ஒவ்வொரு வருடமும் 2500 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆரம்பக்கட்டத்திலேயே பரிசோதித்துப் பார்த்தால் இந்த நோயை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதத்தை மார்புப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தி வைத்து உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக நாம் ஒக்டோபர் மாதத்தை நாம் பிரகடனப்படுத்தி இருக்கின்றோம்.இது தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்தாதல் இந்த நோய் அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஒரு வருடத்துக்கு சுமார் 2500 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுகின்றனர்.இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாம் எமது வைத்தியசாலைகளில் விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றோம்.ஆனால்,அந்த நோய் மூன்றாம் கட்டத்தை அடைகின்றபோதுதான் நோயாளர்கள் வைத்தியசாலையை நாடுகின்றனர்.
ஆரம்பத்திலேயே விரைந்தால் இந்த நோயைக் குணப்படுத்த முடியும்.கடந்த அரசில் ஒரு புற்று நோயாளிக்கு 15 லட்சம் ரூபாவுக்கு மேல் மருந்துகள் வழங்கப்பட்டதில்லை.ஆனால்,எமது அரசு அந்தத் தொகையை அதிகரித்துள்ளது.
உண்மையில் ஆரம்பக் கட்டத்தில் வைத்தியசாலையை அணுகினால் நோயையும் கட்டுப்படுத்த முடியும். அரசால் பெரும் தொகையான பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
இந்த நோயை ஒவ்வொரு மாவாட்டத்திலும் கண்டறிவதற்காக இன்ட்ரா பவுண்டேசன் என்ற நிறுவனம் முன்வந்துள்ளது.இதற்காக இந்தியா 80 கோடி ரூபாவை வழங்கவுள்ளது.இந்த நிறுவனம் கிராமங்கள் தோறும் சென்று பெண்களை பரிசோதிக்கும்.
மூன்று வருடங்களுக்கு மாத்திரம் இந்த நிதி வழங்கப்படும்.அதன் பின் இலங்கை அரசே நிதியைச் செலவிடும்.ஆகவே,இந்த நோய் தொடர்பில் நாம் அனைவரும் விழிப்புடன் இருந்தால் ஆரம்பத்தில் இதைக் கட்டுப்படுத்துவதோடு பணத்தையும் மீதப்படுத்த முடியும்.-என்றார்.
[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]