Top News

கல்முனையில் நவீன கூட்டுறவுக் கிராமிய வங்கி - எச்.எம்.எம். ஹரீஸ் ஆரம்பித்துவைப்பு



அகமட் எஸ். முகைடீன்

கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நவீன கூட்டுறவுக் கிராமிய வங்கி திறப்பு விழா கூட்டுறவுச் சங்க தலைவர் ஏ.எம். ஹனீபா தலைமையில் இன்று (16) வியாழக்கிழமை கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நவீன கூட்டுறவுக் கிராமிய வங்கி அலுவலகத்தை திறந்துவைத்து வங்கி நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.எம். ஜூனைடீன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிசார், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்முனை கூட்டுறவு பொதுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

கல்முனை கூட்டுறவுக் கிராமிய வங்கியானது 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறுவப்பட்டு செயற்பட்டுவந்தது. அவ்வங்கியினை தற்கால யுகத்திற்கு ஏற்றவகையில் நவீன மயப்படுத்தப்பட்டு புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

இதன்போது கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக குறித்த சங்க வளாகத்தில் கல்முனை நகருக்கான வாகன தரிப்பிடம் மற்றும் கூட்டுறவுச் சங்கத்திற்கான பல்தேவைக் கட்டடம் போன்றவற்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை பிரதி அமைச்சர் மேற்கொள்வதாக தெரிவித்தார்.  

அதற்கமைவாக குறித்த நிகழ்வைத் தொடர்ந்து கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்தை பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் றகீப் ஆகியோர் பார்வையிட்டனர். 

Post a Comment

Previous Post Next Post