Minister and Leader of SLMC Rauff Hakeem |
நாச்சியாதீவு பர்வீன்
கடந்த அரசாங்கத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. உண்மையிலேயே முன்னைய அரசாங்கத்தின் தலைவிதி மாறியமைக்கு இந்த மாவட்டதில் நடைபெற்ற சம்பவங்களே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் உவர் நீர் கலப்புக்கு தீர்வாக அழுத்கம-மத்துகம -அகலவத்த ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை திங்கட்கிழமை (22) ஆரம்பித்து வைத்து அங்கு உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்தியாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் சில்பாக் அம்புள்ளே, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் விஜயமான,அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வி. ஹப்பு ஆராச்சி, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமன சேகர, அதன் தலைவர் ஏ.அன்சார், செயலாற்றுப் பணிப்பாளர் மஹியலால் டி.சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அமைச்சர்
இந்த பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்து வருகின்ற பெரும் பிரச்சினையான தூய நீரினை பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை இந்த பாரிய நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் வழங்க முடிவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிரதேசத்தில் குறிப்பாக மழைகாலங்களில் நீர் மூலவளங்களில் கடல்நீர் கலப்பது தொடர்பில் பலர் கூறினார்கள். ஆனால் இந்த குடிநீர் கருத்திட்டத்தினை ஆரம்பிக்க முன்னரே கடல் நீர், நீர்மூலவளங்களில் கலப்பதனை தடுக்கும் வகையில் களுகங்கையை மறைத்து தடுப்பு அணையை நிர்மாணிப்பது தொடர்பில் தொழிநுட்ப ரீதியில் அதனை எவ்வாறு அமைப்பது என்பது தொடர்பில் நாங்கள் பலதடவைகள் தொடர்புபட்ட நிபுணர் குழுவுடன் ஆலோசித்தோம். அந்த ஆணை கட்டப்பட்டிருந்தால் இந்த நேரத்தில் இப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டியிருக்கும்.
Kaluthara |
எங்கள் அமைச்சின் மூலமாக இதனை செயற்படுத்த முற்பட்ட போது நீர்ப்பாசன திணைக்களத்தினர் அதனை எதிர்த்தனர். காரணம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்ற காலத்தில் அதனை கட்டுப்படுத்துவதில் சிக்கல் உண்டாகும் என்கின்ற காரணத்தை அவர்கள் முன்வைத்தார்கள். எனவேதான் குடிநீருக்காக சுத்திகரிக்கப்படுகின்ற நீரினை பெற்றுக்கொள்ளும் நீர்மூலவளத்தினை கடலிலிருந்து தூரத்தில் அமைப்பதன் மூலம் வெள்ள அனர்த்த காலத்தில்கூட உவர் நீர் கலப்பதனை தடுத்து தொடர்ந்தும் தூய நீரினை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் திட்டங்களை வகுத்துள்ளோம். இந்த குடிநீர் கருத்திட்டமானது இன்னும் இரண்டு வருடங்களில் இந்த பிரதேசத்து மக்களுக்கு தூய நீரினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
கடந்த காலங்களில் நாங்கள் செய்ய முனைந்த மாற்று திட்டங்கள் ஏதோ ஒருவகையில் தடைபட்டாலும், அதற்கான தீர்வாக இந்த பாரிய நீர்வழங்கல் திட்டமானது அமைந்துள்ளது என்பதனை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். அமைச்சர் ராஜித சேனாரத்ன இது தொடர்பில் விளக்கங்களை சொன்னார். 2020 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்து மக்கள் பாவனைக்காக கையளிக்க முடியும் என்று நான் நினைக்கின்றேன். அதுவரைக்கும் இந்த அரசாங்கம் இருக்கும் என நான் நம்புகின்றேன். 2020 ஆம் ஆண்டில் நாங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்க நேரிடலாம், ஆனால் பாராளுமன்றத்தின் கால எல்லையானது அதன்பிறகும் சிறுதுகாலத்திற்கு இருக்கும். எனவே எமது ஆட்சிக்காலத்திற்குள்ளாகவே இதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறே இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத தூர,கஷ்ட பிரதேசங்களுக்கு "சமூக நீர்வழங்கல் செயற்திட்டத்தின்" கீழ் நீரினை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தினை நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம். இது தொடர்பில் திறைசேரிக்கு எனது பிரேரணையை முன்வைத்துள்ளோன்.
அதிகஷ்ட பிரதேசங்களுக்கான நீர்வழங்கல் திட்டத்திற்கான பிரத்தியேக நிதியினை தருமாறு கேட்டுள்ளேன். விரைவில் அது சாத்தியப்படும். 32,278 மில்லியன் ரூபா உத்தேச செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த கருத்திட்டமானது 2017 ஆம் ஆண்டு மே மாதம் இதன் பௌதீக கட்டமைப்புகளுக்கான ஆரம்பப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்திய எக்சிம் வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன இதற்கான நிதிப்பங்களிப்பை செய்கின்றன.2020 ஆம் ஆண்டில் இத்திட்டம் நிறைவடையும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை,பேருவளை, மத்துகம, மதுராவெல, அகலவத்த மற்றும் தொடன்கொட ஆகிய பிரதேச செயலகத்திற்குப்பட்ட 269 கிராம சேவகர்கள் பிரிவில் வசிக்கின்ற 573,000 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர்.
மிக நீண்ட கால கனவாக இருந்த பிரதேசத்து பொதுமக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் சுத்தமான தூய குடிநீரினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் சுமார் 32,000 நீர் இணைப்புக்கள் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எங்களது அரசாங்கத்தின் மூலமாக இவ்வாறான 10க்கும் மேற்பட்ட பாரிய நீர்வழங்கல் திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இன்னும் 7 நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.அவ்வாறே அடுத்த வருடத்திலும் பல நீர் வழங்கல் திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். இவை அனைத்தும் வெற்றிகரமாக எம்மால் முன்னெடுக்கப்படுமாயின் இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்களில் எமது இந்த அரசாங்கமே அதிக எண்ணிக்கையான நீர்வழங்கல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்பதனை என்னால் சந்தோசமாக கூற முடியும்.
இவ்வாறான பாரிய முதலினை இந்த துறைக்கு ஒதுக்கிய அரசாங்கம் இந்த அரசாங்கம் மட்டுமே என்பதனை என்னால் உறுதிபட கூற முடியும். கடந்த கால அரசாகட்டும் அல்லது 1974 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட நீர் வழங்கல் திணைக்களமாகட்டும் அன்று தொடக்கம் இதுவரைக்கும் குறிப்பிட்ட 3 ஆண்டுகளில் நீர் வழங்கல் தொடர்பில் இவ்வாறான பாரிய வேலைத்திட்டங்களை இதற்க்கு முன்னர் யாரும் செய்யவில்லை என்பதனை நாங்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
இந்த அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்திகளை மக்கள் அறியாமல் இருக்கக்கூடும். ஆனால் இவ்வாறான வேலைத்திட்டங்களை நாங்கள் செய்வது மிகுந்த கஷ்டத்துடன் ஏனெனில் இந்த திட்டங்களுக்காக திறைசேரியில் இருந்து எங்களுக்கு பணம் கிடைப்பதில்லை. எனவே இதற்கான பணத்தினை கடனாக பெற்றுக்கொண்டே இதனை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. கடனைப்பெறுகின்ற போது அதனை மீண்டும் மீளச்செலுத்துவது தொடர்பிலும் கவனத்தை செலுத்த வேண்டும்.அதுமட்டுமல்ல நாங்கள் வழங்குகின்ற சுத்தமான நீரினை அதன் உற்பத்தி விலையிலும் நான்கில் ஒரு பாங்கிற்கே வழங்குகின்றோம். எனவே இதுதொடர்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.இருந்தும் இந்த மக்களின் அத்தியவசிய தேவை கருதியே நாம் தூய குடிநீரை வழங்குகின்றோம்.
இந்த நாடு முழுவதற்கும் குழாய்வழியான தூய குடிநீரினை வழங்குவதற்கு இன்னும் பல ஆயிரம் மில்லியன் ரூபாய் தேவைப்படும் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.விசேடமாக இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற விரும்புகின்றேன். அவர்கள் பல வேலைத்திட்டங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட நிதியினை எமக்கு வழங்கியுள்ளார்கள். அதுவும் கடனாகவே வழங்கியுள்ளார்கள். இந்த கடன்தொகைகளின் வட்டிவீதத்தை இந்திய பிரதமர் எமக்கு குறைத்து தந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பிரபல்யமான பல நிறுவனங்கள் இந்த அபிவிருத்தி செயற்பாடுகளில் எம்மோடு கைகோர்த்துள்ளன.
கடந்த அரசாங்கத்தில் எமக்கு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. உண்மையிலேயே முன்னைய அரசாங்கத்தின் தலைவிதி மாறியமைக்கு இந்த மாவட்டதில் நடைபெற்ற சம்பவங்களே காரணம். அன்பின்னர் உருவான இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் ஒரு அங்கீகாரம் இருக்கிறது. வெளிநாட்டு கடன் உதவிகளை பெற்று இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை இங்கே கொண்டுவருவதற்கு இருந்த தடைகள் இப்போது நீங்கியுள்ள நிலை உருவாகியுள்ளது.நிலையான அபிவிருத்தியை மேற்கொள்வதில் எமக்கிருக்கின்ற சவால்களை முறியடித்து வெற்றியடைந்த பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் தேவை இருக்கின்றது. இதக்கிடையில் அடிப்படை வசதிகளை வழங்குவதில் எவ்வாறான சவால்கள் இருந்தபோதும் இந்த அரசாங்கம் பொதுமக்களின் தேவைகள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்துகின்றன.
இந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்கள் அறியாவிட்டாலும் அது பாரிய அளவில் நடைபெறுகின்றன. அமைச்சர் ராஜித சேனாரத்த கூறியது போல பல நாடுகள் இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருக்கின்றன. அவ்வாறே முதலீடு செய்தும் உள்ளன.இவைகள் நம்நாட்டில் உள்ள பொருளாதார ரீதியான பிரச்சினைக்கு ஓரளவில் தீர்வினை பெற்றுத்தந்துள்ளன. என அவர் கூறினார்