சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் தற்போது செயல் இழந்துள்ள சுயாதீன பத்திரிகா சமாஜத்தில் நான் எனது ஊடகப் பணியை தொடங்கிய போது அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் என்னிடம் கேட்டார். ‘ஏன் காதி நீதிமன்றங்கள் இவ்வளவு ஊழல் நிறைந்து காணப்படுகின்றன. விவாகரத்துக்களை தடுத்து நிறுத்தி குடும்பங்களுக்கு எற்படும் துயரங்களைக் குறைக்கும் வகையில் ஏன் அவற்றை சீராக்கம் செய்ய உங்கள் சமூகம் முயலக் கூடாது?’ என்று.
அப்போது என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஜம்இய்யத்துல் உலமாவில் அன்று இருந்த முக்கிய மார்க்க அறிஞர்களான அப்துர் றஸாக் ஜமாலி, மசூத் ஆலிம், நூரி ஹஸரத் ஆகியோரிடம் நான் இந்தக் கேள்வியை சமர்ப்பித்தேன்.
இன்று ஐம்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் நாம் இந்த விடயத்தில் எங்கே இருக்கின்றோம். நிலைமை மிகவும் மோசமடைந்தே காணப்படுகின்றது. முஸ்லிம் தனியார் சட்டத்தையும் காதி நீதிமன்ற முறையையும் மறுசீரமைக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்து முன்னாள் நீதி மற்றும் சட்ட சீராக்க அமைச்சர் மிலிந்த மொரகொட உச்ச நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் 2009 ஜுலையில் ஒரு குழுவை நியமித்தார். காதி நீதிமன்ற முறைகளை தரம் உயர்த்தத் தேவையான திருத்தங்களை முன்வைக்க இந்தக் குழு நியமிக்கப்பட்டது. பலரது குற்றச்சாட்டுக்களின் படி உலமா சபையின் தலையீடுகள் மற்றும் குறுக்கீடுகள் காரணமாக ஒன்பது வருட காலமாக இந்த விடயம் இழுபறி நிலையில் இருந்தது. பின் சலீம் மர்சூப் தலைமையிலான குழு அதன் அறிக்கையை 2018 ஜுலை 18ல் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
இப்போது அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் சிபார்சுகளை அமுல் செய்ய உதவ வேண்டியது உலமா சபை உற்பட சகலரதும் கடமையாகும். உலமா சபை இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தமை காரணமாகத் தான் இந்த நடவடிக்கைகள் இழுபறியாகின என்பதே பலரதும் சந்தேகமாகும். முஸ்லிம் சமூகத்தின்; வாக்கு வங்கியை உலமா சபை தான் கட்டுப்படுத்துகின்றது என ஜனாதிபதியும் பிரதமரும் தவறாக நம்பிக் கொண்டிருப்பதால் அவர்களும் இந்த விடயத்தில் ஆர்வம் அற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றே கருதப்படுகின்றது.
ஆனால் முஸ்லிம் சமூகம் உலமா சபைக்கு எந்த ஆணையையும் வழங்கவில்லை என்பதே உண்மை நிலையாகும். அது தானாகவே அந்த ஆணையை பெற்றுக் கொண்டது போல் காட்டிக் கொள்கின்றது. இதை வைத்துக் கொண்டு சட்ட நிபுனர்களுக்குக் கூட அது வியாக்கியானம் அளிக்கின்றது. தனக்கு எந்த விதமான ஏகபோக நிபுணத்துவமும் அற்ற ஒரு விடயத்தில் அந்த துறை சார் நிபுணர்களுக்கே உலமா சபை சவால் விடுக்கின்றது. கிடைக்கப் பெறும் சில தகவல்களின் படி உலமா சபை இந்த சட்டங்களில் எந்த வித திருத்தங்கள் மேற்கொள்வதையும் எதிர்க்கின்றது. அது தெய்வீக அசல் தன்மை கொண்டதும் இற்றை வரை முழுமையானது என்பதும் தான் அவர்களின் வாதமாகும்.
