முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயத்துக்குட்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் புத்தர் சிலையொன்றினை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியை பௌத்த தேரர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குமுழமுனையைச் சேர்ந்த தமிழ் சகோதரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுத்ததாகவும் சமாதானத்தை உறுதி செய்ததாகவும் முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் அபிவிருத்திக் குழுவின் இணைப்பாளருமான ரிசாம் ஜமால்தீன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர்சிலை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓயா விகாரையைச் சேர்ந்த கல்கமுவ சத்வபோதி தேரர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டபோது இடம்பெற்ற பதற்ற நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
நேற்று முன்தினம் மாலை இரண்டு பௌத்த தேரர்களும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் 3 வாகனங்களில் குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை வைத்து நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள வந்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. நான் உடனே அங்கு சென்றேன். 2 வாகனங்களில் அவர்கள் கட்டட நிர்மாணப் பொருட்களும் கொண்டு வந்திருந்தனர்.
பிரதேச செயலாளரின் அனுமதி பெறாது சிலை வைக்க முடியாது என்றேன். தொல்பொருள் அதிகாரிகளும் வந்திருக்கிறார்கள். எம்மால் திரும்பிப் போக முடியாது என்று கூறினார்கள். பின்பு FGமுனைப் பகுதியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் அவ்விடத்துக்கு வந்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன், அமைச்சர் சிவநேசன், கரதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும் அவ்விடத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.
உடனே ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டேன். பொலிஸாரும் வந்து சேர்ந்தார்கள். பொலிஸாரின் உதவியுடன் இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
தமிழ்ப் பகுதிகளில் இவ்வாறான செயல்கள் மூலம் இன நல்லிணக்கத்துக்கு பாதகம் விளைவிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தேன். இதனால் அங்கு உருவாகவிருந்த முறுகல் நிலை தவிர்க்கப்பட்டது என்றார்.
Post a Comment