இலங்கை முஸ்லிம் இளைஞர் கமர் நிஸாம்தீன் அவுஸ்திரேலியாவில் பங்கரவாத சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டங்கள் உள்ளனவா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. குற்றச்செயல்கள் தொடர்பான கடந்தகால ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவர் ஏன் திடீரென கைது செய்யப்பட்டார்?
பயங்கரவாதம் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் பொலிஸாரால் அவர் சில தினங்கள் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் இந்த அவசரம்? என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமர் நிஸாம்தீனின் கைது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர் கமர் நிஸாம்தீன் (25) பயங்கரவாத தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை அவர் பயிலும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைவரையும் இலங்கையரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
நிஸாம்தீனின் அறையில் இருந்த அவரது குறிப்புப் புத்தகமொன்றினை அவுஸ்திரேலிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவர் கடந்த 30 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு அத்தாட்சியாக இருந்தது அந்தக் குறிப்புப் புத்தகமே. அப்புத்தகத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மல்கொம் டேர்ன்புள் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் ஆகியோரின் பெயர் விபரங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு சிட்னி ஒபெரா ஹவுஸ், பொலிஸ் மற்றும் ரயில் நிலையங்களின் விபரங்களும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் குறிப்புப் புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது எனும் விபரங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. நிஸாம்தீனிடமிருந்து குறிப்புப் புத்தகமொன்று கைப்பற்றப்பட்டிருந்தால் அவுஸ்திரேலிய பொலிஸார் உடனடியாக அவரைக் கைது செய்திருக்கக் கூடாது. அவர் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்புப் புத்தகத்தில் அடங்கியுள்ள விபரங்களுக்கும் அவருக்கும் தொடர்புள்ளதாக கண்காணிப்பின் பின் உறுதிப்படுத்தப் பட்ட பின்பே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அத்தோடு அவருக்கு முன்பு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருந்துள்ளதா? அவருக்கெதிராக முறைப்பாடுகள் இருந்துள்ளனவா என்பவற்றையும் ஆராய்ந்து பார்த்ததன் பின்பே கைது செய்திருக்க வேண்டும்.
கடந்த 10 வருடங்களுக்குள் ஏழு பிரதமர்கள் அவுஸ்திரேலியாவில் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இறுதியாக பிரதமர் மால்கொம் டர்ன்புல் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி அவரது கட்சியின் சகாக்களாலே அகற்றப்பட்டிருக்கிறார். இவ்வாறான ஒரு நாட்டில் இலங்கை மாணவர் ஒருவரினால் பிரதமர் டர்ன்புல்லைத் தாக்குவதற்கு அரசியல் அல்லது சமய காரணங்கள் இருந்திருக்கும் என நம்ப முடியாது. முன்னாள் பிரதமரையோ முன்னாள் வெளிவிவகார அமைச்சரையோ அவர்களது பதவிக்காலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்ததற்கான எந்தச் சான்றுகளும் இல்லை.
நிஸாம்தீன் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவர். ஒரு பி.எச்.டி.மாணவர். அவர் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவரென்றால் அது தொடர்பான குறிப்புப் புத்தகங்களை எவ்வாறு கவனயீனமாக அவர் நண்பர்களுடன் தங்கியிருக்கும் பல்கலைக்கழக அறையில் வெளிப்படையாக வைத்திருக்க முடியும். ஏனையவர்கள் இலகுவில் அறியுமாறு வைத்திருக்க முடியாதல்லவா?
நிஸாம்தீனின் சகோதரர் இது ஒரு சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டென்றும் 6 வருடங்களாக அந்நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் பயிலும் அவர் நிச்சயமாக இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார் என தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
இவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தயாரானதாக எதுவித தகவல்களும் இல்லை. அவர் இதற்கு முன்பு அவ்வாறான நடவடிக்கையில் தொடர்புபட்டிருந்ததாக எவ்வித குற்றச்சாட்டுகளுமில்லை. ஆதாரங்களுமில்லை. இவரை ஏன் பொலிஸார் கைது செய்வதற்கு அவசரப்பட்டனர்?
இலங்கையில் கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான இருநாள் கருத்தரங்கில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவரைக் கைது செய்ய காரணமாக இருந்த சக்திகள் பொலிஸாரை ஊக்குவித்தனவா என்ற சந்தேகம் எழுகின்றது. இக்கருத்தரங்கில் இங்கு குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க பசுபிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரொஜர் ஜே நொபட்டும், இஸ்ரேலின் அடலோ கொன்சல்டிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் (இளைப்பாரிய லெப்டின் ஜெனரல்) ஒரிட் அடலோவும் இரு கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தனர். இக்கட்டுரைகள் சதியின் பின்னணியிலே சமர்ப்பிக்கப் பட்டிருக்கலாம். நிஸாம்தீன் கைது விவகாரம் பாதுகாப்பு கருத்தரங்கு முடிவுற்றதன் பின்பே ஊடகங்களில் வெளியாகின என்றும் சட்டத்தரணி சுஹைர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment