Top News

கண்டி வன்முறையில் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இன்னமும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை

கண்டி வன்முறையில் பொது மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடுகள் இன்னமும் வழங்கப்படவில்லை. ரெப்பியா சட்டம் இரத்துச் செய்யப்படுமாயின் கண்டியில் இழப்பீடுகளைப் பெறவிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியமாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் காணாமல் போனவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது. யுத்தத்தால் காணாமல்போனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டாலும், சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடுகள் பற்றி இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
காணாமல்போனோர் அலுவலகம் ஏழு மாதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று வருகிறது. எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் பொறிமுறைகள் மீது அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க முன்னர் அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஒருவர் காணாமல்போயிருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் கிடப்பில் காணப்படும். இவ்வாறான நிலையில் இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியான முடிவொன்றை வழங்கும் சட்ட ஏற்பாடாக இருக்க வேண்டும் என்றார். மன்னாரில் பாரிய மனித புதைகுழியொன்று தோண்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மாத்தளையிலும் புதைகுழியொன்று மீட்கப்பட்டிருந்தது. இதற்கான விசாரணைகள் எதுவும் முடிவுக்கு வரவில்லை. காரணமானவர்கள் யார்? புதைக்கப்பட்டவர்கள் யார் என்பது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. அதேநேரம், இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'ரெப்பியா' சட்டத்தை இல்லாமல் செய்கிறது. அப்படியாயின் ரெப்பியா சட்டத்தின் கீழ் உள்ள விடயங்களுக்கு விசேட சட்ட ஏற்பாடு இருப்பது அவசியமாகும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முன்னர் அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.
Previous Post Next Post