Top News

புத்தளம்: வீட்டுப் பிள்ளையாக றிஷாத், ஊரான் பிள்ளையாக ஹக்கீம்

(ஹபீல் எம்.சுஹைர்)

இலங்கை நாட்டில் குப்பை கொட்டுதல் ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்போது இலங்கை அரசானது கொழும்பில் குப்பைகளை சேகரித்து, புத்தளத்தில் கொட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இது எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற புத்தளத்துக்கு வழி வகுக்கும் என்ற ரீதியில், தற்போது வீதியில் இறங்கி, தொடர் தேர்ச்சியான போராட்டத்தை புத்தளம் மக்கள் ஆரம்பித்துள்ளனர். புத்தளம் மக்கள் வீதிக்கு இறங்கியது சில நாட்களுக்கு முன் என்றாலும், இந்த கதை ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு எதிர்ப்புக்களை காட்டி வருகின்றனர்.

இதன் பாதிப்பு முஸ்லிம்களுக்கே அதிகமாக உள்ளதால், இன்று முஸ்லிம் கட்சித் தலைவர்களாக உள்ள அமைச்சர் றிஷாத் மற்றும் அமைச்சர் ஹக்கீம் ஆகியோரது காத்திரமான செயற்பாடுகள் மிகவும் அவசியமானவை. அதன் அடிப்படையில் மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரு அமைச்சர்களும் புத்தள போராட்ட களத்துக்கு சென்றிருந்தனர். இவர்கள் இருவரும் அங்கு சென்று, நடந்து கொண்ட விதத்தை ஒப்பீடு செய்து பார்த்தால், அந்த மக்களின் உணர்வுகளை உண்மையாக புரிந்து, செயற்பட்ட தலைவன் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.


அமைச்சர் ஹக்கீமின் முகநூல் பக்கத்தில், அவரது புத்தள கள விஜயம் தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. அதில் “ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டிருக்கிறார் “ என்ற வாசகத்தோடு, அது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இப்போதே அமைச்சர் ஹக்கீம் விசாரித்து கொண்டிருக்கின்றார். அதுவும், தனது பக்கட்டினுள் கையை வைத்துக் கொண்டு, நன்றாக சிரித்துக்கொண்டு விசாரிக்கின்றார். உண்மையில் இங்கு விசாரிக்கப்பட வேண்டியது, புத்தள மக்கள், அமைச்சர் ஹக்கீமைத் தான். அவருக்குத் தான் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும், இது தொடர்பான சூடானதும், அரசியல் உச்ச கதையாடல்களும் தெரிய அதிக வாய்ப்புள்ளது. அதுவே அம் மக்களுக்கு தேவையானதும் கூட.


நன்றாக சிந்தித்து பாருங்கள், ஒரு விடயம் தொடர்பில், அது சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒருவர் விசாரிப்பாராக இருந்தால், அவருக்கு அது பற்றிய பூரண தெளிவு இல்லை என்று தானே அர்த்தம். அந்த போராட்டத்தின் கோரிக்கை ஒன்றும் புரிந்து கொள்ளாத வண்ணம் பல சூத்திரங்கள் தொடர்பு பட்டதுமல்ல. இதிலே விசாரிக்க என்னவுள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இது பற்றிய தெளிவு இல்லாதவர், இவ் விடயத்தில், இதற்கு முன்பு கரிசனை கொண்டு செயற்பாட்டிருப்பாரா? 

அமைச்சர் ஹக்கீம், இவ்வாறு அந்த மக்கள் தொடர்ந்து போராடுவதை தீர்வாகவும் குறிப்பிட்டுள்ளதாக அவரது ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதனை கூற அமைச்சர் ஹக்கீம் என்ற ஒரு நபர் தேவையில்லை. அமைச்சர் ஹக்கீமை எல்லாம் நம்பி வேலையில்லை என்று தான், அந்த மக்கள் இந்த போராட்டத்தையே முன்னெடுத்துள்ளனர். அமைச்சர் ஹக்கீமின் மேற்குறித்த கூற்றின் மூலம், அது தனது சக்தியால் சாதிக்க முடியாத ஒரு காரியம் என்ற விடயத்தை துல்லியமாக்கியுள்ளார். தன்னால் குறித்த விடயத்தை சாதிக்க முடியாதென்றால், அம் மக்களோடு மக்களாக போராட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மக்கள் பிரதிநிதியான அமைச்சர் ஹக்கீமை போற்றி புகழ்ந்திருக்கலாம். இவ் விடயங்களை எடுத்து நோக்குகின்ற போது, அவர் இவ் விடயத்தை ஊரா விட்டுப் பிள்ளை போன்று தூர நின்று கையாள்வதை எடுத்து காட்டுகிறது.


அதே நேரம் அமைச்சர் ஹக்கீம் சென்ற தினத்துக்கு மறு நாள் புத்தளத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் றிஷாத், அந்த மக்களின் போராட்டத்தில் தானும் ஒருவனாக கலந்து கொண்டிருந்தார். இதனை விட ஒரு உறுதியான ஆதரவையும், செய்தியையும் யாராலும் வழங்கிவிட முடியாது. கலந்து கொண்டிருந்ததோடு மாத்திரமன்றி அரசை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துமிருந்தார். இவ்வாறு கடும் வார்த்தகளால் விமர்சனம் செய்ய, அமைச்சர் ஹக்கீம் அறியாதவருமல்ல. ஒரு அரசின் திட்டத்தை, ஒரு அரசில் இருந்து கொண்டு விமர்சிக்கும் போது, அது ஒரு அரசியல் வாதியின் சுய அரசியலில் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கெல்லாம் அஞ்சாமல் தான், அமைச்சர் றிஷாத் அவ்வாறு கதைத்துள்ளார். 

குறித்த குப்பை கொட்டும் விடயத்தில் அரசு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளதால், எப்படியாவது புத்தள மக்களின் தலையில் கொட்டி முடித்துவிட உச்ச பலத்தை பிரயோகின்றது. அதற்கு ஒரு பலமிக்க மக்கள் பிரதிநிதியான அமைச்சர் றிஷாதின் செயற்பாடு பாரிய சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான விடயங்களின் மூலம், அமைச்சர் றிஷாத் புத்தளத்து மக்கள் பிரச்சினையை தனது வீட்டுப் பிரச்சினையாக கையாள்வதை அவதானிக்க முடிகிறது. புத்தள மக்கள், தங்களது மக்கள் பிரதிநிதியாக செயற்படும் தகுதி யாருக்கு உள்ளது என்பதை தீர்மானிக்க, இதனை விட தெளிவான விடயமொன்று தேவையில்லை.
Previous Post Next Post