ஏறாவூர் ஆதார வைத்தியசாலை 30 கோடி ரூபா செலவில் கட்டடம் , வைத்திய கருவிகள் மற்றும் ஆளணிகள் போன்ற முழுமையான சகல வசதிகள் கொண்ட வைத்தியசாலையாக விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் உறுதியளித்துள்ளார்.
அந்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்த்து வைக்கும் நோக்கில் பிரதி அமைச்சர் ஞாயிற்றுக் கிழமை [21.10.2018] அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.வைத்தியசாலையின் நிர்வாகத்தைச் சந்தித்து குறை,நிறைகளை கேட்டறிந்த பின் மேற்கண்டவாறு வாக்குறுதியளித்தார்.இது தொடர்பில் பிரதி அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்;
ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு குறை,நிறைகளை கேட்டறிந்து வருகின்றேன்.முடியுமானவரை குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றேன்.அதன் அடிப்படையில்,ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து இங்குள்ள குறைகளை அறிந்துகொண்டேன்.
30 கோடி ரூபா செலவில் அணைத்து வசதிகளும் கொண்ட முழுமையான வைத்தியசாலையாக இதை அபிவிருத்தி செய்வேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.தேவையான வைத்திய உபகரணங்கள்,தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஆளணிகள் மற்றும் கட்டடம் என அணைத்து வசதிகளும் இதற்குள் அடங்கும்.-என்றார்.