Top News

ஊஹிகுர் இன முஸ்லிம்களுக்கு எதிரான சீன அரசின் அடடூழியங்கள்


லத்தீப் பாரூக்
2018 ஆகஸ்ட் பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை சீனாவின் வடமேற்கு பிராந்திய முஸ்லிம்கள் பள்ளிவாசல் ஒன்றின் எதிரே கூடி பாரிய அளவான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள அற்புதமான ஒரு பள்ளிவாசலை தகர்த்து தரைமட்டமாக்க சீன அரசு தயாராகி வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சீனாவில் சமயங்கள் பின்பற்றப்பட்ட வரலாற்றை திரிபு படுத்தி எழுத சீன அரசு மேற்கொள்ளும் முயற்சியாகவே இது கருதப்படுகின்றது.
வீஸோ நகரில் உள்ள உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட பள்ளிவாசலின் எதிரே சிறுபான்மை முஸ்லிம்களான ஊஹி இனத்தவர்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரையிலும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. “மக்கள் இங்கு பெரும் வேதனையோடு கூடியுள்ளனர்” என்று இங்கு நின்ற 72 வயதான மா செங் மின் என்ற முதியவர் கூறினார்.
தமது விசுவாசங்கள் தகர்க்கப்படுகின்றமைக்கு எதிராக சீனாவில் சமய நம்பிக்கைகள் உள்ள குழுவினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக சகிப்புத் தன்மையோடு போராடி வருகின்றனர். உத்தியோகப்பூர்வமாக நாத்திகப் போக்குடைய சீன கம்யூனிஸக் கட்சி தனது நாத்திகக் கொள்கையை பலப்படுத்திக் கொள்வதற்காக சமய நம்பிக்கைகள் கொண்ட குழுவினர் மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருகின்றது. இதில் அவர்களுக்குப பிரதான சவாலாக இருப்பது இஸ்லாமும் முஸ்லிம்களும். ஏற்கனவே பல பள்ளிவாசல்களில் இருந்து முஸ்லிம்களின் அடையாளத்தை நிறுவப் பயன்படுத்தப்படும் பிறை சின்னம் மற்றும் பள்ளிவாசல் கோபுரங்கள் என்பன அகற்றப்பட்டுள்ளன.
வீஸோவில் உள்ள பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் தான் பூர்த்தி செய்யப்பட்டன. அரசாங்கம் அதற்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அந்தப் பள்ளிவாசலை தகர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இந்தப் பள்ளிவாசலின் ஒன்பது கோபுரங்களில் எட்டு கோபுரங்களை அகற்ற அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அனுமதி அளிக்கப்பட்டதை விட பெரிய அளவில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதே அதிகாரிகளின் குற்றச்சாட்டாகும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சமூகப் பிரதிநிதிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
‘இன்னமும் நல்ல நிலையில் இருக்கின்ற ஒரு பள்ளிவாசலை எப்படி தரை மட்டமாக்க அனுமதிக்க முடியும்’ என்று முதியவர் மா செங் மின் கேள்வி எழுப்பினார். இந்தப் பள்ளி முஸ்லிம்களின் தனிப்பட்ட நிதியில் கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் பேர் இங்கு தொழுகைக்காக வருகின்றனர். உயர்வான தூண்களோடு தூய்மையான வெள்ளை நிறத்தில் மாளிகை போல் இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. பள்ளிவாசலின் வெளிப்பகுதியில் சீன தேசியக் கொடியும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது மிகவும் அரிதானதோர் விடயம். எந்த விதமான அரச அதிருப்தியையும் முளையிலேயே கிள்ளிவிடும் ஆற்றல் சீன அரசுக்கு கைவந்த கலையாகும். தற்போதைய ஜனாதிபதி சீ ஜிங் பிங்கின் ஆட்சியில் சமயச் சுதந்திரத்தின் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் கோபுரங்கள் மற்றும் அரபு மொழி மூலமான அடையாளங்கள் என்பனவே ஏற்கனவே தகர்க்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் புதிதாக மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் படி அரபு பாணியில் அமைந்த பள்ளிவாசல்களோ அல்லது வேறு எந்த கட்டிடங்களோ நிர்மாணிக்கப்படக் கூடாது. இந்த விடயம் ஊஹி இன முஸ்லிம்களை பெரும் வேதனை அடைய வைத்துள்ளது.
சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள தூரப்பகுதி மாநிலமான சின்ஜியாங்கில் முஸ்லிம் பிரிவினைவாத சக்திகளின் பரவலான வன்முறைகள் காரணமாக ஊஹிகுர் மற்றும் கசக் இனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுபான்மை முஸ்லிம்கள் விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதனை முகாம்களில் இஸ்லாமிய நம்பிக்கைகளை கைவிட்டு விட்டு கட்சிக்கு விசுவாசமாக பிரமாணம் செய்யுமாறு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
அண்மையில் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஊஹி சமயப் பாடசாலைகள் மற்றும் அரபு மொழி வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய விவகாரங்களில் பங்கேற்பதற்கு முஸ்லிம் சிறுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள லா ட்ரோப் பல்கலைக் கழகத்தில் சீன இனத்துவக் கொள்கைகள் தொடர்பான கல்விமான் ஜேம்ஸ் லீபோலட்; இதுபற்றிக் குறிப்பிடுகையில் ‘சிறுபான்மை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தை அடியோடு அழிப்பது தான் சீன அரசின் இறுதி இலக்கு. அத்தோடு சீன அடையாளத்தோடு தொடர்புடைய ஒரு உணர்வை உருவாக்கி சீன கலாசாரத்தோடு அவர்களை சங்கமிக்கச் செய்வதே நோக்கமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழு ஒன்றும் சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளது. சுமார் பத்து லட்சம் ஊஹிகுர் இன முஸ்லிம்கள் நியாயமான காரணங்கள் எதுவும் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த சின்ஜியாங் மாநிலம் கிட்டத்தட்ட ஒரு சிறைக் கூடம் போல் மாற்றப்பட்டுள்ளது என்று இந்தக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நம்பத்தகுந்த பல அறிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவை எமது ஆழமான கவனத்தை ஈர்த்துள்ளன. சீனாவிள் ஊஹிகுர் சுயாட்சிப் பிரதேசம் ஒரு தடுப்பு முகாம் போல் ஆக்கப்பட்டுள்ளது. அங்கே மர்மங்கள் சூழ்ந்துள்ளன. அது ஒரு உரிமைகள் அற்ற வலயமாக மாறியுள்ளது’ என்று அந்தக் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான கே மெக்டொகால் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கானவர்களும் அவற்றுக்கு வெளியே தீவிரவாத எதிர்ப்பு முகாம்களில் இன்னும் நூற்றுக் கணக்கானவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மெக்டொகால் தெரிவித்துள்ளார்.
இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லோரதும் சகலவிதமான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் மீது இதுவரை எந்த விதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சட்ட ரீதியாக தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான எந்த விதமான வாய்ப்புக்களும் உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் காணாமல் போய் உள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர்களின் உறவினர்களுக்கு கூட எதுவும் தெரியாது.
2017ம் ஆண்டு முதல் ஆளும் சீன கம்யூனிஸக் கட்சி இந்த மாநிலத்தில் வாழும் மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஆளும் கம்யூனிஸக் கட்சிக்கும் ஜனாதிபதி சீ ஜிங் பிங்கிற்கும் விசுவாசமாகப் பிரமாணம் செய்யுமாறு இவர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறை அதிகரித்தள்ளது. மிக மோசமான வாழ்க்கை நிலையில் அவர்கள் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த மாநிலத்தில் உறுதியான பொருளாதார வளர்ச்சியை அரசு கண்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக இந்தப் பிராந்தியம் சின்ஜியாங் சயாட்சி பிராந்தியம் என அழைக்கப்படுகின்றது. ஆனால் ஊஹிகுர் இனத்தவர்கள் கிழக்கு துர்கிஸ்தான் என இந்தப் பிராந்தியத்தை அழைக்கின்றனர்.
ஊஹி மக்கள் பல தசாப்தங்களாக தமது சமய விசுவாசங்களைப் பின்பற்றும் உரிமைகளைப் பெற்றிருந்தனர். ஆனால் அரசாங்கம் தற்போது இஸ்லாத்துக்கு எதிராக மேற்கொண்டுள்ள மிகப் பெரும் நடவடிக்கைகள் காரணமாக ஊஹிகுர் இனக்குழுவின் கேந்திர மையமாகத் திகழும் சின்ஜியாங் மாநிலம் இன்று ஊஹி பிரிவின் பிரதான இடம், கன்ஸ{ மாநிலம், நின்ஸியா என பல பிரிவுகளாக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் காணப்படும் இயற்கை வளங்கள் காரணமாகவும் சீன அரசு தனது பிரதான கவனத்தை இந்த மாநிலம் மீது செலுத்தி உள்ளது. அது மட்டுமன்றி சீனாவின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள இந்த மாநிலம் மத்திய ஆசியப் பிராந்தியத்துடன் இணைப்பை ஏற்படுத்தும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைவிடமாகவும் காணப்படுகின்றது. இங்கு வாழும் மக்கள் பாரம்பரியமாக பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவர்களாகவும், பல மொழிகள் பேசுபவர்களாகவும் காணப்படுகின்றனர். ஹான் வம்சாவழி ஆட்சி காலம் முதல் சீனாவின் ஒரு அங்கமாக சின்ஜியாங் மாநிலம் காணப்படுகின்றது.
