ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினை மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பையேற்று, துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று (03) ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
ஒலுவில் துறைமுக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கிலான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான கருத்துகளையும் தீர்வுத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விளக்கமளித்தார்.
கடலரிப்பினால் அழிந்துபோகும் நிலங்களை மீட்பதற்கு, கடல் மண்ணை அகழ்ந்து கடற்கரையை மூடும் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் டெடிடா நிறுவனம் 50% நிதியை வழங்க முன்வந்துள்ளது. எஞ்சியுள்ள 50% பணத்தை அரசாங்கம் சார்பில் பெற்று குறித்த இயந்திரத்தை 4 மாதங்களுக்குள் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ள அல்ஜாயிஸா பாடசாலை மைதானத்தை உடனடியாக விடுவிக்குமாறு அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதன்போது உத்தரவிட்டார். அத்துடன், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரபாநகர் துறைமுக வீட்டுத்திட்ட காணிகளை உடனடியாக ரத்துச்செய்து, அவற்றை பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு வழங்குமாறு இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது.
இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், எஸ்.எம்.எம். இஸ்மாயில், துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்க, தொழில்நுட்ப பணிப்பாளர் சந்திரகாந்தி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Post a Comment