வில்பத்துவை அழிப்பதாக தன்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் நகரசபை மைதானத்தில் இன்று காலை (05) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் இடம்பெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
மன்னார் மாவட்டத்திலிருந்து வாழ்ந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக வேறு மாவட்டங்களில் வாழ்ந்த இந்தப் பிரதேச மக்களுக்கே மீண்டும் குடியேறுவதற்காகவே அரசாங்கத்தினால் காணித் துண்டுகள் வழங்கப்பட்டன. அதுவும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்கிய விஷேட செயலணி ஒன்றின் மூலமே இவர்களுக்கு சட்டபூர்வமாக காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பையேற்ற பின்னர் ஓரங்குல நிலமேனும் இந்த மக்களுக்கு வழங்கப்படவுமில்லை, அந்த மக்கள் முறையற்றங்களிலும் ஈடுபபடவில்லை. 2009 ஆம் ஆண்டு சமாதானம் ஏற்பட்ட பின்னர் இந்த பிரதேசங்களுக்கு குடியேற வந்து காணி இல்லாதவர்களுக்கு உரிய முறைப்படியே காணிகள் வழங்கப்பட்டன. அதேபோன்றே 03 இலட்சம் தமிழ் மக்கள் மெனிக்பாமில் தஞ்சமடைந்து வாழ்நதபோது அவர்களும் தமது இடங்களில் குடியேற்றப்பட்டனர். சரியான நடைமுறைகளின்படியே இவை நடைபெற்றதேயொழிய எதுவுமே சட்டவிரோதமாக இடம்பெறவில்லை.
எனினும் அரசாங்கத்தில் நான் அமைச்சராக இருக்கின்றபடியால், அரசாங்கத்தை கஷ்டத்தில் போடுவதற்காக, வில்பத்தை நான் அழிப்பதாக எனக்கெதிராக மிகவும் மோசமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதியாக உங்களை ஆக்குவதிலே 90% சதவீதமான எமது மாவட்ட மக்கள் பங்களித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையிலும் எமது மக்களைப் பொறுத்தவரையிலும் சூழலை பாதுகாப்பதற்காகவும், வனவளத்தை காப்பாற்றுவதற்காகவும் ஐனாதிபதியாகிய நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் புனித திருத்தலங்கள் ஒன்றான மடுமாதா தேவாலயத்தை அண்டியுள்ள பிரதேசத்தை, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தியமைக்காக உங்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
நமது நாட்டிலே சுற்றாடலை பாதுகாப்பதற்காக தாங்கள் எடுத்துவரும் முயற்சிகள் எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த அமைச்சின் மூலம் சுற்றாடலை மேம்படுத்துவதற்காக இறுக்கமான சட்டங்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவரும் உங்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை, அமைச்சரவையின் அங்கத்தவர் என்ற வகையில் விஷேடமாக தெரிந்து வைத்திருக்கின்றேன் என்றார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது, சுற்றாடல் தேசிய மாநாட்டை மன்னார் மாவட்டத்தில் நடத்துவது எமக்கு பெருமை தருகின்றது. அதற்காக இந்த மாவட்ட மக்களின் பிரதிநிதி என்ற வகையில் ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
வரண்ட பிரதேசமாக இருக்கும் மன்னார் மாவட்டத்தில், தொடர்ச்சியான வரட்சி காரணமாக மக்களும், குறிப்பாக விவசாயிகளும், கடந்த காலங்களில் பாதிப்படைந்தனர். மாவட்டத்தின் சவாலாக உருவெடுத்துள்ள நீர் பிரச்சினைக்கு இந்த மாநாடு வடிகான் அமைக்குமென நம்புகின்றேன்.
இந்த அமர்விலே காட்டப்பட்ட விவரணப்படங்களை பார்க்கும் போது, மண்அகழ்வு நடவடிக்கையினால் இந்த மன்னார் மாவட்டம் எவ்வளவு தூரம் பாதிப்படைந்திருக்கும் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. வீட்டுத்தேவைகளை விட வியாபார நோக்கிலேயே இந்த மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த விடயத்திலே பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு பாரிய கடப்பாடு இருக்கின்றது. மண் அகழ்வுக்கு பேர்மிட் கொடுக்கும்போது, பொருத்தமான சாத்தியமான இடங்களைத் தெரிந்து, அதனை வழங்குவதன் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும்.
நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி, இறுக்கமான சட்டங்களின் மூலமும், விதிமுறைகளின் மூலமும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. இல்லாவிட்டால் இந்த மாவட்டம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் துர்பாக்கிய நிலையே ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான மகிந்த அமரவீர, மகிந்த சமரவீர, கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர்களான காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், ஸ்ரீயானி விஜேவிக்ரம, வீரகுமார திஸ்ஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அன்ரன் மோகன்ராஜ் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், முப்படைகளின் பிரதிநிதிகள், ஐனாதிபதியின் செயலாளர் உட்பட ஏனைய அமைச்சின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.