இவ்வாறு சமூகத்துக்குள் தற்போது பிளவுகளும் பிணக்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறானதோர் சூழலில் சர்ச்சைக்குரிய தனது தலைமைத்துவத்தின் மூலம் தனிநபர் காட்சிக் கூடமாக மாறியுள்ள உலமா சபை இந்த சிபார்சுகளை அமுல் செய்ய உதவும் என்று சமூகம் எதிர்ப்பார்க்க முடியாது.
ஆனால் எவ்வாறேனும் இந்த சிபார்சுகளை அமுல் செய்ய வேண்டியது சமூக நலன் கருதிய காலத்தின் தேவையாக உள்ளது. இதுவரை இஸ்லாம் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் எமது அறிவீனம் காரணமாக நாம் அவர்களுக்கு வழங்கத் தவறி உள்ளோம். முஸ்லிம் பெண்களும் இஸ்லாமிய சட்டகத்துக்குள் இருந்தவாறு தமது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளது.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தற்போது அரசாங்கத்தால் இறுக்கமாகக் கண்கானிக்கப்படாத நிலையில் அது தவறாகவும் பயன்படுத்தப்படுகின்றது. உலமாக்களால் அது தவறாகப் பிரயோகப்படுத்தப்பட்டு இளம் பெண்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. உல்லாசம் வேண்டி (பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்து) வரும் வெளிநாட்டவர்களுக்கு இளம் முஸ்லிம் பெண்களை திருமணம் என்ற பெயரில் தற்காலிகமாக தாரை வார்த்தக் கொடுக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதில் குறிப்பிட்ட ஆண்கள் மிகவும் வயது கூடியவர்களாகவும். அவர்களில் பலர் தற்காலிக திருமணத்தை அனுபவித்து விட்டு தமது நாடுகளுக்கு திரும்பி உள்ளதாகவும் கூட தகவல்கள் வெளிவந்துள்ளன.
விழிப்புணர்வு பெற்ற கல்வி அறிவு கொண்ட முஸ்லிம் பெண்கள் மாற்றங்கள் தேவை என்று ஏற்கனவே குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். அமைதியான அழுத்தக் குழுக்களாக இவர்கள் செயற்படத் தொடங்கி உள்ளனர். தமது சொந்த வாழ்க்கை என்று வரும் போது அதில் முடிவுகளை எடுக்கும் விடயத்தில் தாங்களும் கணிசமான பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். முஸ்லிம் பெண்களின் இந்தக் கண்ணோட்டத்துக்கு கௌரவம் செலுத்தி முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் பெண்கள் தரப்பில் இருந்தும் அதிருப்திகள் கிளம்பும் வாய்ப்பு உள்ளது. அடுத்த தேர்தலில் கூட இது பாதிப்பை ஏற்படுத்தலாம். காலம் போகின்ற போக்கில் முஸ்லிம் பெண்கள் இப்படித் தான் வாக்களிக்க வேண்டும் என்று அவர்களின் கணவன்மார் கூட அழுத்தம் கொடுக்க முடியாத நிலை தோன்றலாம்.
உலமா சபை என்பது சமயத் தத்துவங்களைப் போதிக்கும் பாடசாலைகளில் பயின்ற ஒரு கூட்டத்தினரைக் கொண்ட அமைப்பு மட்டுமே. எனவே முழு சமூகத்துக்காவும் குரல் கொடுக்கும் அங்கீகாரம் அவர்களுக்கு கிடையாது. அதிலும் குறிப்பாக இந்த டிஜிட்டல் யுகத்தில் விழிப்புணர்வு அடைந்துள்ள மகளிர் பிரிவுக்கு கட்டளையிடும் அதிகாரம் அவர்களுக்கு கிடையவே கிடையாது. அந்த கட்டளைகள் அவர்கள் மத்தியில் எடுபடப் போதும் இல்லை.
உலமா சபை 1920களில் தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் உலமாக்கள் நன்கு அறியப்பட்ட கல்விமான்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்கள் தமது நம்பிக்கை, நாயணம், நேர்மை, உண்மைத்தன்மை என்பனவற்றுக்காக மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள்.
