கல்முனை பிரதேச செயலக வளவில் அனுமதியின்றி கள்ளத்தனமாக கோயில் கட்டப்படும் முயற்சிக்கெதிராக கல்முனை மேயர் ரக்கீப் நீதிமன்றத்தை நாடியிருப்பதை உலமா கட்சி வரவேற்பதுடன் இப்படியான அத்துமீறல்கள் மூலம் அமைதியான கல்முனையை சீர் குலைக்கும் முயற்சி நடக்கிறதா என்பதை அரசு ஆராய வேண்டும் எனவும் கேட்டுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
கல்முனை என்பது தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமாகும். இங்குள்ள பிரதேச செயலகம் 100 வீதம் தமிழ் மொழியில் நிர்வாகத்தை கொண்டதாகும்.
அப்படியிருந்தும் சட்டத்துக்கு முரணாக கல்முனை உப பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டு அது தமிழ் பிரதேச செயலகம் என சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை பிரயோகம் சட்டத்துக்கு முரணானதாகும்.
இந்த நிலையில் மேற்படிப்செயலக வளவில் இரவோடிரவாக கோயில் கட்டப்பட்டதானது இன முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாகும். இவ்வாறு செய்வதன் மூலம் சகல மதத்தவரும் தமக்கான வணக்கஸ்தலங்களை கல்முனை பிரதேச செயலக வளவில் கட்ட முணையலாம். அதன் போது கல்முனை பிரதேச செயலகத்தை கோவிலுக்குள்ளும் மஸ்ஜிதுக்குள்ளும் பன்சலைக்குள்ளும்தான் வைத்திருக்க வேண்டி வரும்.
பிரதேச செயலகம் என்பது அரச நிறுவனமாகும். அதற்குள் அனுமதியின்றி வணக்கஸ்தலங்கள் கட்டுவது நாளை அனைத்து அரச நிறுவனங்களுக்குள்ளும் இத்தகைய அத்துமீறல் நடக்க வழி வகுக்கும்.
ஆகவே இத்தகைய அத்துமீறிய செயலுக்கெதிராக கல்முனை மேயர் சட்டத்தை நாடியிருப்பதை உலமா கட்சி வரவேற்கிறது.
(எஸ்.அஷ்ரப்கான்)