Top News

செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் ஒலுவில் மக்கள்


ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய் விட்டது. கடல் அரிப்பினால் ஒலுவில் கடற்கரை கிட்டத்தட்ட மறைந்தே போய்விட்டது.
இதனால் அங்கு மீன்பிடித் தொழில் செய்வதில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. கடலரிப்பை தடுப்பதற்காக கடலின் உள்ளேயும், கரையிலும் பெரிய பாராங்கற்கள் போடப்பட்டுள்ளதால், மீனவர்களின் தோணிகள் கடலுக்குள் சென்றுவருவதிலும், மீன்பிடிக்க கடலுக்குள் வலைகளை விரிப்பதிலும் கடும் சவால்கள் உருவாகியுள்ளன.
தங்கள் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்றை நிறுவிய பின்னர்தான், இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக, ஒலுவில் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசம் அமைந்துள்ளது. நெல் பயிரிடுதல், மீன்பிடித்தல் இரண்டும் இங்குள்ள மக்களின் பிரதான தொழில்களாகும்.
1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம், அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சர் எம். எச். எம். அஷ்ரப், ஒலுவில் துறைமுகத்தை அறிவித்தார்.
ஒலுவில் துறைமுகத்தை கட்டியமைக்க 46.1 மில்லியன் யூரோவை வட்டியில்லாக் கடனாக டென்மார்க் அரசு இலங்கைக்கு வழங்கியது.
செயல்படாத ஒலுவில் துறைமுகம்: கடலரிப்பாலும், தொழில் பாதிப்பாலும் அவதிப்படும் மக்கள்
இந்தக் கடன் தொகை இலங்கை நாணயத்தின் இன்றைய மதிப்பில் சுமார் 855 கோடி ரூபாயாகும். துறைமுகம் செயற்படத் தொடங்கி 6ம் மாதத்திலிருந்து 10 வருடங்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
ஒலுவில் துறைமுக வளாகத்திற்குள் வர்த்தகம் மற்றும் மீன்பிடி தேவைகளுக்கென இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலுவில் துறைமுகம் 2013ம் ஆண்டு அதிகாரபூர்வமாக, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் துறைமுகத்தை அமைக்க பொது மக்களுக்குச் சொந்தமான சுமார் 125 ஏக்கர் பரப்பளவுள்ள காணிகள் கையகப்படுத்தப்பட்டன.
இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட காணி உரிமையாளர்களில் சிலருக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதாதென்று கூறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதும், அங்குள்ள வர்த்தகத் துறைமுகம் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை.
மீன்பிடித் துறைமுகம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்தபோதும், அதன் நுழைவுப் பாதையை அடிக்கடி மண் மூடிவிடுவதால், அங்கு தங்கி நிற்கும் படகுகள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, மீனவர்களுக்கு பல மாத காலங்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதுண்டு.
மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவுப் பாதையை மூடுகின்ற மண்ணை அகற்றுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், அவை வெற்றியளிக்கவில்லை.
செயல்படாத ஒலுவில் துறைமுகம்: கடலரிப்பாலும், தொழில் பாதிப்பாலும் அவதிப்படும் மக்கள்
மண்ணை அகற்றிய சில வாரங்களில் மீண்டும் இந்த படகுப் பாதையை மண் மூடிக்கொள்ளும். இதனால், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட அதிகமான படகுகள், அருகிலுள்ள வர்த்தகத் துறைமுகத்தில் தங்கி நின்று கடலுக்குச் சென்று வருகின்றன.
வர்த்தகத் துறைமுத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும், அங்கு படகுகளில் பொருட்களை ஏற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீன்களை இறக்குவதற்கும் உரிய வசதிகள் இல்லை என்பதால், வர்த்தகத் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதில், கஷ்டங்களை எதிர்கொள்ளவதாக, அங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, வர்த்தகத் துறைமுகம் இயங்காததால், ஆங்காங்கே புற்களும் பற்றைகளும் முளைத்துக் காணப்படுகின்றன.
அங்குள்ள சில கட்டடங்கள் பயன்படுத்தப்படாமலேயே சேதமடைந்துள்ளன. கடலிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பெருமளவவான மண், இதுவரையில் அகற்றப்படாமல், வர்த்தகத் துறைமுக வளாகத்தினுள் மலைபோல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒலுவில் வர்த்தகத் துறைமுகத்துக்கு இதுவரையில் ஒரு கப்பல்கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் துறைகமுகம் அமைக்கப்பட்டதிலிருந்து ஒலுவில் பிரதேசத்தில் பெரும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒலுவில் மீனவர் அமைப்பின் தலைவர் ஏ.எல். பௌஸ்தீன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்தக் கடலரிப்பு காரணமாக 150 மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை கடல் உள்வாங்கியுள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
மேலும், கடற்கரையின் அருகிலுள்ள பொதுமக்களின் காணிகளில் நின்றிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் கடலரிப்பினால் அழிந்துவிட்டதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பி.பிசி தமிழ்

Post a Comment

Previous Post Next Post