ஆனால் இன்று இந்த நிலைமை மாறிவிட்டது. மௌலவிமார் என்று சொல்லப்படுபவர்கள் வர்த்தகத்தையும் சமயத்தையும் கலந்து பலரது கைப்பாவைகளாக மாறிவிட்டனர். மறுபுறத்தில் உலமா சபைக்கு சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உரிமை எந்தக் கட்டத்திலும் வழங்கப்படவில்லை. சமூகத்தில் விழிப்புணர்வு அடைந்துள்ள பிரிவினர் உலமா சபையின் பல கொள்கைகளை எதிர்த்தும் வருகின்றனர்.
உலமாக்களை அல்லது சமய அறிஞர்களைக் கொண்ட ஒரு சபை என்று உலமா சபை தன்னை குறிப்பிடுகின்றது. இவ்வாறு கூறிக் கொள்ளும் இந்த உலமாக்களில் பலர் காலம் கடந்த அல்லது பழமையான மத்ரஸாக்களில் அல்லது சமயப் பாடசாலைகளில் படித்து வெளியேறியவர்கள். கொழுந்து விட்டெறியும் சமகால பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் கல்வித் தரம் அற்றவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர். ஆனால் இந்தப் பிரச்சினைகளோ சமூகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கின்றன.
கௌரவத்துக்குரிய இஸ்லாமிய அறிஞர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி 1970 களில் கொழும்பில் இடம்பெற்ற ஒரு இப்தார் நிகழ்வில் மனித குலத்துக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு பற்றி நிகழ்த்திய உரை என் நினைவுக்கு வருகின்றது. அப்போதைய ஈராக் தூதுவர் தௌபீக் அப்துல் ஜப்பார் கலாநிதி சுக்ரி பற்றி என்னிடம் விசாரித்தார். அவரைப் பற்றி ஏன் வினவுகின்றீர்கள் என்று நான் அவரிடம் கேட்ட போது ‘கலாந்தி சுக்ரி இஸ்லாம் பற்றி அரபு மொழியில் மிக அருமையாக உரையாற்றினார். ஒரு அரபியான என்னால் கூட அவ்வாறு உரையாற்ற முடியாது’ என அவர் பதில் அளித்தார்.
இவ்வாறான சிறப்பு மிக்க உலமாக்களுக்கு ஏன் உலமா சபையில் தற்போது இடமில்லை என்பது தான் இங்கு பிரதான கேள்வியாக உள்ளது. இன்றைய உலமா சபை அதன் சர்ச்சைகள் காரணமாக சமூகத்துக்கு ஒரு சுமையாக மாறி உள்ளது. அதனால் அது சமூகத்தின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளது.
உலமா சபை அதன் ஸ்தாபக பிதாக்களின் குறிக்கோளில் இருந்து விலகிச் சென்று அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகவே காணப்படுகின்றது. இதனால் முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களின் வெறுப்புக்கு ஆளாக்கப்படுகின்றது.
ஹலால் சான்றிதழ் வர்த்தகம் தொடர்பான சர்ச்சை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளால் மிகப் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. இதனால் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை மோசமாக்கப்பட்டது. ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் இந்த நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசைக் காப்பாற்ற உலமா சபைத் தலைவர் ஜெனீவா சென்றமை தமிழ் மக்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் காரணமாயிற்று.
2013ல் கிண்ணியாவில் உலமா சபை கிளையின் உறுப்பினர்கள் உற்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் நோன்புப் பெருநாளுக்கான தலை பிறையைக் கண்டு அதை கொழும்பில் இருப்பவர்களுக்கு அறிவிக்க முயன்ற வேளை அவர்களின் தெலைபேசி அழைப்புக்களுக்கு பதில் அளிக்காமல் அது தடுக்கப்பட்டது. இதனால் கிண்ணியாவிலும் அதனைச் சூழவுள்ள பகுதிளிலும் மக்கள் பெருநாள் கொண்டாடிய அதேவேளை ஏனையவர்கள் நோன்பு நோற்கும் நிலை ஏற்பட்டது. உலமாச் சபையின் செயற்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள கிழக்கிழங்கை மக்கள் தமக்கென்று தனியாக ஒரு உலமா சபையை அமைத்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்று புனித குர்ஆன் அல்லது ஹதீஸ் ஆதாரங்கள் எதுவும் இன்றி வெளியான சர்ச்சைக்குரிய உரை காரணமாக முஸ்லிம் அல்லாதவர்கள் தவறாக முஸ்லிம்களைப் புரிந்து கொண்டனர். இதுவும் சமூகத்துக்கு பாரிய பாதிப்பை உருவாக்கியது.
