இருபத்தி ஐந்தாவது வயதும் ஒவ்வொரு நாளாகக் கடந்து கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களாக மொறட்டுவையில்தான் வாழ்க்கை. அவ்வப்போது ஊருக்கு வந்தாலும் பெரும்பாலும் அதுவும் வீட்டோடு முடிந்துவிடுகிற விடுமுறைகள்தான். பெரியம்மாவின் மகளுக்கு பிள்ளை கிடைத்து 3 மாதமாகிறது. அதற்கிடையில் இரண்டு தடவை ஊருக்குப் போய்விட்டிருந்தாலும் இன்னும் பிள்ளையை போய்ப் பார்த்த பாடில்லை. இன்ன இன்னதெல்லாம் செய்ய வேண்டும், இன்ன இன்னாரை எல்லாம் சந்திக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போது என்னதான் ப்ளான் போட்டு வைத்திருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை இரவு திரும்ப பஸ் ஏறும்போது அதில் பாதியும் நடந்திருக்காது. இப்படி எதிர்பார்த்துப்போன சந்திப்புக்களே கிடப்பில் கிடக்க, அண்மையில் அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வுடன் எதேர்ச்சையாக ஒரு திருமணத்தில் பேசக் கிடைத்தது. எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் அன்றுதான் முதன்முதலாக அவரோடு பேசினேன். 1998 இல் நடந்த நூறாணியா வித்தியாலய பரிசளிப்பு விழாவில் வைத்து வாப்பா தந்துவிட்ட மாலை ஒன்றை மேடையேறிப் போட்டதற்கான சான்றாக வீட்டில் ஒரு புகைப்படம் இருந்தது. அது ஞாபகத்தில் இல்லாத நிகழ்வு. றிஸ்கானின் திருமணத்தன்று மணமகனோடு பள்ளியில் இருந்து திருமண வீட்டுக்கு சென்று அமர்ந்திருந்தபோது அமைச்சர் வந்தார். கூடவே ஒரு நகரசபை உறுப்பினர் உட்பட இன்னும் சிலர். மாப்பிள்ளை அப்போதுதான் மணமகளிடம் மஹரை கொடுத்துவிட்டு வந்து அமர்ந்திருந்த நேரம், அமைச்சர் உள்ளே வருவதற்கும், பவுஸ் மௌலவி திருமண வாழ்த்துப் பா பாடி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அமைச்சருக்கும் அந்தப் பாடலை கேட்க கொடுப்பினை இல்லை. அருமையான பாட்டு. எல்லோரும் சடசட வென விலகி அவரை உள்ளே விட்டனர். மலர்ந்த முகத்துடன் வந்த மனிதர் எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். மன்னிக்கவும். அவர் உக்கார்ந்த இடத்துக்கு அருகில் நான் இருந்திருந்தேன். அவருக்குப் பின்னால் அந்த நகரசபை உறுப்பினர் உட்கார்ந்தார். அமைச்சர் அமர்வதற்கு முன்னால் அங்கிருந்த எல்லா உலமாக்களுக்கும் தனித்தனியே ஸலாம் சொன்னார். 'கண்ணியமிக்க உலமாக்களே' என்று அவர் எல்லா உரையின் ஆரம்பத்தில் எப்படி விளிப்பாரோ, அதே மாதிரி அங்கும் உலமாக்களுக்குத்தான் முதல் மரியாதை. சிற்றுண்டிப் பரிமாறல் நடந்துகொண்டிருந்தது. முன்னுக்கிருந்த ஒரு ஆலிம், ஒரு சம்சாவை எடுத்து அமைச்சரிடம் கொடுத்தார். அமைச்சர் அதை ஒரு கடி கடித்த பின், அந்த சம்ஸா பின்னாலிருந்த நகரசபை உறுப்பினரின் கைக்குத் தாவியது. 