ஜனாதிபதி செயலாளரின் பதிவேட்டுக்கமைய அமைச்சர் ஒருவரின் பயன்பாட்டுக்கும் அவரது பாதுகாப்புக்குமாக கூடிய பட்சம் மூன்று வாகனங்களே வைத்திருக்க வேண்டிய நிலையில் அதனைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேலதிகமாக ஏழு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக சிங்களப் பத்திரிகை ஒன்று நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் குறித்த தகவல் பிழையானது எனவும் அமைச்சருக்கு 5 வாகனங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் நிருவாகச் செயலாளர் ரீ.டி.எஸ்.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த சிங்களப் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், தகவல் அறியும் சட்ட மூலத்திற்கமைய கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் பாவனையிலுள்ள வாகனங்கள் குறித்து தகவல் பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி விண்ணப்பித்ததற்கிணங்க மேற்படி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (நிர்வாகம்) ரீ.டி.பி.எஸ்.பெரேரா கையொப்பமிட்டு தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளரின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இலக்கம் சீஏ 1/17/1 மற்றும் 2010.05.14 ஆம் திகதி கொண்ட அரச செலவின முகாமைத்துவ பதிவேட்டு மூன்றாம் இலக்க உறுப்புரை மறுசீரமைப்புக்கமைய அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்களின் பாவனைக்கும் பாதுகாப்புக்குமாக கூடிய பட்சம் மூன்று வாகனங்களே உத்தியோகபூர்வமாக வைத்திருக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கம் சீஎஸ்ஏ/1/5 மற்றும் 2016.04.19 ஆம் திகதிய பதிவேட்டின்படி மேற்குறிப்பிடப்பட்டவாறு அரசாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகப் பதியப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கும் நிலையில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் கைத்தொழில், வாணிப அமைச்சருக்கு 10 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டமூலத்தினூடாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது. அத்துடன் கைத்தொழில், வாணிப அமைச்சருக்கு எட்டு சாரதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி அமைச்சில் மொத்தமாக 23 வாகனங்கள் உள்ளதுடன் மேலும் 16 வாகனங்கள் அமைச்சின் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் வாகனங்களில் இரண்டு வழிநடத்தல் செயற்பாட்டு முறைமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளனவாகும்.
அமைச்சிடம் மொத்தமாக உள்ள வாகனங்களில் 9 வாகனங்களுக்கு சாரதிகள் இல்லாததுடன் உத்தியோகபூர்வமாக வாகனம் வைத்திருக்க வேண்டிய அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 16 வாகனங்களில் இரண்டுக்கு கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளுக்குரிய சாரதிகளே அமர்த்தப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு உரிமையற்ற இரு வாகனங்களுக்கும் அமர்த்தப்பட்டுள்ள சாரதிகள் மற்றும் பிரதேச சாரதிகள் எட்டுப் பேருடன் அமைச்சில் மொத்தம் 28 சாரதிகள் உள்ளனர்.
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சில் 2015 ஆம் ஆண்டுக்குரிய எரிபொருள் செலவாக இரண்டு கோடியே ஐம்பத்தொரு இலட்சம் ரூபாவாகியுள்ளதுடன், அதே ஆண்டின் வாகனங்களுக்கான பாவனைச் செலவாக மூன்று கோடியே ஐம்பத்தைந்து இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் எரிபொருள் செலவு ஒரு கோடியே எழுபத்தொரு இலட்சம் ரூபாவாகும். அவ்வாண்டின் வாகனப் பராமரிப்புக்கான செலவு மூன்று கோடியே முப்பத்தெட்டு இலட்சம் ரூபாவாகும்.
2017 ஆம் ஆண்டின் எரிபொருளுக்காக ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான பராமரிப்பு மூன்று கோடியே எழுபத்தெட்டு இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் சட்டமூலத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.
அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களிடையே சீ.ஏ.வீ, சீ.ஏ.ஈ, பி.எப், பி.எச், கே.வை, கே.ஜீ ஆகிய ஆங்கில எழுத்துக்களுடன் ஆரம்பிக்கும் இலக்கங்களுடைய வாகனங்களும் அடங்குகின்றன.
சீஏ/1/17/1 அரச செலவீன பதிவேட்டின்படி அமைச்சர் ஒருவரின் பெற்றோல் வாகனம் ஒன்றிற்கு உயர்ந்தபட்ச எரிபொருளுக்கான மாதாந்த கொடுப்பனவாக, மேல்மாகாணம் எனின் 600 லீட்டரும், மேல் மாகாணத்திற்கு வெளியேயாயின் 750 லீட்டரும் வழங்கப்படுகின்றன. டீசல் வாகனமாயின் மேல் மாகாணத்திற்குள் 500 லீட்டரும், மேல் மாகாணத்திற்கு வெளியேயாயின் 600 லீட்டரும் வழங்கப்படுகின்றன.
மேற்கண்ட தகவல்கள் குறித்து கைத்தொழில், வாணிப அமைச்சருடன் இணைப்பை ஏற்படுத்தியபோதிலும் தொடர்புகொள்ள கிடைக்கவில்லை. அமைச்சின் செயலாளர் கே.டீ.என்.ஆர்.அசோக்கா என்பவருடன் இது விடயமாக வினவியபோது நிர்வாக மேலதிகச் செயலாளரே இது தொடர்பான பணிகளைக் கையாள்வதாகவும் அவரைத் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் கூறினார். எவ்வாறான போதிலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் நிர்வாக மேலதிகச் செயலாளர் ரீ.டி.பி.எஸ்.பெரேராவே கையொப்பமிட்டுள்ளார் என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இச் செய்தி வெளியான நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சின் நிருவாகச் செயலாளர் ரீ.டி.எஸ்.பி.பெரேரா, குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான கோரிக்கைக்கு வழங்கப்பட்ட பதிலில் 10 வாகனங்கள் எனக் குறிப்பிட்டுள்ளமை தவறானதாகும். அவற்றில் 5 வாகனங்கள் அமைச்சரின் உதவி செயற்பாட்டு சபைக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்தரங்கச் செயலாளர், இணைப்புச் செயலாளர், இணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பதிகாரி ஆகியோருக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அமைச்சரின் நிர்வாக பிரதேசத்திற்குள் வடக்கு கிழக்கு பகுதிகளும் உள்ளடங்குவதுடன் அவற்றுக்கு மேலதிகமாக 2 வாகனங்கள் அமர்த்தப்பட்டுள்ளன. அவ் வாகனங்களுக்கான சாரதிகளும் எரிபொருள் விநியோகங்களும் அமைச்சினால் வழங்கப்படுவதில்லை என்றும் அமைச்சின் நிருவாகச் செயலாளர் ரீ.டி.எஸ்.பி.பெரேரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment