முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கூறியதாகத் தெரிவித்து, தாம் எழுதியிருந்த செய்தி நூறு வீதம் உண்மையானது என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜி.எம். தௌபீக் செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.
ஆனாலும், அந்த செய்தி வெளிவந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், தான் அவ்வாறு கூறவில்லை என்று, உதுமாலெப்பை மறுத்திருப்பது தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தௌபீக் கூறினார்.
தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவியை எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்திருந்த நிலையில், கொழும்பு – புதுக்கடையில் வைத்து, சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசிம் மற்றும் ஏ.ஜி.எம். தௌபீக் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அவரைச் சந்தித்திருந்தனர்.
இதன்போது உதுமாலெப்பையுடன் உரையாடிய மேற்படி ஊடகவியலாளர்கள், அவர் கூறிய விடயங்களை செய்தியாக்கி ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.
அந்தச் சந்திப்பின் போது, முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்பட வேண்டுமென்று உதுமாலெப்பை கூறியதாகவும், அதனை அவர் வலியுறுத்தியதாகவும், குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்தச் செய்தி வெளியாகி இரண்டு தினங்களுக்குப் பின்னர், அட்டாளைச்சேனையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை; தான் அவ்வாறு ஊடகவியலாளர்களான சுஐப் மற்றும் தௌபீக் ஆகியோரிடம் கூறவில்லை எனத் தெரிவித்திருந்ததோடு, அந்தச் செய்தியை அவர்கள் பொய்யாக எழுதியதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே, தாம் எழுதிய செய்தி உண்மையானது என்றும், இது குறித்து எங்கு வேண்டுமானாலும் தான் சத்தியம் செய்வதற்குத் தயாராக உள்ளதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக், கூறினார்.
PUTHITHU
PUTHITHU
Post a Comment