Top News

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்ல காத்திருக்கும் 78 வயது கோடீஸ்வரர்!



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வேன் என்று கங்கணம் கட்டி இறங்கியுள்ளார் 78 வயதாகும் இந்தோனேசியாவின் மிகப் பெரும் பணக்காரரான மைக்கேல் பாம்பாங்க் ஹார்டனோ.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வரும் 18ம் தேதி துவங்க உள்ளது. இதில் பிரிட்ஜ் எனப்படும் சீட்டுக் கட்டு விளையாட்டுப் பிரிவில் இந்தோனேசியாவின் சார்பில் பங்கேற்கிறார் பிரபல தொழிலதிபரான மைக்கேல் பாம்பாங்க் ஹார்டனோ.
78 வயதாகும் இவர், உலகப் பணக்காரர்கள் வரிசையில் 75வது இடத்தில் உள்ளார். 2.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கொண்டுள்ள ஹார்டனோ, 6 வயதில் இருந்து பிரிட்ஜ் விளையாடி வருகிறார்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் வயதானவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால், மிகப் பெரும் பணக்காரர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
இதே பிரிட்ஜ் விளையாட்டில் பங்கேற்கும், 81 வயதாகும் மலேசியாவின் லீ ஹங் பாங்க்தான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிகவும் வயதானவர்.
பிரிட்ஜ் விளையாட்டை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று போராடியவர்களில் ஒருவரான ஹார்டனோ, தங்கத்தை வெல்வேன் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
தங்கம் வென்றால், இந்தோனேசிய அரசு வழங்கும், ரூ. 166.5 லட்சத்தை வீரர்கள் பயிற்சி திட்டத்துக்கு அளிக்க உள்ளதாகவும் அவர் தற்போதே அறிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post