துருக்கிய மொழி பேசும் ஊஹிகுர் இனத்தவர்கள் வரலாற்று ரீதியாகவும் சரித்திர ரீதியாகவும் மத்திய ஆசியாவோடு தொடர்புடையவர்களாக உள்ளனர். இவர்கள் தங்களை சீனாவின் ஒரு பகுதியாகக் கருதுவதில்லை. 1949ம் ஆண்டு சீனப் படைகள் கிழக்கு துர்கிஸ்தானிடமிருந்து சின்ஜியாங்கை கைப்பற்றியது முதல் தான் இந்தப் பிராந்தியம் சீன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதே காலப் பகுதியில் தான் திபெத்தும் சீனாவின் பிடியின் கீழ் வந்தது.
ஊஹிகுர் இன மக்களுள் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இஸ்லாம் அவர்களது வாழ்வியலின் முக்கிய அடையாளமாகவும் அங்கமாகவும் இருந்தது. சீனாவில் 55 சிறுபான்மை குழுக்கள் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவர்களுள் பத்து குழுக்கள் பெரும்பான்மையான சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களை உள்ளடக்கியது. இவர்கள் மிகவும் செறிவாகக் காண்பட்டது வடமேற்கு சின்ஜியாங், கான்ஸ{ மற்றும் நிங்ஸியா பகுதிகளில். சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான யூனான் மாநிலத்திலும் பெருமளவு முஸ்லிம்கள் காணப்படுகின்றனர்.
பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு பிராந்தியமாக சீன அதிகாரிகள் இந்தப் பிரதேசத்தை இனம் கண்டுள்ளனர். புலம் பெயர்ந்தவர்களை கவர்ந்து ஈர்க்கவும், முன்னாள் சோவியத் மத்திய ஆசியக் குடியரசுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் முக்கியமான ஒரு பிராந்தியமாக இந்த மாநிலம் இனம் காணப்பட்டுள்ளது. மத்திய ஆசியாவுடன் பிரதான வர்த்தக இணைப்பு பாதையாகவும் இது அமைந்துள்ளது. மங்கோலியா, ரஷ்யா, கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா என எட்டு நாடுகளுடன் எல்லைகளைக் கொண்ட ஒரு பிராந்தியமாகவும் இது அமைந்துள்ளது. இங்கு மிகவும் செழுமையான இயற்கை வாயு படிமங்கள், எண்ணெய், இரும்பு அல்லாத ஏனைய உலோக வகைகள் நிறையக் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் அணு பரிசோதனை மையப்பகுதியாகவும் இது காணப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் பிராந்தியம் உப்பு, சோடா, பொராக்ஸ் அல்லது வெண்காரம், தங்கம், பச்சை மாணிக்கம் மற்றும் நிலக்கரி என்பன கிடைக்கும் இடமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சின்ஜியாங்கின் பொருளாதாரம் பெருமளவு விவசாயம் மற்றும் வர்த்தகம் என்பனவற்றிலேயே தங்கியுள்ளது. பிரபலமான பட்டுப்பாதையை அண்டிய நகரங்களாக கஷ்கார் போன்ற நகரங்கள் அபிவிருத்தி கண்டுள்ளன. சீனா தனது போக்குவரத்து உற்கட்டமைப்புத் திட்டங்களின் தொடராக ரஷ்யா, கஸகிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் என்பனவற்யோடு இணைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பிராந்தியத்தை ஊடறுத்து சீனா 12 நெடுஞ்சாலைகளையும் விருத்தி செய்து வருகின்றது.
இவற்றுள் மிக நீளமான நெடுஞ்சாலை 1680 கிலோமீற்றர் தூரம் கொண்டதாக அமையும். சின்ஜியாங்கில் இருந்து உஸ்பகிஸ்தான், ஈரான் வழியாக துருக்கியை அடைந்து அங்கிருந்து இறுதியாக ஐரோப்பாவை தொடர்புபடுத்தும் வகையில் இந்தப் பாதை அமையவுள்ளது. 2007ம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்ட ஏனைய சில உற்கட்டமைப்பு திட்டங்களின் படி தெற்கில் இருந்து வடக்கிற்கான ஒரு நீர் திருப்புமுனை வழி, மேற்கில் இருந்து கிழக்கிற்கு இயற்கை வாயு குழாய் இணைப்பு, மேற்கில் இருந்து கிழக்கிற்கு மின்சாரப் பரிவர்தனை, சிங்காய் முதல் திபெத் வரையான ரயில் போக்குவரத்து வழி என்பன அமைந்துள்ளன. சீனாவும் துருக்மனிஸ்தானும் 2006ம் ஆண்டில் வாயுக் குழாய் பாதை வடிவமைப்புக்கான ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளன.
சீனாவில் பல முஸ்லிம் இனக்குழுக்கள் உள்ளன. சீன அரசின் கொள்கைகளால் இவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். சமய விடயங்களுக்கான அரச நிர்வாகம் அல்லது ளுயுசுளு என்ற அமைப்பின் பிரகாரம் சீனாவில் 21 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். இன்னொரு சீன நிறுவனம் நடத்தியுள்ள குடிசன மதிப்பீட்டின் படி சீனாவில் 21.6 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். இது சீனாவின் மொத்த சனத்தொகையில் 1.6 சதவீதமாகும்.
2011 குடிசன மதிப்பீட்டின் படி மிகப் பெரிய முஸ்லிம் இனக்குழவாக ஊஹி இனப்பிரிவு உள்ளது. டுங்கான்ஸ் எனவும் அழைக்கப்படும் இவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன்களாக உள்ளது. அதற்கு அடுத்த படியாக ஊஹிகுர் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10 மில்லியன்களாக உள்ளது. கஸகஸ்தானியர்கள், கிரிகிஸ்தானியர்கள், உஸ்பெகிஸ்தானியர்கள், தஜிகிஸ்தானியர்கள் என ஏனைய பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக சிறு தொகையான திபெத் முஸ்லிம்கள் உத்தியோகப்பூர்வமாக திபெத் மக்களோடு சேர்த்து வகைப் படுத்தப்பட்டுள்ளனர். 2014 முதல் சின்ஜியாங்கில் முஸ்லிம்கள் மீது பிறப்பு வீதக் கட்டுப்பாட்டையும் சீனா பிரயோகித்து வருகின்றது.
முஸ்லிம்களின் பிறப்பு வீதத்தை குறைக்கும் வகையில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் அமுல் செய்யப்படுவதை கம்யூனிஸ கட்சியின் தலைமை பீடம் கட்டாயமாக்கி உள்ளது. முஸ்லிம்களின் பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பண ரீதியான ஊக்குவிப்புக்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 1776 முதல் பல்வேறு காலகட்டங்களில் நிர்ப்பந்தம் காரணமாக ஹான் இன சீனர்கள் சின்ஜியாங் மாநிலத்தில் குடியேறினர். 19ம் றூற்றாண்டின் ஆரம்ப கட்ட குடிசன மதிப்பீட்டின்படி இந்தப் பிராந்தியத்தின் மொத்த சனத்தொகையில் 75 வீதமானவர்கள் ஊஹிகுர் இனத்தவர்களாக இருந்தனர். மனித உரிமை கண்கானிப்பகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 1978ல் சீன பொருளாதார மறுசீரமைப்பின் ஆரம்பத்தின் போது சனத்தொகை திட்டமில் காரணமாக ஊஹிகுர் இனத்தவர்களின் எண்ணிக்கை 42 சதவீதமாக வீழ்ச்சி கண்டது.
ஊஹிகுர் மக்கள் மீது நீண்ட காலமாக பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான பட்டினியாலும் வறுமையாலும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இந்தப் பிரதேச அரச உத்தியோகத்தர்களையும் மாணவர்களையும் ஏனைய பொது மக்களையும், முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் நோன்பிருக்க விடாமல் அதிகாரிகள் பல்Nவுறு அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருகின்றனர். 2015ல் சீனாவின் ஆளும் கம்யூனிஸக் கட்சி சின்ஜியாங்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. சுதந்திர மாநிலம் ஒன்றை நிறுவப் போராடி வரும் ஊஹிகுர் தீவிரவாதிகள் மோசமான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியே பீஜிங் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
இதுவரை இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள இராணுவ அடக்குமுறை மற்றும் பட்டினி என்பனவற்றுக்கு 35 மில்லியன் மக்கள் பலியாகி உள்ளனர். பொது போக்குவரத்து சேவைகள் உற்பட பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவது 2014 முதல் தடை செய்யப்படடுள்ளது. சில இடங்களில் சமய அடிப்படையில் திருமணங்கள் இடம்பெறுவதைக் கூட அதிகாரிகள் தடுத்துள்ளனர். பொது இடங்களில் முக்காடு அணிந்தால் அதற்காக 353 அமெரிக்க டொலர்களை தண்டப்பணமாகச் செலுத்த வேண்டும். ஹலால் அல்லாத உணவுகளை உண்ண மறுத்தால் அதுவும் ஒரு கிளர்ச்சி செயலாக கருதப்படுகின்றது. ஊஹிகுர் இனத்தைச் சேர்ந்த ஐந்து ஆண்களின் தாடி பிறைவடிவில் இருந்ததாக் கூறி அவர்களுக்கு எதிராக சமயத் தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2015 ஜுனில் இவர்கள் தடை செய்யப்பட்ட சமய நிகழ்வுகளில் பங்கேற்றார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post