அரசியல் களநிலைமை ஸ்திரமற்ற தன்மையை அடைந்துள்ள நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எதிர்கால அரசியல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்திவருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இதுவரை நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாகவும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மைக் கட்சிகள் வெற்றி இலக்கை எய்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் அவர்கள் பொதுஜனபெரமுன மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இக்கருத்தினை வெளியிட்டார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்த அமைச்சர் பைசர் முஸ்தபாவே எதிர்த்து வாக்களித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதுடன் அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.
சபாநாயகர் தற்போது எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக மேன்முறையீட்டு குழுவொன்றினை பிரதமர் தலைமையில் நியமித்துள்ளார். இவ்வாறான குழுக்களில் எமக்கு நம்பிக்கையில்லை. மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதப்படுத்துவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றே நாம் கோருகின்றோம்.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் தற்போதைய அரசாங்கம் ஸ்திரமற்றது. நிச்சயம் மாற்றம் ஒன்று நிகழவுள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்திருக்கிறார்கள். அரசாங்கம் மாறினால் அவர்களது ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும் என அச்சமுற்றுள்ளார்கள். இதனாலே அவர்கள் மாற்று வழியைத் தேடுகிறார்கள்.
முஸ்லிம் அமைச்சர்கள் சிலரின் முன்னாள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை இரகசியமாகவே நடைபெறுகின்றன. தேவையான சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என்றார்.
-Vidivelli