சில வருடங்களுக்கு முன்னால் உலமா சபை மீண்டும் மீண்டும் வழங்கிய அறிவுறுத்தல்கள் காரணமாக முஸ்லிம்கள் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை செலிங்கோ நிதிக் கம்பனியில் முதலீடு செய்தனர். கடைசியில் அந்தக் கம்பனி வங்குரோத்து நிலைக்குச் சென்று முஸ்லிம்களுக்கு ஒரு சதம் கூட கிடைக்காமல் பேயிற்று. இரவோடு இரவாக முஸ்லிம்கள் எல்லாவற்றையும் இழந்தனர். இது உலமாக்கள் செய்கின்ற காரியமா? இவ்வாறுதான் உலமா சபையின் தவறான செயல்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.
மக்கள் வெறுப்படைந்து சர்ச்சைகளால் சோர்வடைந்து உள்ளனர். கடந்த நோன்புப் பெருநாள் பிறை பார்க்கும் விடயத்தில் கூட உலமா சபையின் சர்ச்சை உச்ச கட்டத்துக்குச் சென்று தலைபிறை மாநாடு நடந்த இடத்தில் இருந்து தன் முக்கிய உறுப்பினர்களை மக்களிடம் இருந்து பாதுகாத்து அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேசமான பழிவாங்கல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக உலமா சபையின் பல உறுப்பினர்கள் வாய் மூடி மௌனிகளாக உள்ளனர். அவர்களை நம்பி குடும்பங்கள் இருப்பதால் தொழிலை இழக்க முடியாத இக்கட்டான சூழலில் அவர்கள் வாழுகின்றனர். அச்சுறுத்தல்கள் மற்றும் ஊக்குவிப்புக்களால் அவர்களது வாய்கள் மூடப்பட்டுள்ளன.
எனவே இன்றைய காலத்தின் முக்கிய தேவையாக இருப்பது உலமா சபையின் மீள் ஒழுங்கமைப்பாகும். மக்களால் மதிக்கப்படும் சர்ச்சைகள் எதுவும் அற்ற உலமாக்களைக் கொண்டு இந்த மீள் ஒழுங்கமைப்பு அமைய வேண்டும்.
இலங்கையில் இஸ்ரேலியர்களும், சுவிஷேச கிறிஸ்தவ அமைப்புக்களும், இந்தியாவின் சுளுளு மற்றும் ஏர்P போன்ற அமைப்புக்களும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் முழு மூச்சாக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் உலமா சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளன. இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது ஒரு புறம் இருக்கட்டும் இன்றைய உலமா சபை இந்த ஆபத்துக்கள் பற்றி அறிந்து வைத்துள்ளதா என்பதும் சந்தேகமே. குறைந்த பட்சம் ஜும்ஆ பேதனைகளைப் பயன்படுத்தியாவது அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு விழ்ப்பூட்டி அவர்களின் பாதுகாப்பு பற்றி அறிவுரைகள் வழங்குகின்றார்களா?
ஏற்கனவே முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்து மூழ்கிக் கொண்டிருக்கின்றது. அண்மையில் கண்டி திகண பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு நான்கு தினங்களில் 14 சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உலமா சபையின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் சமூகத்தின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு பதிலாக இன நல்லுறவை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்காக அவரைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர். அதே மைத்திரி அரசின் கையாலாகாத் தனத்தால் திகண அக்குறணை போன்ற இடங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் எரித்து சாம்பராக்கப்பட்ட பின்னணியில் தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர். அன்றைய தினத்தில் கூட வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சரியான உணவும் உடையும் இன்றி துன்பத்துக்கு ஆளான நிலையில் இருந்தனர்.
