Top News

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரைக்குத் தடையுத்தரவு பெற முயற்சி



எம்.எஸ்.எம். ஹனீபா 
அம்பாறை, இறக்காமம் மாயக்கல்லி மலையடிவாரத்தில், விகாரையொன்றை அமைக்க, ஒரு ஏக்கர் காணிக்கு புனித பூமி உறுதி வழங்குமாறு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அநுரதர்மதாஸாவால், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு வழங்கியுள்ள கட்டளைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறவுள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம்,தெரிவித்தார்.
இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட, மாணிக்கமடு - மாயக்கல்லி மலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, தொல்பொருள் என்று தெரிவிக்கப்பட்டு, சில பௌத்த பிக்குகளால் சிலை ஒன்று வைக்கப்பட்டதையடுத்து, இறக்காமம் பிரதேச முஸ்லிம்களுக்கும் பௌத்த பிக்குகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு, சுமூகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அம்பாறை, மேலதிக மாவட்ட நீதிமன்றத்தில் பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கில், மாயக்கல்லி மலையடிவாரத்துக்கு எவரும் நுழையாதவாறு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மாகாண காணி ஆணையாளரால், 01 ஏக்கர் காணிக்கு புனித பூமி உறுதி வழங்குமாறு, பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதெனவும், சமீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர், ஜனாதிபதியினதும் பிரதமரினதும் செயலாளர்கள், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், அம்பாறை மாவட்ட செயலாளர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென, காணி ஆணையாளரால், பிரதேச செயலாளருக்கு, இவ்வாண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள உத்தரவுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற இன உறவு சீர்குலைவதைத் தடுப்பதற்காகவும், மாயக்கல்லி பிரதேசத்தில் விகாரை அமைக்க முடியாது எனக் கோரியே, இத்தடையுத்தரவு பெற்றுக் கொள்வதற்காக, அம்பாறை மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, சமீம் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post