பொன்றாது நிற்பதொன் றில்." திருக்குறள்
25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்து எமது குடும்பத்தினர் ஒருவர் , எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் மரணித்துவிட்டார் என்ற செய்தியை சொன்னார். காலையில் கேட்ட முதல் செய்தி , காதுகளில் ஊடாக எனது இதயத்தை துளைத்தது , அந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்ற கையறு நிலையில், மனசு சங்கடப்பட்டது.
சற்று நேரத்தில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் நேற்று ( 25/08/2018 ) யாழ் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உடல் அவரின் பிறந்த இடமான எருக்கலப்பிட்டியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என்ற செய்தி பரவியது. அனுதாபத் செய்திகள் வரத் தொடங்கின, அவருக்கும் எனக்குமிடையிலான தொடர்புகள் மிக நீண்டவை , அவருடனான சந்திப்புக்கள் , அளவளாவல்கள் பிரயாணங்கள் என ஒவ்வொன்றாக ஞாபகத்துக்கு வந்து என்னை மட்டுமல்ல எனது குடும்பத்தினரை கூட துயரத்தில் ஆழ்த்தியது.
பேராதனைப் பல்கலைக்கழக காலத்தில் பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் எனது முன்னாள் விரிவுரையாளர் , ஆனால் அவருக்கும் எனக்குமிடையிலான நெருக்கத்தைப் பொறுத்தவரை அவர் எமது குடும்ப நண்பர் , எனது நலனில் தனிப்பட்ட வகையில் ஒரு மூத்த சகோதரரைப்போல அக்கறைகொண்டவர். நேற்று முழுவதும் எனது கைகள் அவர் பற்றி எழுதும் வீரியத்தை இழந்திருந்தது.; எழுத மறுத்தது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் , மொத்தத்தில் எங்களின் குடும்பத்திற்கும் கூட இருந்த நட்பும் நெருக்கமும் பற்றிய நினைவுகள் எங்களின் அன்றைய பொழுதை சோகத்தில் ஆழ்த்தியது. மொத்தத்தில் , இலங்கை முஸ்லீம் சமூகத்திற்கு அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அதுபோலவே எனக்கும் தனிப்பட்ட வகையிழும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதே.!
பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த பொழுதும் பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் , எவ்வித பந்தாவுமில்லமல் மாணவர்களுடன் மிக நெருக்கமாக அன்புடனும் நட்புடனும் பழகியவர். பல வேளைகளில் அவர் மாணவர்களில் ஒருவர்போல அவர்களுடனே கலந்து காணப்படுவார். சுவாரசியமாகவும் , நாகரீகமாகவும் , இரட்டை அர்த்தத்துடன் பேசும் , பதவி இறுமாப்பும் நிறைந்த பல்கலைக்கழக ஆசான்களிடமிருந்தது இவர் வேறுபட்டு காணப்பட்டார். பல்கலைக்கழக விரிவுரையாளர் -மாணவர் உறவுக்கு , அவர் போலவே திகழ்ந்தவர் இன்னுமொரு விரிவுரையாளர் , காசிநாதர். (அவுஸ்திரேலியாவில் தற்பொழுது வசிப்பவர்). இவர்களைச் சுற்றி மாணவர்கள் கூட்டம் எப்பொழுதும் பல்கலைக்கழக வளாகத்தில் காணப்படும்.
சில வருடங்களின் பின்னர் தற்செயலாக நானும் அவரும் கண்டி-கொழும்பு செல்லும் தனியார் வாகனமொன்றில் சந்தித்தோம் , பலவற்றை பேசினோம். நான் அப்பொழுது திருமணம் முடித்திருந்தேன்.கண்டியில் நான் மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பட்டபின் டிப்ளோமா கற்கையினை மேற்கொண்டு அங்குள்ள ஆங்கில திணைக்களத்தில் இடம் பெறும் வகுப்புகளுக்காக வாரந்தோறும் கொழும்பில் இருந்து கண்டிக்கு பயணிக்க நேரிட்டது. அவ்வப்பொழுது பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் அவர்களை வளாகத்துக்குள் சந்திக்க நேரிட்டது. எமக்கிடையிலான தொடர்புகள் மீண்டும் துளிர் விட்டன.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆண்டு 1990. புலிகளின் முஸ்லீம் மக்கள் மீதான
தொடர்ச்சியான திட்டமிட்ட படுகொலையாட்டமும் இனச்சுத்திகரிப்பும் பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வையும் என்னையும் மீண்டும் இணைத்தது. பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகவும் தொழில் நிமித்தம் தவிர, நடைமுறையில் வாழ்விடமாகமும் கொண்டவர். அதுவரை காலமும் பல்கலைக் கழகமும் தனது குடும்பமும் என்றிருந்தவரை புலிகளின் வட மாகாண இனச் சுத்திகரிப்பு , வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்காக உரிமைக்கு குரல் எழுப்பும் பாரிய பணிக்குள் தள்ளியது. அதுவே அவரின் இறுதி மூச்சுவரையான பணியாகவும் இருந்திருக்கிறது. வடக்கில் இருந்து புலிகளால் வெளியேற்றபப்ட்ட முஸ்லீம் மக்கள் தொடர்பில், ஒரு கல்வியாளன் என்ற வகையில், பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் மிகப் பரந்துபட்ட கள ஆய்வுகளை மேற்கொண்டார். அது தொடர்பில் தொடர்ச்சியாக பல ஆய்வுக்கட்டுரைகளை பல சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் மன்றுகளிலும் சமர்ப்பித்தார். அவரின் ஆய்வுகள் ஆவணங்களாக நூல்களாக வெளிவந்தன.
எனது ஞாபகத்தில் உள்ள வரையில் பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் அவர்கள் , தனது ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பணத்துக்காக முதன் முதலில் இலண்டன் 1996, வந்த பொழுது எங்களின் வீட்டிலே தங்கினார். அதற்கு முன்னரும் அவர் ஓர் தடவை அவரின் பல்கலைக்கழக நண்பர் சட்டத்தரணி பராமலிங்கத்தின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். அவருடன் தங்கினார். அப்பொழுது என்னை அலுவலகத்தில் சந்தித்தார். அவர் முதன் முதலில் ஆய்வுக்கென வந்த பொழுது, அவரின் வட மாகாண முஸ்லிம்கள் பற்றிய நூல்களை தமிழ் இடதுசாரிகளும் , மிதவாதிகளும் வாசிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றினையும் ஒழுங்கு செய்தோம். அந்த நிகழ்வில் நண்பர் தமிழ் டைம்ஸ் சட்டத்தரணி ராஜநாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவ்வாறே புலம்பெயர் சமூகத்துக்குள் முதன் முதலில் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் அறிமுகம் செய்யப்பட்டார். மிக நிதானமாக , ஆதாரங்களுடன் தமது மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை அவர் விளக்கினார். பெருமளவில் யாழ்ப்பாண முஸ்லிம்களும் அதில் கலந்து கொண்டனர்.
2002 ஆம் ஆண்டு டொரோண்டோவில் (கனடா) தமிழ் நண்பர்கள் நடத்திய நிகழ்வொன்றிற்கு என்னை அழைத்திருந்தனர் அந்நிகழ்வில் தானும் கலந்து கொள்ளவிருப்பதாக எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் என்னிடம் அறிவித்திருந்தார். அங்கு அவரை மீண்டும் ஏதோ ஒரு விதத்தில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பில் கருத்துரையாற்றுவதில் இருவரும் பங்கு கொண்டோம். அந்நிகழ்வில் யாழ் முன்னாள் விரிவுரையாளர் , ராஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் பல தடவைகள் இலண்டன் வந்துள்ளார் ஆரம்ப காலங்களில் அவர் என்னுடனே தங்குவார். எங்களில் ஒருவராகவே அவரை நாங்கள் எப்பொழுதும் கருதினோம் . எனது அலுவலகத்துக்கு வந்து இலங்கை தொடர்பான எனது தனிப்பட்ட ஆவணத் தொகுப்புக்களை பார்க்க அவருக்கு ஒழுங்கு செய்து கொடுத்துள்ளேன். அவற்றில் சில ஆவணங்கள் தனது ஆய்வுக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எப்பொழுதும் சமூகம் பற்றிய விவகாரங்களில் என்னுடன் பல மணி நேரங்கள் பொறுமையாக கலந்துரையாடுவார். தனக்கு அங்கீகரிக்க முடியாத கருத்துக்களை எப்படி மறுதலிப்பாரோ , அவ்வாறே ஆரோக்கியமான அபிப்பிராயங்களை முழு மனதோடு வெளிப்படையாக அங்கீகரிப்பார்.
கொழும்பில் ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்களுக்கு வட மாகாண முஸ்லிம்களின் சகல இழப்புக்களையும் ஆவணமாக்கி , கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் கையளித்த நிகழ்விலும் என்னைக் கலந்து கொள்ளுமாறு அவர் அன்புடன் பணித்தார். அதுபோன்று அவருடன் இணைந்திருந்த நிகழ்வுகள் பரஸ்பரம் அவர் என்மீது கொண்டிருந்த அன்பின் அடையாளங்கள் , எனது பணிக்கான அவரின் அங்கீகாரங்கள் என நான் நினைக்கிறேன்.
பின்னாளில் அவரின் குடும்ப உறவினர்கள் சிலர் இலண்டனில் குடியேறிவிட்டதால் எங்களிடம் தங்காவிடினும் , வருபொழுதெல்லாம் தான் வருவது பற்றி முன் கூட்டியே அறிவிப்பார். எப்படியும் என்னை அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ சந்திக்காமல் நாடு திரும்பமாட்டார்.
புலிகள்- இலங்கை அரசு சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பொழுது. ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பங்காளிக் கட்சியாக , அரச தரப்பில் கலந்து கொண்ட பொழுது. முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முறையான முன்மொழிவுகள் , கருத்து பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும் என்பதில் பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் அவர்களுடன் நான் கலந்துரையாடினேன். அப்பொழுது அவர் இலண்டனில் இருந்தார். அப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள மிகத் தகுதியானவர்கள் சிலரில் அவரின் பங்களிப்பு அவசியம் என்று நான் கருதினேன். அது பற்றி அவரிடம் சிலாகித்த பொழுது , அவர்கள் ( ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ) அழைத்தால் , தனக்கு ஆட்சேபனை இல்லையென்று தெரிவித்தார். நான் தொலைபேசியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் , ஹக்கீமை தொடர்பு கொண்டேன், அங்கு பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் போன்ற கல்விமான்கள் செல்வது அவசியம் என்று கூறினேன். ஹக்கீம் உடன்பட்டார். பேராசிரியர் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் ஹக்கீமை சந்தித்தது பற்றி பற்றியும் , தானும் அக்குழுவில் தாய்லாந்தது செல்வது பற்றியும் குறிப்பிட்டார்.
அன்று தாய்லாந்து சென்றதும் எனக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்தார், சில விடயங்களை கருத்தில் கொள்ளுமாறும் , அதுபற்றி அங்கு முடியுமானால் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளுமாறும் தரவுகளுடனான ஒரு அறிக்கையை அவருக்கு அனுப்பினேன். அக்குழுவில் மூன்று முஸ்லீம் ஆலோசகர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் ஹஸ்புல்லாஹ் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கு புலிகள் தரப்பில் கலந்து கொண்ட அன்டன் பாலசிங்கமோ , மற்றும் ஒருவர் , ( எனது ஞாபகத்தின்படி அந்த நபர் புலிகளின் பொருளியற் துறைக்கு பொறுப்பான அவுஸ்திரேலிய பிரஜையான கலாநிதி மகேஸ்வரன் என்று நம்புகிறேன்) தங்களிடம் நட்பு ரீதியில் அணுகாமல் தங்களிடம் கடினமாக நடந்து கொள்கிறார்கள், அலட்சிய மனப்பாங்குடன் நடந்து கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார். அது தொடர்பில் இலண்டனிலில் உள்ள எங்கள் இருவருக்கும் தெரிந்த ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மூலம் ( மகேஸ்வரனுக்கு ) தெரியப்படுத்துவது நல்லது என்று தீர்மானித்து , நான் அவரைத் தொடர்பு கொண்டு அது பற்றித் தெரிவித்தேன் . அவ்வாறு அறிவித்த பின்னர் , சுமூக நிலைமை ஏற்பட்டதாக எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் பின்னர் குறிப்பிட்டார்.
ஆனால் அங்கு சென்ற பின்னர் , முஸ்லீம் அரசியல்வாதிகளின் இருள்மையை பற்றி அவர் எனக்கு பின்வருமாறு எழுதி இருந்தார்.
“I do not know whether we are already late in initiating our concern at the national level.. There is urgent need reviewing our involvement in the peace talk and need to put forward fresh initiatives within the peace process, if possible. Do you think that this can be done with Rauf Hakeem’s leadership? If not, do we have any other alternatives? Time is running fast and our issues are left out and may be it will be left out. Our politicians are in the dark in understanding the gravity of our problem”
அவரால் தொடர்ந்தும் அவர்களுடன் ஒரு தனி மனிதனாக ஆய்வாளராக , சமூக நிலவரங்கள் குறித்த ஆலோசகராக பயணிக்க முடியவில்லை என்பதால் , அவராகவே ஒதுங்கிக் கொண்டார்.
