இலங்கைக்குள் வர்த்தக நோக்கத்திற்காக காலடி வைத்த அரேபியர்கள் துறை முகங்களை அண்டிய பிரதேசங்களில் மாத்திரமல்லாமல் ராட்சியங்களின் தலைநகரங்களாகத் திகழ்ந்த அநுராதபுரம், பொலன்னறுவை, குருணாகல, தம்பதெனிய, சீதாவாக்கை, கண்டி போன்ற தலைசிறந்த நகரங்கள் உட்பட ஏனைய பகுதிகளுக்கும் தமது வியாபாரத்தை மேற்கொண்டு வந்தனர்.
இக்கால கட்டத்தில் துறைமுக நகரங்களாக திகழ்ந்த கொழும்பு, நீர்கொழும்பு, மன்னார், புத்தளம், கற்பிட்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, சம்மாந்துறை, திருக்கோயில், பொத்துவில், ஹம்மாந்தோட்டை, மாத்தறை, காலி, பேருவளை போன்ற நகரங்கள் அரேபிய வர்த்தகர்களின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டன.
இவர்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் கொண்டுவரும் வியாபாரப் பொருட்களுடன் உள்நாட்டு துறைமுக நகரங்களில் இலகுவாகப் பெறக்கூடிய கருவாடு, உப்பு போன்றவற்ற ஏனைய பிரதேச மக்களின் காலடிக்குக் கொண்டு சென்று வர்த்தக நடவடிக்கைகளில் சிறப்புற்று திகழ்ந்தார்கள்.
அதுமாத்திரமல்லாமல் உள்நாட்டில் காணப்படும் ஏலம், கறுவா, பாக்கு, கோப்பி, மிளகு போன்ற பொருட்களை உள்ளாட்டிலும் வெளிநாட்டுக்கும் கொண்டு சென்று வர்த்தகம், போக்குவரத்து சேவையையும் செய்துவந்தார்கள்.
இன்றைய நவீன கால போக்குவரத்து முறைமைகளும், பாதைகளும் காணப்படாத அக்காலத்தில் மாடுகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் போன்றவற்றைக் கொண்டு தவள முறையில் போக்குவரத்தை மேற்கொண்டனர். இவர்களது பயணயம் பல நாட்கள், மாதங்கள் தொடர்ந்தன. அதனால் அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் அம்பலங்களை அமைத்து தங்கிச் சென்றனர். இவர்கள் தங்கிச் சென்ற இடங்கள் பிற்காலத்தில் சிங்கள முஸ்லிம் கலந்து வாழும் கிராமங்களாக மாறின.
இவ்வாறாக நாடுபூராகவும் சென்று வந்த அரேபியர்கள் நாட்டின் ஆட்சியிலிருந்த மன்னர்களுடன் நல்லுறவை பேணிவந்தார்கள். அக்காலத்தில் பிரசித்திவாய்ந்ததாகக் காணப்பட்ட திருகோணமலை – மூதூர் மகாவெலி ஊடாக உள்நாட்டுக்குள் கப்பல்கள் போக்குவரத்து செய்தன.
இத்துறைமுகங்களில் சிங்கள மன்னர்கள் தமது அதிகாரிகளாக முஸ்லிம்களையே நியமனம் செய்திருந்தனர். இவர்கள் நாட்டுக்குள் நுழையும் எந்தவொரு கப்பல்கள் தொடர்பான செய்திகளை அவர்களிடம் காணப்பட்ட வர்த்தக தொடர்புகளி னூடாக மன்னனுக்கு அறிவிப்பு செய்தார்கள்.
வர்த்தக முஸ்லிம்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அவர்கள் வியாபாரத்திற்கு செல்லும் வெவ்வேறு தேச மொழிகளையும் கற்றுக் கொண்டிருந்தார்கள். இலங்கையிலும் தமிழ், சிங்களம் போன்ற மொழிகளையும் அவர்கள் கற்றிருந்தார்கள். இதனால் தொடர்பாடல் என்பது அவர்களுக்கு தடையாக அமையவில்லை.
புராதன காலம் முதல் முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் நெருங்கிய தொடர்பு காணப்பட்ட போதிலும் அண்மைக்காலமாக முஸ்லிம்களை நிந்தித்து வரும் பொதுபலசேனா, சிங்கள ராவய, சிங்கள பலசேனா உள்ளிட்ட இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களை நோக்கி மரக்கலே, தம்பிலா என்ற வார்த்தைகள் கொண்டு திட்டித்தீர்த்து வருவதை அவதானித்து கொண்டிருப்பீர்கள். உண்மையில் இவ்வார்த்தைகள் முஸ்லிம்களை இழிவுபடுத்துபவனவா?
ஏஎம். பறக்கத்துள்ளாஹ்
Post a Comment