மக்கள் மனதை வெற்றிகொள்ளும் திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை காலை கிண்ணியாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஐக்கிய தேசிய கட்சி அடுத்த தேர்தலை இலக்காக கொள்ளாமல் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு செயலாற்றும் கட்சியாகும். இலவச கல்வி,மகாவலி அபிவிருத்தி முதல் விரைவில் எமது மாவட்டத்தில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம் வரை அனைத்தும் நீண்ட கால பயன் உள்ள நாட்டை நிலையான அபிவிருத்தி பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்களாகும்.
ஆனால் இந்த திட்டங்களால் மக்கள் மனதை வெல்ல முடியாது. கடந்த இருபது வருடங்களாக ஆட்சியில் இருந்த சுதந்திர கட்சி அரசால் முன்னெடுக்கப்பட அடுத்த தேர்தலை மட்டும் இலக்காக கொண்ட நிவாரனங்களையும், எதிர்கால சந்ததியை கடனில் தள்ளும் குறுகியகால திட்டங்களையும் பார்த்த மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் நீண்டகால திட்டங்களை புரிந்துகொள்ள முடியாதுள்ளது.
யார் எதை கூறினாலும் இதுவே எதார்த்தம். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியும் அடுத்த தேர்தலை இலக்காக கொண்ட திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டு.ம் இதை செய்ய தவறினால் எமது நீண்டகால திட்டங்களை முன்னெடுக்க நாம் ஆட்சியில் இருக்க முடியாது.
திருடர்களை பிடிக்கிறோம் என ஆட்சிக்கு வந்த நல்லாட்சியால் இதுவரை திருடர்களை பிடிக்க முடியவில்லை. சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதியாகவுள்ளதே இதற்கு பிரதான காரணம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே திருடர்களை பிடிக்கவில்லை என்பதுக்காக மீண்டும் திருடர்களிடமே நாட்டை ஒப்படைக்க முடியாது.
இப்போதுள்ள தலைவர்கள் அனைவரிலும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பது தெளிவாக தெரிகிறது ஆகவே இப்போது மக்கள் ஒரு புதிய தலைமைத்துவம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். அந்த தலைமைத்துவத்தை வழங்ககூடிய தகுதி ஐக்கிய தேசிய கட்சிக்கு மட்டுமே உள்ளது. ஏன் எனில் எமது கட்சியில் மட்டுமே இரண்டாம் நிலை தலைவர்கள் உள்ளனர். சஜித் பிரமேதாச, நவீன் திசாநாயக்க ,அகிலவிராஜ் காரியவசம், ஹரின் பெர்னாண்டோ என்ற இரண்டாம் நிலை தலைவர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.
ஆகவே மக்கள் எதிர்பார்க்கும் அந்த புதிய தலைமைத்துவத்தை நாங்கள் பல இலட்சம் மக்கள் மத்தியில் பாரிய பொதுக்கூட்டம் ஒன்றில் அறிவிப்போம். அந்த கூட்டம் இதுவரை ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் இழந்த அனைத்தையும் மீட்டு கொடுக்கும் பயணத்தின் ஆரம்பமாக அமையும்.
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடையை நாமே வழங்கினோம். ஆனால் இப்போது வருடத்துக்கு ஒரு சீருடை போதாது. வருடத்துக்கு இரண்டு சீருடையும் சப்பாத்து ஜோடியும் வழங்கப்படல் வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படல் வேண்டும். விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படல் வேண்டும்.
இருபது வருடங்களாக எதிர்கட்சியாக இருந்ததால் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டு கட்சி ஆதரவாளர்கள் பலர் இப்போது 45 வயதை தாண்டி விட்டனர். ஆகவே கட்சிக்காக பாடுபட்ட இவர்களுக்கு சுற்றுநிருபங்களை தாண்டி வேலை வழங்க வேண்டும். சமுர்த்தியை வழங்க வேண்டும்.
இந்த திட்டங்களை முன்னெடுத்தால் புதிய தலைமைத்துவத்துடன் நாம் அடுத்த தேர்தலில் இலகுவாக வெற்றிபெறலாம் என கூறினார்.
ஊடகப்பிரிவு
Post a Comment