(கொழும்பு, சிலோன்முஸ்லிம்)
உலகலாவிய ரீதியில் இயங்கும் பலம் வாய்ந்த அமைப்பான உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல் ஆலம் அல்இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய பிரதிநிதியாக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் செயற்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி மக்காவில் நடைபெறவுள்ள உலக முஸ்லிம் லீக்கின் 43ஆவது அதியுயர் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுமுள்ளார்.
சவூதி அரேபியாவின் மக்கா நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் லீக், உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் - நன்மைக்காகவும் 1962ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாம் அல்லாத நாடுகளிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் நலன்களில் கவனம் செலுத்துவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், முஸ்லிம் நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை பேணி வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றி வருகின்றது.
அத்துடன், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு இன மத பேதங்களுக்கு அப்பால் பணியாற்றவதுடன், பள்ளிவாசல்களை பராமரிக்கும் பணிகளிலும் ஈடுபடுகின்றது.
உலக முஸ்லிம் லீக்கில் இலங்கை சார்பில் முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மட் உறுப்பினராக இருந்துள்ளதுடன் அவருக்குப் பின்னர் இதுவரைக் காலமும் எவரும் நியமிக்கப்படாத நிலையில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் டாக்டர். அப்துல் கரீம் அல் ஈஸா இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி உலக முஸ்லிம் லீக்கின் 43ஆவது அதியுயர் சபைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுமுள்ளார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவமான இந்த நியமனத்தை வழங்கிய சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், இளவரசர் முஹம்மட் பின் சல்மான், உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் உள்ளிட்ட அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாஸர் எச்.அல் ஹாரதி ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment