அகமட் எஸ். முகைடீன்
அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் கல்முனை பிரதேச அபிவிருத்திக்கு வரும் தடைகளை உடைத்தெறிந்து தமிழ் முஸ்லிம் மக்கள் பயனடையும் வகையில் அபிவிருத்தி பயணத்தை தொடர்வதற்கு உறுதி பூண்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நவீன கூட்டுறவுக் கிராமிய வங்கி திறப்பு விழா கூட்டுறவுச் சங்க தலைவர் ஏ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கல்முனை மாநகர சபைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கிட்டத்தட்ட 1900 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்து வருமானம் ஈட்டும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்குமாறு கூறியுள்ளது. அந்நிதியின் மூலமும் கல்முனை மாநகரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அந்தவகையில் கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் பாரிய அளவிலான பல் தேவைக் கட்டடம் மற்றும் கல்முனை நகருக்கான வாகனத் தரிப்பிடம் போன்றவற்றை அமைப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். இதனால் இப்பிரதேச இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுமென எதிர்பார்க்கின்றோம்.
அவ்வாறே நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலும் கல்முனை நகரத்தின் அடிப்படைத் தேவையாக உள்ள சில அபிவிருத்திப் பணிகளை செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றோம்.
5 மாடிகளைக் கொண்ட கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டடம், பஸ் நிலையத்திற்கு அருகாமையில் கல்முனை பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடம், பாரியளவிலான நவீன பஸ் நிலையம், கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் பாரிய பல் தேவைக் கட்டடம், அதன் பின்புறமாக உள்ள குளத்தை அழகுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை தமிழ் முஸ்லிம் என்ற பேதமில்லாமல் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இருந்தபோதிலும் இவ்வாறான மக்கள் நலன் சார் அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது பல இடர்பாடுகள், தடைகளை சந்திக்கின்ற நிலமை இப்பிரதேசத்தில் காணப்படுகிறது. கல்முனைக்குள்ள பெரும் சவால் நகரத்தினுடைய ஆள்புல அடையாளம் என்கின்ற இறைமை தன்னாதிக்கத்தை பாதுகாப்பதாகும். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இல்லாத ஒரு சவாலாக இது காணப்படுகிறது.
இப்பிரதேச மக்கள் விரும்பும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆசையுடனும் பெரும் கனவுடனும் செயற்படுத்த முற்படுகின்றபோது அதற்கு தடையாக குறுக்கே வந்து நிற்கின்றனர். அண்மையில் இஸ்லாமாபாத் பிரதேசத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் கிழக்கு மாகாண தலமைக் காரியாலயத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் பலாத்காரமாக சென்று அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டத்தை செய்திருந்ததாக அறிகின்றேன். அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் இப்பிரதேசத்திற்கு வருவதனால் பயனடையப்போவது தமிழ் முஸ்லிம் மக்கள் தான் என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ வேண்டும், அதற்கமைவாக தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுவான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் விளைகின்றோம், ஆனால் அவற்றுக்கு முட்டுக்கட்டை போட அவர்கள் முனைவது கவலையான விடயமாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது தந்த வாக்குறுதிக்கமைவாக கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் ஆட்சிக்கு வந்த உடனேயே நகர திட்டமிடல் அமைச்சினையும் நிதியினையும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கியிருந்தார்.
அத்திட்டத்தை தமிழ் முஸ்லிம் மக்கள் பயனடையும் வகையில் பொதுவானதாக மேற்கொள்ள முனைகின்றபோது ஒரு இஞ்சி நிலத்தையும் நிறப்ப விடமாட்டோம் என தமிழ் தலைவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறுகின்றபோது தனி முஸ்லிம் பிரதேசங்களில் அந்நிதிகளைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பாட்டால் பாதிக்கப்படுவது தமிழ் இளைஞர்களேயாகும்.
நவீன வாசிகசாலை, விளையாட்டு மைதானம் என்பன 100 வீதம் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் அகை;கப்படும்போது தமிழ் இளைஞர்கள் அவற்றை நாடிச் செல்வார்களா?, இதனால் ஏற்படும் பழியை தமிழ் தலைவர்கள் தான் சுமக்க வேண்டும்.
பாரிய அபிவிருத்தி திட்டங்களை கல்முனையில் முன்னெடுப்பதற்கு நிலப்பிரச்சினை காணப்படுகிறது. எனவே அதற்கு தேவையான நிலங்களை நிரப்பி எடுக்க முனைகின்றபோது தடுக்கின்ற சக்திகளாக இவர்கள் இருக்கின்றார்கள். இப்பிரதேசத்தில் மட்டும்தான் இந்த சூழல் காணப்படுகிறது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் மக்கள் காணிகளைக் கொடுத்து அபிவிருத்தி செய்யவில்லையா?, அங்கெல்லாம் கடலை நிறப்பியா கட்டடம் கட்டுகின்றார்கள் பொது மக்கள் மற்றும் அரச காணிகளை பெற்றுத்தான் அங்கு அபிவிருத்தி நடைபெறுகின்றது. ஆனால் கல்முனை மட்டும் கேவலமாக நடந்து கொள்கின்றனர்.
இவ்வாறான விடயம் இந்த மண்ணில் தொடர்ந்தும் அரங்கேர விடமுடியாது. மிகவும் சட்ட ரீதியான ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனக்குரித்தான பல அதிகாரங்கள் இருக்கின்றபோது எங்களுக்கு இன்று சவால் விடுக்கின்ற நிலமையில் இவர்கள் மாறிவருகின்றார்கள், என்னைப் பொறுத்த மட்டில் எனக்கென்று கொள்கை உள்ளது, வாக்களித்த மக்களுக்கு அநியாயம் செய்ய முடியாது.
பதவிகள், அரசியல் எதிர்காலம் என்பவற்றை சிந்திக்காமல் மக்கள் நலனை மட்டும் முன்னுறுத்தி செயல்படுபவன், அந்தவகையில் இப்பிரதேச மக்கள் விரும்புகின்ற அபிவிருத்திக்காகவும் தமிழ் முஸ்லிம் மக்களுடைய ஐக்கியத்திற்காகவும் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து இந்த அபிவிருத்தி பயணத்தை தொடர்வதற்கு நாம் உறுதி பூண்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
Post a Comment