பின்னர் வடக்கு கிழக்கில் உடனடியாக தேவைப்பட்ட மனிதாபிமான புனர்வாழ்வு உதவிகளை கவனிக்கவென அமைக்கப்பட்ட “ஷிரான்” (SHIRN – Sub-committee on Immediate Humanitarian and Rehabilitation Needs) குழுவியிலும் அவர் அங்கத்துவம் வகித்தார். அந்த பணியில் அவர் தமிழ் செல்வனையும் சந்திக்க நேரிட்டது. கிழக்கில் முஸ்லிம்களின் காணி , வளங்கள் பகிர்வு ஆகியவை தொடர்பான ஆய்வு நிலைகளில் காணப்பட்ட குறைபாடுகளை அடையாளம் கண்டு கொண்ட அவர் கிழக்கில் ஆய்வுகளுக்கான தனது பணிகளை விஸ்தரித்தார். அதிலும் குறிப்பாக கள ஆய்வுகளுக்காக கிழக்கிலே கிராமம் கிராமமாக அவர் சென்றுள்ளார். அங்கு சந்தித்த மனிதர்களைப் பற்றியும் , அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் பற்றியும் என்னிடம் தொலைபேசி உரையாடல்களில் பகிர்ந்து கொள்வார். தகவல்களை சம்பந்தப்பட்டவரிடமிருந்து அவர் நேரடியாகவே பெறுவதன் மூலமான ஆய்வு அணுகுமுறையை அவர் பெரிதும் தேர்ந்தெடுத்தார்.
மேலும் நிலம் வளங்கள் பகிர்வு என்பனவும் இனப் பிரச்சினையின் அடிப்படைக் கூறுகளாக வடக்கு கிழக்கில் இருப்பதை “Addressing Root Causes of the Conflict: Land Problems In North –East Sri Lanka” என்ற ஆய்வு நூலில் யாழ் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை , மற்றும் கலிங்க டியூடர் சில்வா ஆகியோருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார்.
நானும் அவரும் ஒரு வெளிநாட்டு நிறுவன பிரதிநிகள் இருவருடனும் இலண்டன் வரதகுமாருடனும் புத்தளத்தில் வாழும் வட மாகாண முஸ்லிம்களை சந்திக்க சென்றிருந்தோம், அந்த பயணத்தில் ஹஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அந்த மக்களுக்குமிடையிலான தொடர்புகளை அவதானிக்க முடிந்தது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக செல்வாக்கு மிகுந்தவராக அவரை அன்று என்னால் காண முடிந்தது. அதனாலோ என்னவோ , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஹஸ்புல்லாஹ் அவர்களை சென்ற வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அழைத்திருந்தனர். அதன் பின்னரே அவர்கள் அஸ்மின் என்பவரை தேர்ந்தெடுத்து மன்னாரில் நிறுத்தினர். ஆனால் ஹஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுதலை மறுத்துவிட்டார். மேலும் அவருக்கு அரசியலில் நுழையும் எண்ணம் எப்பொழுதும் இருந்திருக்கவில்லை.
சென்ற ஜூன் மாதமும் அவர் இலண்டனுக்கு வந்து ஐந்து நாட்களில் திரும்பி விடுவதாக அறிவித்திருந்தார். இலண்டனில் எஸ்.ஓ எ .எஸ் (SOAS) பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு சார் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு சுவிஸ் சென்று அங்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இலண்டனில் நேரம் கிடைத்தால் தொலைபேசியில் அழைப்பதாக கூறியிருந்தார். முடியவில்லை என்றதும் சுவிஸில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழியில் வழியில் இலண்டன் வரும்பொழுது அழைப்பதாகவும் சுவிஸ்ஸில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆனால் அதுவும் இம்முறை நடக்கவில்லை , அவர் இலங்கை சென்றதும் இலண்டனில் வெளியிடப்படவுள்ள எனது "குருக்கள் மடத்துப் பையன்" நூல் பற்றி அறிவித்திருந்தேன். தனக்கு ஒரு பிரதி அனுப்புமாறு கோரி இருந்தார். ஆனால் அதெற்கெல்லாம் இப்பொழுது தேவை இல்லாமல் இல்லாமல் போய்விட்டது. முதன் முதலில் இலங்கையின் வட மாகாண முஸ்லீம் வெளியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அவரின் துறை சார் ஆய்வுப் பணிகள் , அதுவரையிலும் யாரும் செய்யாதவை. அதற்கீடாக யாரும் செய்யும் தேவையை அவசியமற்றதாக்கியவை . அரசியல் கொள்கை வயப்பட்ட சார்பு நிலை மனப்பாங்கின்றி காய்தல் உவத்தல் இன்றி ஒரு கண்டிப்பான கல்விசார் ஆய்வாளனான அவரின் ஆய்வுகள் உலகம் அங்கீகரித்தவை. அவரின் ஆய்வு ஆவணங்களின் நம்பகத்தன்மை , ஆராய்ச்சி முறை வரலாற்று மாணவர்களுக்கும் , பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கும் அவசியமானவை.அவரின் இழப்பு அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல , இலங்கை முஸ்லீம் சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பு என்றால் மிகையாகாது. ஓய்வின்றி சமூக பணிக்காக தனது துறைசார் அறிவை அர்ப்பணித்த அவரின் பணி மகத்தானது. அவை யாவும் அவரின் முகவரியாய் சாசுவதம் கொள்ளும்..
Post a Comment