அகமட் எஸ். முகைடீன்
அரச பாடசாலைகளில் சமய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தின் உச்ச வயதெல்லை 35 ஆக காணப்படுவதை 45 வயதாக அதிகரிக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு மேற்படி விடயம் தொடர்பாக எழுத்து மூலம் அனுப்பியுள்ள கோரிக்கையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் அனுப்பியுள்ள அக்கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கோரப்பட்டுள்ள மேற்படி நியமனத்திற்கான உச்ச வயதெல்லை 35 ஆக இருப்பதனால் பெருமளவிலான திறமையான உலமாக்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கிடையில் கோரப்படும் நியமனமாக காணப்படுமேயானால் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள உச்ச வயதெல்லை பொருத்தமானதாக அமையும், அவ்வாறில்லாமால் நீண்ட இடைவெளியின் பின்னர் கோரப்படும் விண்ணப்பத்திற்கு அவ்வயதெல்லை ஏற்புடையதாக அமையாது. ஏனெனில் அதிகமான மௌலவிமார் தாம் மௌலவி கற்கை நெறியை பூர்த்தி செய்து வெளியேறிய காலப்பகுதியில் அந்நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படாமையினால் இன்று குறித்த உச்சவயதை தாண்டியவர்களாக காணப்படுகின்றனர்.
அதுமட்டுமன்றி நீண்ட இடைவெளியின் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு இறுதியாக வழங்கப்பட்ட சமய ஆசிரியர் நியமனத்தின்போது தகுதிபெற்ற பல மௌலவிமார்கள் இருந்தபோதும் குறைந்த அளவிலானவர்களுக்கே நேர்முகப் பரீட்சைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். அன்று உள்வாங்கப்படாத அம்மௌலவிமார்கள் இன்று உச்ச வயதெல்லையை தாண்டியவர்களாக காணப்படுகின்றனர். எனவே இவ்வாறானவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் தற்போது கோரப்பட்டுள்ள உச்ச வயதெல்லையினை அதிகரிக்கவேண்டிய தேவை உள்ளது.
பாடசாலைகளில் சமய பாடங்கள் குறித்த பாடத்தில் தேர்ச்சியற்ற ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுவதனால் மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இஸ்லாம் பாடமானது மௌலவி ஆசிரியரினால் கற்பிக்கப்படுகின்றபோது வினைத்திறனாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே மாணவர்களின் நலனைகருத்தில் கொண்டும் குறித்த நியமனத்தை எதிர்பார்த்திருந்து உச்ச வயதை தாண்டிய திறமையான மௌலவிமார்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் அந்நியமனத்திற்கான உச்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment