Top News

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை, ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்படும்

மாகாண சபைத் தேர்தலை, தாமதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் அரசுக்குக் கிடையாது. 
மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையிலுள்ள குறைபாடுகளினால், அவ்வறிக்கை அங்கீகரிக்கப்படாமையே இத்தாமதத்திற்குக் காரணமாகும். இந்தத் தாமதத்தை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், என் மீது சுமத்துவது அர்த்தமற்றதாகும் என், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

   அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொது நலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றக் கருத்தரங்கு, 2019 - தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
   அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது கூறியதாவது,
   மாகாண சபைத் தேர்தலைத்  தாமதியாது உடனடியாகவே நடாத்தும் பொறுப்பு, இது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான என்னிடமில்லை, இந்தப் பொறுப்பை, அதி உயர் பாராளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து, என் மீது குற்றம் சுமத்துவது அர்த்தமற்றதாகும். 

பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட மாகாண சபைத் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை, தற்போது மீளாய்வுக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது.
   அந்த அறிக்கையில் திருத்தங்கள்  ஏதும் செய்யப்படவேண்டுமென்றால், அது பூர்த்தி செய்யப்பட்டு, எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்காக, சபாநாயகரினால் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில், குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை, ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்படும். 
   அதன் பின்பு, அது திருத்தச் சட்டமாக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும். 

   பொது நலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றக் கருத்தரங்கு, எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை, கொழும்பு - பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்றார்.

- ஐ. ஏ. காதிர் கான் 

Post a Comment

Previous Post Next Post