உலமா சபை சமூகத்துக்கான அதன் பொறுப்புக்களில் இருந்தும் தவறியுள்ளது. அரசியல் அனுசரணையாளர்களின் சேவகர்களாக அது மாறி உள்ளது. சமூக நலன் சார்ந்து பணியாற்ற வேண்டிய தேவைக்கு எதிராகவே அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இஸ்லாமிய சகோதரத்துவத்தில் கவனம் செலுத்தி செயற்படுவதற்கு மாறாக அடிக்கடி அவர்களின் செயற்பாடுகள் தரக்குறைவானதாகவே அமைந்துள்ளன.
இவ்வாறான சூழலில் மிகவும் தவிர்க்க முடியாத ஒரு தேவையாக சுதந்திரமான சமய கல்விமான்களின் தேவை அமைந்துள்ளது. சலீம் மர்சூப் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும் மாற்றங்களையும் அமுல் செய்ய வைப்பதற்கு இத்தகையவர்கள் துணிச்சலோடு சுயேச்சையாக முன்வர வேண்டும்.
சலீம் மர்சூப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதந்துரைகள் இஸ்லாமிய ஷரீஆ சட்ட வரம்புகளுக்கு உற்பட்டதாகவே காணப்படுகின்றன என்று பத்தி எழுத்தாளர் அமீர் பாயிஸ் கொழும்பு டெலிகிராப் இணைத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
1951ல் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டபோது அன்றைய உலமா சபையின் உறுப்பினர்கள் பலர் பழைய பாராளுமன்ற கட்டித்துக்கு அருகில் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் இந்த விடயத்தில் கலந்தாலோசிக்கப் படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் அன்றைய உள்துறை அமைச்சர் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்தும் அவர்கள் அதில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்த போலித்தனமான முல்லாக்களின் வாரிசுகள் தான் இன்றும் இந்த விடயத்தில் மீண்டும் கூச்சலிடத் தொடங்கி உள்ளனர். இந்த விடயம் ஷரீஆ என்றும், அதை திருத்த முடியாது என்றும் இவர்கள் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசார மேடைகளைப் பயன்படுத்தி போலிப் பிரசாரங்களை மேற்கொள்ளவும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவும் தமது சகாக்களை உலமா சபை தூண்டி வருகின்றது. தங்களோடு கருத்து வேறுபடும் மேற்படி குழு உறுப்பினர்களுக்கு எதிராகவே இவ்வாறு பிரசாரம் செய்யப்படுகின்றது. இந்தப் பிரசாரங்களின் போது சம்பந்தப்பட்ட குழு முன்வைத்துள்ள சிபார்சுகள் மற்றும் நியாயங்கள் எதுவும் மக்கள் முன் வைக்கப்படுவதில்லை. மாறாக இது ஷரீஆவுக்கு முரணான ஒன்று என்ற தொனியில் மட்டும் கருத்துக்களை முன்வைத்து மக்களைத் தூண்டி விட வெள்ளிக்கிழமை பிரசார மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான பிரசாரங்களை செவியுறும் மக்களில் பலர் தங்களுக்கு பொய் உரைக்கப்படுகின்றது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் தலையிட வேண்டும். இந்த பாரபட்சமான காலம் கடந்த சட்டத்தில் திருத்தங்களை அமுல் செய்ய அவர்கள் துரிதமாகச் செயற்பட வேண்டும். இல்லையேல் இலங்கை அரசியல்யாப்பை மீறும் ஒரு பாரபட்சமான கட்டமைப்புக்கு வேண்டுமென்றே வழிவிட்ட குற்றத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும். அத்தோடு இந்த நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக பாரபட்சம் காட்டிய குற்றத்துக்கும் அவர்கள் ஆளாக வேண்டும். (முற்றும்)
Post a Comment