Top News

திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் இரு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்படல் வேண்டும்




ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கிழக்கைச் சேர்ந்த சில உயர்பீட உறுப்பினர்களின் சந்திப்பின் போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டை கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது அல்லது நிந்தவூரில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலி  தெரிவித்தார்.
அவர் மேலும் தனது  கருத்தில்  புதியதோ அல்லது பழையதோ,   தேர்தல் என்ன முறையில் நடைபெறுவதாக இருந்தாலும் இன்றைய காலத்துக்கான தேவையின் அடிப்படையில்  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தினை கல்முனை தேர்தல் மாவட்டமாகவும், அம்பாறை தேர்தல் மாவட்டமாகவும் இரு தேர்தல் மாவட்டங்களாக அரசு பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு முன்வைக்கிறது. ஏனென்றால் அம்பாறை நிர்வாக மாவட்டமும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டமும். தற்போது ஒரே எல்லையினையே கொண்டிருக்கிறது, அதாவது ஒரே எல்லையைக் கொண்ட ஒரு பிரதேசம் இரு பெயர்களால் அழைக்கப்படுகிறது எனலாம்.  அத்துடன் இப்பிரதேசத்தில்  ஒரு வீதம் கூட  தமிழ் பேசும் மக்கள் இல்லாத நிலையில்  தேர்தல் வாக்கெடுப்பின் போது ஏனைய பிரதேச தமிழ் பேசும் மக்களது வாக்குகளுடன் அம்பாறை தொகுதி வாக்குகளும்  சேர்த்து ஒன்றாக கணிப்பிடப்படுவது தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் அல்லது உரிமை இங்கு இல்லாமல் போகிறது, இதே நிலைதான் திருகோணமலை மாவட்டத்திலும் காணப்படுகிறது.
தமிழ் பேசும் மக்களின் தேர்தல் தொகுதிகளான கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 720  சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு  அம்பாறை தொகுதியுடன் இணைக்கப்பட்டதோடு,  தமிழ் பேசும் மக்களின் விகிதாசார அளவினை குறைக்க ஏனைய பிரதேசங்களில் இருந்து கொண்டு வந்து சேர்க்கப்பட்ட நிலப்பரப்புகளாலும், திட்டமிட்ட பெரும்பான்மை குடியேற்றங்களாலும் பாரியதொரு பின்னடைவு இம்மாவட்டங்களில்   தமிழ் பேசும் சமூகங்களுக்கு  ஏற்பட்டுள்ளது எனலாம்.   இதனை நிவர்த்தி செய்ய சில மாவட்டங்கள் தேர்தலுக்காக இரண்டு அல்லது மூன்று   மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கணிப்பீடுகள் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகின்றது.
அதாவது ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்டமானது கிளிநொச்சி தேர்தல் மாவட்டமாகவும், யாழ் தேர்தல் மாவட்டமாகவும் இரு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு வாக்குகள் தனித்தனியாக கணக்கெடுக்கப்படுகிறது. அதே போல் வன்னி மாவட்டமானது மன்னார்  தேர்தல் மாவட்டமாகவும், வவுனியா தேர்தல் மாவட்டமாகவும், முல்லைத்தீவு தேர்தல் மாவட்டமாகவும் மூன்று தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு வாக்குகள் தனித்தனியாக கணக்கெடுக்கப்படுகிறது. இதனைப் போன்று திகாமடுல்ல மாவட்டத்தினையும் கல்முனை தேர்தல் மாவட்டமாகவும், அம்பாறை தேர்தல் மாவட்டமாகவும் இரு தேர்தல் மாவட்டங்களாக அரசு பிரித்துத்தர வேண்டுமென, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கோரிக்கையினை முன்வைக்கிறது, இந்நியாயமான கோரிக்கையினை இம்மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க அரசு அவன   செய்ய  வேண்டும் என்றார்.

.எம்.ஹாரிப்
பிரச்சாரச் செயலாளர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

Post a Comment

Previous Post Next Post