கிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2019ஆம் ஆண்டுக்கான, வலையங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் இன்று (26) தெரிவித்தார்.
ஒரு வலயத்திலிருந்து இன்னொரு வலயத்துக்கு, தமது விருப்பத்தின் பேரில், இடமாற்றம்பெற விரும்புகின்ற ஆசிரியர்கள் தமது வலயத்துக்கென வலய இடமாற்ற அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்ற சேவைக் காலத்துக்கு அதிகமாக கடமைபுரிகின்ற ஆசிரியர்கள் முதல் நியமன வலயத்தில் நியமனக் கடிதத்தின்படி கட்டாய சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள்; நியமனக் கடிதத்தில், கட்டாய சேவைக் காலம் குறிப்பிட்டிருக்காவிட்டால், முதல் நியமனத்திலிருந்து, ஐந்து ஆண்டுகால சேவையை அவ்வலயத்தில் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் ஆகியோர், இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சுற்றுநிரூபம், மாகாணத்திலுள்ள சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் கூறினார்.
ஆசிரியர் மேலதிகமாகவுள்ள வலயங்களிலிருந்து, ஆசிரியர் பற்றாக்குறையான வலையங்களுக்கு தேவைக்கேற்ப ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டுமெனவும், அடிப்படையில் ஒரு வலயத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக ஆசிரியர்கள் ஒரு பாடப்பரப்பில் காணப்பட்டால், அவ்வாறான மேலதிக ஆசிரியர்களின் விவரங்களை, பாட ரீதியாக வலய கல்விப் பணிப்பாளர்கள் பதிவுத் தபால் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்கின்ற ஆசிரியர்கள், தத்தமது வலய கல்வி அலுவலகத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
01.01.2019ஆம் ஆண்டிலிருந்து செயற்படுமாறு பணிக்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள் அனைத்தும், 01.01.2019ஆம் திகதியிலிருந்து செயற்படும் விதமாக இடமாற்றக் கடிதங்கள், 01.11.2018ஆம் திகதியிலிருந்து அனுப்பி வைக்கப்படுமெனவும், அவர் கூறினார்.
இடமாற்ற விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர், கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறும் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் கேட்டுள்ளார்.
Post a Comment