Top News

புல்மோட்டை மாலானா ஊரில் சிங்கள குடியேற்றம்? இம்ரான் எம்பி கவனத்திற்கு



லரீப் சுலைமான்
திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, புல்மோட்டை மாலானா ஊர் (12 ஆம் கட்டை) என்ற இடத்தில், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருவதாக அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறித்த பிரதேசத்தில் தற்போது 12 வீடுகளுக்குரிய அத்திவாரமிடும் வேலைகள் பொலிஸ் பாதுகாப்புப் படையினரின் உதவியோடு, புல்மோட்டை அரிசிமலை விகாரைக்குப் பொறுப்பாகவுள்ள விகாராதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக ஒன்பது கொட்டில்களை அமைத்து  குடியேறும் அத்துமீறிய முயற்சியில் இறங்கியுள்ளனர். குறித்த தேரர் சிங்கள மக்களை காடு வெட்டத் தூண்டி, இந்த கொட்டிலமைக்கும் விடயத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேநேரத்தில், ஏற்கனவே புல்மோட்டை முஸ்லிம்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு, வன இலாகா திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த 17 குடும்பங்களுக்குரிய காணிகளிலேயே இக்காரியம் நடைபெற்று வருகிறது.
கொட்டிலமைக்கும் முன்னதாக இவர்கள் காடுவெட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வள இலாகா திணைக்களத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்ட தையடுத்து,
 பொலிஸாரின் உதவியுடன் காடுவெட்டும் செயலைத் தடைசெய்திருந்தும் மறுதினம், குறித்த தேரரின் தலையீட்டினால் மீண்டும் காடுவெட்டப்பட்டு, விடியற் காலையில் கொட்டிலும் அமைக்கப்பட்டுள்ளதோடு, புதன்கிழமை முதல் அத்திவாரமிடும் வேலைகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர், வன இலாகா திணைக்களத்தினர், மாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டும் இதுவரைக்கும் குறித்த இடத்திற்கு யாரும் சமுகமளிக்கவில்லை என்பது இம் மக்களின் பாரிய குற்றச்சாட்டுக்களாகும்.
ஏற்கனவே மாலானா ஊர் என்ற இடத்தில், 2014 களில் புதிய விகாரையொன்றும் நிறுவப்பட்டது. பின்னர், பௌத்த தியான நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு, அவற்றைச் சூழ வெளிமாவட்டங்களிலுள்ள சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற்றியுள்ளனர். இப்பகுதி விஸ்தரிக்கப்படுமாக இருந்தால் இதற்கு அருகாமையிலுள்ள கொக்குளாய்க் களப்பு பறிபோகும் அபாயம் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. முஸ்லிம்களுக்குரிய 5 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, கொக்குளாய்க் களப்பு பகுதியில் இராணுவ முகாம் ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் துணையுடன் கொக்குளாய்க் களப்பை ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி, தென்னைமரவாடி, புல்மோட்டை முதலான பிரதேசங்கள் புதிதாகக் குடியேறுகின்ற சிங்கள மக்களின் அதிகாரத்திற்குள்ளாகும் வாய்ப்பேற்படும் என்ற அச்சமும் இருந்து வருகிறது.
அப்பகுதியைச் சூழவுள்ள தென்னைமரவாடி, விளாந்தோட்டம், குடாத்தறை, மரக்கறிக்குடா பகுதிகளில் சிலாபம், நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களிலுள்ள சிங்கள மக்கள் தற்காலிக கொட்டில்களை அமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் அப்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு உரிமை கோரியும் வருகின்றனர்.
நீண்ட காலமாக காணிப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற முஸ்லிம் பிரதேசங்களில் புல்மோட்டையும் ஒன்று. புல்மோட்டையில் குடியிருப்பு நிலங்களும் ஐந்து தலைமுறைக்கும் மேலாக செய்கை பண்ணப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாய மற்றும் தோட்டக் காணிகளும் இலக்கு வைக்கப்படுகின்றன. கடந்த அரசாங்கங்களினால் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் என்றும் வனவள இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் என்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முகாம் அமைப்பதெற்கென்றும் விகாரைக் காணிகள்-தியான நிலையங்கள் அமைப்பதெற்கென்றும் பல ஏக்கர் காணிகளை புல்மோட்டை முஸ்லிம்கள் இழந்துள்ளனர்.
இக்காணிகள் போக, மேலும் பல ஏக்கர் நிலங்களுக்கும் குறிவைக்கப்படுகிறது. அரசாங்க படைகளின் கெடுபிடிகளாலும் குறித்த விகாராதிபதியின் முயற்சியாலும் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பற்ற - அதிகார துஷ்பிரயோகங்களாலும் புல்மோட்டை முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகள் இன்று கையறு நிலையில் உள்ளன.
பொன்மலைக்குடா அரிசிமலை, மண்கிண்டிமலை (மதீனா நகர்), இரும்படிச்சான் (செம்பிலிய கந்தை), கண்ணீராவி பிலவு, ஆண்டாங்குளம், சாத்தானமடு, காட்டுத் தென்னை முறிப்பு, தோண்டாம் முறிப்பு, ஸபா நகர் (ஓடாமலை) போன்ற பிரதேசங்களிலெல்லாம் புல்மோட்டை முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
 முஸ்லிம்கள் காடுவெட்டினால் உடனடியாக குச்சவெளி பிரதேச செயலாளர், வனவள இலாகாவினர் முதற்கொட்டு சகல அரச தரப்பினரும் களத்தில் இறங்கி விடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேண்டப்பட்ட சமூகத்தவர்கள் என்றால் சட்டங்களும் அதிகாரங்களும் மௌனித்து விடுகின்றன.
எனினும் இதுவரைக்கும்  இந்த சட்டவிரோத ஆக்கிரமுக்கு எதிராக வழக்குப் பதிவொன்றைச் செய்து, சட்டத்தின் முன்நிறுத்த யாரும் முன்வரவில்லை. அவ்வாறு வழக்குப் பதிவுவொன்றைச் செய்து சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லையாயின் புல்மோட்டையில் இதுபோன்ற பல இடங்களையும் புல்மோட்டை முஸ்லிம்கள் இழக்க நேரிடலாம்.

-Vidivelli

Post a Comment

Previous Post Next Post