாராட்டி கௌரவிக்கப்பட்டு பிரதி அமைச்சர் ஹரீஸினால் பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பரீட்சையில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப, வர்த்தக மற்றும் கலைப் பிரிவு மாணவர்களில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் உரையாற்றுகையில் இவ்வரசில் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் செயற்பாடு தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் இப்பாடசாலையின் முகாமைத்துவ சபையின் விருப்புக்கமைவாக கல்முனைத் தொகுதியில் முதல் முதலாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியை பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் சிபாரிசு செய்து தேசிய பாடசாலையாக தரமுயர்தித் தருவதாக தெரிவித்தார்.
அத்தோடு அரசினால் முன்னெடுக்கப்படும் 'கம்பெரலிய' அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்து இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு மேலும் பங்களிப்புச் செய்வதாக குறிப்பிட்டார்.
Post a Comment