'என்ன சேர்.. புல்லுமலைப் பிரச்சனை என்ன மாதிரி' என்று ஒரு ஆலிம் கதையைப் போட்டார். அன்று வெள்ளிக்கிழமை புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை தொடர்பாக எதிரும் புதிருமான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. 'எல்லா Permission உம் எடுத்து செய்றாங்க. சட்ட ரீதியா வாறத சட்ட ரீதியா பேஸ் பண்ணுவம்' என்று உறுதியான குரலில் அமைச்சர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சம்ஸா கொடுத்த அதே ஆலிம் திரும்பவும் ஒரு இனிப்புப் பண்டத்தை எடுத்து அமைச்சரிடம் கொடுத்தார். ஒரு சின்னக் கடி. அந்த இனிப்புப் பண்டமும் பின்னாலிருந்த நகரசபை உறுப்பினர் கைக்கு தாவியது. அவர் வாங்கிக் கொண்டார். இடைக்கிடையே அமைச்சர் சில ஆலிம்களுடன் அரபியிலும் பேசிக் கொண்டார். மாப்பிள்ளையின் முதுகில் தடவி 'என்ன மாப்பிள்ளை... எல்லாம் கைர் தானே' என்று குசலமும் விசாரித்தக் கொண்டிருந்தார். இப்போது இன்னொரு ஆலிம் ஒரு வாழைப் பழத்தை எடுத்து அமைச்சருக்கு கொடுத்தார். அதை எடுத்துக் கொண்ட அமைச்சர், சிறிது நேரத்தில் அப்படியே அதை அந்த வாழைப்பழத் தட்டில் வைத்துவிட்டார். நான் மெதுவாக பின்னாலிருந்த நகரசபை உறுப்பினரை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். பிறகு திடீரென வந்த மணமகளின் தந்தை, 'என்ன சேர் குடிப்பம்' என்று கேட்க, 'ஒன்றும் வேண்டாம்... அல்ஹம்துலில்லாஹ்' என்று அமைச்சர் சொன்னார். 'இல்ல சேர்.. பிளேன்டி ஒன்டு குடிப்பம்... வாழைப்பழம் ஒன்டு எடுங்களன் சேர்' என்று வாழைப்பழம் ஒன்றை தட்டில் இருந்து எடுக்கப்போனார். 'நான் எடுத்திட்டன்... அல்ஹம்துலில்லாஹ்' என்று அமைச்சர் சொல்லவும், இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த நான் உடனே முந்திரிக் கொட்டை மாதிரி 'இல்ல.. வாழைப்பழம் எடுக்கல்ல' என்று சொல்லி விட்டேன். அமைச்சர் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் நான் சொல்லியிருக்க வேண்டும். மணமகளின் தந்தை அப்படியே போய்விட்டார். உடனே அமைச்சர் என்னை திரும்பிப் பார்த்து 'நான் வாழைப்பழம் எடுத்தனா இல்லையா?' என்று சற்று சீரியஸாகவும் மென்மையாகவும் கேட்டார். 'எடுத்திங்கதான்... ஆனா நீங்க சாப்பிடல்ல' என்று நான் பவ்வியமாகச் சொன்னேன். 'அதத்தான் நானும் சொன்னன். எடுத்தன் என்டுதானே சொன்னன். நான் ஒரு நாளும் பொய் சொல்லமாட்டன்' என்றார். நான் அப்படியே Lock ஆகிவிட்டேன். மெதுவாகப் புன்னகைத்துவிட்டு கையிலிருந்து சம்ஸாவை என்னுடைய வாயில் போட்டுத் திணித்துக் கொண்டேன். அவர் சொன்னதும் உண்மைதான். அமைச்சர்கள் பொய் சொல்லுவதில்லை. இதற்குப் பிறகுதான் நான் என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். இன்னாருடைய மகன் என்று சொன்னேன். நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றியும் தம்பியைப் பற்றியும் கேட்டார். நான் வலிந்துபோய் என்னை அறிமுகம் செய்ததற்கு காரணமும் இருந்தது. பிறகு பிளேன்டீ வந்தது. ஒரு மிடறு குடித்தார். வழக்கம் போல தேநீர்க்கோப்பை பின்னாலிருந்த நகர சபை உறுப்பினரின் கைக்குப் போனது. சொல்லி வைத்தாற்போல அவர் சிந்தாமல் வாங்கிக் கொண்டார். இதெல்லாம் அமைச்சரின் தற்காலிக மெமரியில் கூட ஞாபகத்தில் இருக்காது என்று எனக்குத் தெரியும். அவர் என்னை மறந்திருப்பார். இன்னுமொரு கல்யாண வீட்டிலும் வாழைப்பழம் எடுத்திருப்பார். அங்கும் பொய் சொல்லி இருக்க மாட்டார். ஆனால் எனக்குள் அன்றெல்லாம் ஒரே சந்தோஷம். ஏனெனில் அமைச்சர்கள் பொய்சொல்வதில்லை. அமைச்சர் 'நான் பொய் சொல்வதில்லை' என்று சொன்ன பிறகு, நான் என்னை வலிந்து அறிமுகம் செய்து கொண்டதற்கும், என் மகிழ்ச்சிக்கும் காரணம் இதுதான். அப்துர் றவூப் மௌலவி மீது 'வளகுகளை ஏமாற்றிப் பெற்றார்' என்று எனது பெற்றோர் தொடர்ந்திருந்த வழக்கு வெற்றி பெரும் தருவாயில், எங்களது காணிகள் திரும்பக் கிடைக்க இருந்த நேரத்தில் எங்களின் வீட்டுக்கு வந்து 'அந்த வழக்குகளை வாபஸ் வாங்குங்கள். உங்களுக்கு வரவேண்டிய மூன்று வளகும் மூன்று வீடும் நான் தருகிறேன்' என்று என்னுடைய உம்மாவிடம் சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போனவர்தான் கௌரவ இராஜாங்க அமைச்சர் தாஜூல் மில்லத் கலாநிதி MLAM. ஹிஸ்புழ்ழாஹ் PhD அவர்கள். இது வரை நிறைவேற்றப்படாத சத்தியத்தை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அந்த திருமண வீட்டில் எனக்குப் பிறந்தது. ஏனெனில் அமைச்சர்கள் பொய் சொல்வதில்லை. நீங்கள் வாப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியமல்ல. உம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியம். அது உம்மாவிற்கு மூத்த வாப்பா கொடுத்த காணிகள். எங்களுக்கு சேர வேண்டிய சொத்து. நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ தந்து தீர்க்க வேண்டிய கடன். என்னுடைய உம்மாவிற்காக நான் உங்களிடம் கேட்டுக் கொண்டேயிருப்பேன். இன்னொரு முறை நாம் சந்தித்தால் பேசக் கிடைத்தால் நான் பேசுவேன். நீங்கள் ஒரு வல்லிய அரசியல்வாதி என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் அடுத்த முறை 'நான் பொய் சொல்வதில்லை' என்று என்னிடம் சொல்லிவிடாதீர்கள் சேர். நன்றாக என்னைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் 'அரசியல் வாதிகள் பொய்சொல்பவர்கள்' என்பதை கேள்விப்பட்டவர்கள் அல்ல. அனுபவித்தவர்கள். பிறகு எல்லோரும் ஒன்றாக புகைப்படம் பிடித்துக் கொண்டோம். அமைச்சர் சிறிது நேரத்தில் போய்விட்டிருந்தார். "அமைச்சர்கள் பொய் சொல்வதில்லை" புகைப்படத்தில் அமைச்சருக்குப் பின்னால் நீலநிறச் சொக்காயும் கண்ணாடியும் போட்டிருப்பவன்தான் நான். எனது பெயர் ஸிந்தாஹ் நவாஸ்.