Top News

”ஆமைக் கழுத்து அரசியல்வாதிகள்”

அரசாங்கத்தின் அபிவிருத்திகளை தமது கட்சியின் சாதனைகளாகக் காட்டி, மக்களை சிலர் ஏமாற்றி வருவதாக வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துக்களால் வாய்விட்டுச் சிரிக்காத எவரும் இருக்கவில்லை. 

அரசாங்கம் என்றால் என்ன? என்பதை சில மக்கள் பிரதிநிதிகள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். மக்களை மக்கள் மக்களால் ஆளும் முறையே அரசாங்கம். எந்த அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் வாக்களித்தே தெரிவு செய்கின்றனர். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே, எம்பிக்களாகவும் அமைச்சர்களாகவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். நீதித்துறை, நிர்வாகத்துறை சட்டத்துறைகள் இதிலிருந்தே உருவாகின்றன. இதில் சட்டத்துறையும் நிர்வாகத்துறையும் அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புள்ளவை.

சட்டத்தை உருவாக்குவதில் மக்களால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடிப்பங்கு உண்டு. மக்களின் தேவைகளை அறிந்து தமது அமைச்சுக்களூடாக நிதியைப் பெற்று, அபிவிருத்திகளைச் செய்பவர்களும் இவர்களே. எந்த அமைச்சின் நிதி ஒரு அபிவிருத்திக்கு செலவிடப்பட்டுள்ளதோ, அந்த அமைச்சரே அதற்குச் சொந்தக்காரர். ஏன் உரிமைக்காரனும் அந்த மக்கள் பிரதிநிதியே! ஓர் ஆணின் உயிரணு எந்தப் பெண்ணின் கருவறைக்குள் செலுத்தப்பட்டாலும் குறித்த ஆணே பிள்ளைக்குத் தகப்பன். மாறாக வைத்தியரோ, கருவில் சுமந்த பெண்ணோ பிள்ளையின் தந்தையாக முடியாது. இந்த யதார்த்தத்தை உணர்ந்திருந்தால் அபிவிருத்திகள், சாதனைகளுக்குப் பின்னாலுள்ள பின்னணிகள் எவை? என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்காது. ஒருவாறு அபிவிருத்திகள் அனைத்தும் அரசாங்கத்துடையதுதான் என்ற வாதத்தை எடுத்துக் கொண்டால், எந்த நிகழ்ச்சிகளில் யார் பங்குபற்றுவது என்ற குழப்பம் ஏற்படும்.

இவ்விடத்தில் அரசாங்கம் என்றால் யார்? என்பதற்கு விளக்கம் சொல்லப்பட வேண்டியுள்ளது. அரசின் வேலைகளை தமது கட்சியின் சாதனைகளாகக் காட்ட எவருக்கும் முடியாது போனால் அபிவிருத்தி நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் அனைத்திலும் அரசாங்கத்தை தெரிவு செய்ய வாக்களித்த அத்தனை பேரையும், மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரவேண்டி ஏற்படும்.அவ்வாறு ஊரையே அழைத்து வந்தாலும் “யார் வேலைத்திட்டத்தை திறந்து வைப்பது” என்ற சர்ச்சையும் ஏற்படும்.

கடலுக்குள் வாழும் மீன்கள் வலைக்குள் அகப்படும் வரை அனைவருக்கும் சொந்தம். வலைக்குள் அகப்பட்ட பின்னர் அதன் உரித்து மீனவனுக்கே. இந்த அமர்க்களத்தை தவிர்ப்பதற்கே, அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசாங்க அதிபர்கள், தலைவர்கள், பிரதிநிதிகள் எனப் பதவிகள் வகைப்படுத்தப்பட்டு பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்பாட்டு ரீதியாக எழும் சிக்கல்கள், நிர்வாக முறைகளில் தோன்றும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கே உலகில் ஜனநாயக அரசியல் நடைமுறையிலுள்ளது. இதைப் புரிந்துகொள்ளாத சிலர், பாடசாலைப் பிள்ளைக்கு அதிபர் ஒரு புத்தகத்தை வழங்கினாலும் அரசாங்கப் புத்தகத்தை அதிபர் சொந்தம் கொண்டாடுகிறார் எனக் குறைப்படுவார்களோ தெரியாது. எனவே, ஒரு விடயத்துக்கு நிச்சயம் பொறுப்புதாரி அவசியம். இவ்வாறு எல்லா அதிபர்களும் பயந்தால் நாட்டிலுள்ள பத்தாயிரம் பாடசாலைகளிலுள்ள நாற்பது இலட்சம் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வழங்க எவரும் முன்வரப் போவதில்லை.

இதே யதார்த்தத்தில் சிந்தித்தால் பாடசாலை நிகழ்வுகள், வீதித்திறப்பு விழாக்கள், அரசாங்க வைபவங்கள் எதிலும் எந்த அரசியல்வாதிகளும் ஆமைபோல் தலைநீட்டக் கூடாது. அவரது சொந்த முயற்சிகளால் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி நிகழ்வுகளிலும், அந்த மக்கள் பிரதிநிதி கலந்துகொள்ளவும் முடியாது, கழுத்து நீட்டவும் இயலாது. அரசுக்கு வரைவிலக்கணம் தெரியாத சில பிரகிருதிகள், வெளியுலகை எட்டிப்பார்க்க “ஆமை கழுத்தை நீட்டுவது போல”, வயிற்றுப் பசியைப் போக்க எதையாவது கவ்விக்கொள்ளும் நோக்கில், “ஆமை கழுத்தை நிமிர்த்துவதைப் போலமாலைக்காக கழுத்தை நீட்ட முடியாத நிலையே ஏற்படும்.

நீண்டகால அகதிகளைக் குடியமர்த்தும் செயலணியைப் பொறுப்பெடுத்துள்ள வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர், இன்று வடபுல மக்களுக்காக தனது அமைச்சின் சில பகுதிகளையும் இழந்துள்ளார். அமைச்சிலுள்ள நிறுவனங்களை நீக்கினாலும் பரவாயில்லை, “தனது மக்களைக் குடியேற்றுவதற்கான அதிகாரம் மாத்திரம் தன்னிடம் இருந்தால் போதுமென்பதே” அவரின் நிலைப்பாடு. இது மட்டுமா, வடக்கில் இடம்பெறவுள்ள தேசிய மீலாத் விழாவுக்கு தனது அமைச்சிலிருந்தும் பெருமளவு நிதியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியுள்ளார். சிலர் சொல்வதைப் போல அரசாங்கத்தின் சேவைகள் என்றால் இதற்கு வேறு ஒரு அமைச்சு நிதி வழங்கியிருக்கலாம். ஏன் வழங்க வில்லை? எதையும் செய்விக்க ஓர் அழுத்தம் தேவை, எதையும் சாதிக்க ஓர் பலம் தேவை, எதையும் வெற்றிகொள்ள ஒருபின்புலம் அவசியம். இதற்காகவே மக்கள் தங்களுக்கென தலைவர்களைத் தெரிவு செய்கின்றனர்.

இந்தத் தலைவர்களின் சாதனைகள் ஒரு சமூகத்திற்கான அரசின் அங்கீகாரமே தவிர, அவற்றை அரசின் சாதனைகளாகக் கருத இயலாது. அவ்வாறு கருதுவதானால் அரசாங்கம் என்றால் யார்? என்பதற்கு சில பிரகிருதிகள் வரைவிலக்கணம் சொல்ல வேண்டி ஏற்படும். வடபுல முஸ்லிம்களின் தலைமைகளின் சாதனைகள் அனைத்தும், வடமாகாண அரசியல்வாதிகள் சிலரின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற மன நிலைப் பீதியே சிலரை இவ்வாறு பேச வைத்திருக்கும். அமைச்சுப் பதவிகளைத் தக்கவைப்பதை விட, அதிகாரத்தை தக்கவைப்பது பற்றி சிந்திப்பதே அரசியலில் பொருத்தமாக இருக்கும்.

-சுஐப் எம்.காசிம்-

Previous Post Next Post