நடராஜன் கரன்
அரசாங்க நிறுவனங்கள் ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு அரசியல் கட்சிக்கோ சார்பானதாக இருந்து விடுவதால்தான் நாட்டின் அபிவிருத்திக்கும் சமாதானத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.
அந்த வகையில் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாகம் ஒரு கட்சிக்கு அரசியல் இலாபம் தேடும் பணியை செய்கின்றதா? என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொழில்நுட்பக் கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ளது. இவ் விழாவுக்கு துறைசார்ந்த அமைச்சர் ஒருவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் கலந்து கொள்ளவுள்ளதாக அறியப்படுகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சிகளிலும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கத்தக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவரை தொழில்நுட்பக் கல்லூரி நிருவாகம் அதிதியாக அழைத்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் ஆலையடிவேம்பு,திருக்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் இக் கல்லூரியில் கல்வி கற்று வருகின்ற நிலையில் தமிழருக்கென இருக்கும் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரானர் இக் கல்லூரி அமைந்துள்ள பக்கத்து கிராமத்திலே வசித்தும் வருகிறார். இப்படியான நிலையில் கல்லூரி நிருவாகம் இப் பாராளுமன்ற உறுப்பினரை கண்டுகொள்ளாதது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியதாகவே உணர்கின்றோம்.
மேலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி இஸ்மாயில் மற்றும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதே மாவட்டத்தின் மக்கள் பிரதிநியாக இருக்கத்தக்க ஒரு கல்வி நிறுவனம் ஒரு தனி நபரின் அரசியலுக்காக தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வது இக் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை
Post a Comment