ஐ. ஏ. காதிர் கான்
முஸ்லிம் தனியார் திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக, நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர், இரண்டாகப் பிரிந்து வெவ்வேறு அறிக்கைகளைக் கையளித்துள்ளதால், இவ்விரு அறிக்கைகளிலும் கருத்து வேறுபாடுள்ள விடயங்களை மாத்திரம் கருத்தில் எடுப்பது சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு, (07) வெள்ளிக்கிழமை மாலை, கொழும்பு - தெமட்டகொடை, வை.எம்.எம். ஏ. பேரவையின் ஏ.எம்.ஏ. அஸீஸ் மண்டபத்தில் நடை பெற்றது.
இதன் போது சட்டத்தரணி அஷ்ரப் ரூமி கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் திருமணச் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி, சிவில் இயக்கங்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, வை.எம்.எம். ஏ. யும் அறிக்கை வழங்கியுள்ளது. இது போல் நாற்பது அமைப்புக்களும் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
இவற்றின் படி, நீதி அமைச்சரால் முன்னாள் நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளது. அதில் சில விடயங்களில் உடன்படாத அதே குழுவின் சில உறுப்பினர்கள், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் மற்றுமொரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த இரண்டு அறிக்கைகளும், சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் இருந்த போதும், சுமார் பத்து விடயங்களில் மட்டுமே முரண்பாடுகள் உள்ளன.
மேற்படி பத்து விடயங்களை மட்டும் பொதுமக்களுக்குத் தெளிவு படுத்தி, இரண்டு அறிக்கைகளையும் ஒரு அறிக்கையாக்கும் முயற்சியை, வை.எம்.எம்.ஏ. மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஊடகத் தரப்பில் அல் - ஜஸீரா லங்கா பணிப்பாளரினால் இங்கு கேள்வி எழுப்புகையில், "மேற்படி அறிக்கையைத் தயாரித்த குழு, முஸ்லிம் திருமணச் சட்டத்தில், மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட குழுவாகும். இந்த இரு தரப்பினரையும் ஒற்றுமைப்படுத்த முணையும் நீங்கள், முஸ்லிம் திருமணச் சட்டத்தில் கையை வைக்கவே கூடாது எனச் சொல்லும் தரப்பை, குறிப்பாக இதில் அதிகம் உலமாக்கள் கொண்ட இத்தரப்பை ஏன் கவனிக்கவில்லை" எனக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளிக்கையில், "சலீம் மர்சூப் தலைமையிலான குழுவில், உலமாக்கள் இல்லை" என்றும், "பாயிஸ் முஸ்தபா தலைமையிலான குழுவில் அ.இ. ஜம் - இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர், கலாநிதி ஷுக்ரி ஆகியோர் உள்ளனர்" என்றும், இதன்போது சட்டத்தரணி அஷ்ரப் ரூமி தெரிவித்தார்.
பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களினால் மேற்படி நிகழ்வில் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், வை.எம்.எம்.ஏ. யின் தேசிய பொதுச் செயலாளர் சஹீட் எம். ரிஸ்மி, தற்போதைய தேசியத் தலைவர், முன்னாள் தலைவர் கே.என். டீன் ஆகியோர் உள்ளிட்ட மேலும் பல உறுப்பினர்களினால் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
Post a Comment