இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக மறுதலித்து கருத்துத் தெரிவித்து வந்த சவூதி அரேபியா, துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள தனது நாட்டுத் துணைத் தூதரகத்தினுள் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை கடந்த சனிக்கிழமையன்று ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த வார இறுதியின்போது நள்ளிரவில் அரச ஊடகத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையொன்றில் கைகலப்பின்போது 59 வயதான அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதிகாரமிக்க பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானை கடுமையாக விமர்சித்துவந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதியே துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தினுள் இருந்து அவர் வெளியேறிவிட்டதாகத் தெரிவித்துவந்த சவூதி அரேபியா இவ்வாறு கஷோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொண்டமை தெளிவான குத்துக்கரணமாகப் பார்க்கப்படுகின்றது. இது தவிர பெயரை வெளியிடாத துருக்கிய அதிகாரியினால் தெரிவிக்கப்பட்ட கஷோக்கி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதோடு கட்டடத்தினுள் வைத்து துண்டு துண்டாக வெட்டப்பட்டார் என்ற கருத்தோடும் முரண்படுகின்றது. இந்தக் கொலை தொடர்பில் சவூதி அரேபியாவில் 18 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மொஹமட் பின் சல்மானின் உயர்மட்ட உதவியாளர்கள்கள் இருவர் மற்றும் மூன்று புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், றியாத் மீது அதிகரித்துவந்த அழுத்தங்களை தொடர்ந்து வெளியாகியுள்ள இவ்வொப்புதல் பொறுப்புக் கூறலுக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் தீவிரத்தை தணிக்க உதவும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எதனையும் மூடி மறைப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது துருக்கி அறிவித்ததைத் தொடர்ந்து சவூதியின் பொறுப்புக் கூறல் போதுமானதல்ல என ஜேர்மன் தெரிவித்திருந்தது. அதேவேளை முழுமையானதும் வெளிப்படைத் தன்மையானதுமான விசாரணை அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே கஷோக்கி கொலையுடன் தொடர்புபட்ட விடயங்களை இல்லாமலாக்க சவூதி முயற்சிக்கும் என தாம் அஞ்சுவதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைக் குழுக்கள், இவ் விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபையும் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.
சவூதி அரேபியாவின் பிரதான நட்பு நாடான பிரிட்டன் சவூதி அரேபியாவின் அறிக்கை தொடர்பிலும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் சவூதி அரேபியாவின் நட்பு நாடுகளான எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நாடுகடந்த நிலையில் இருக்கும் யெமன் அரசாங்கம் என்பன கஷோக்கி தொடர்பில் மன்னர் சல்மானின் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் விமர்சனத் தொனிகளின் வேறுபாடுகள் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாகக் காணப்படுகின்றது.
வொஷிங்டனின் அரசியல் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் சவூதியின் கூற்று தொடர்பில் அவநம்பிக்கையினை வெளியிட்டிருந்தபோதிலும், கடந்த வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் றியாதின் விளக்கம் நம்பகமானது எனவும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டமை முதலாவது சிறந்த நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார். மறுநாள் அவரது கருத்தில் சிறிய மாறுபாடு காணப்பட்டது. சவூதி அரேபியா இவ் விவகாரத்தை கையாளும் முறை தனக்கு திருப்தியளிக்கவில்லை எனத் தெரிவித்ததோடு றியாதுக்கு அமெரிக்காவின் பல பில்லியன் டொலர் ஆயுத விற்பனை தொடர்பிலும் வலியுறுத்தினார்.
கஷோக்கியின் உடல் எங்கே என்ற கோரிக்கை உள்ளிட்ட காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் தொடர்பில் வினாக்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் ஒருவார கால நெருக்கடியைத் தணிப்பதற்காகவும், சவூதி அரேபிய உயர்நிலைத் தலைமைத்துவத்தை குறிப்பாக மொஹமட் பின் சல்மானை பழியிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக சவூதி தரப்பில் 'பலிக்கடாக்கள்' தயார் செய்யப்பட்டுள்ளனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு தனிப்பட்ட விமானங்களில் இஸ்தன்பூலுக்கு வருகைதந்த 15 பேர் அடங்கிய கொலைகாரக் கும்பலினால் கஷோக்கி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டத்தைத் தொடர்ந்து இந்த விடயத்துடன் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் நெருக்கமாக இருப்பது உணரப்பட்டது. இந்தப் 15 பேருள் ஒருவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மொஹமட் பின் சல்மானுடன் இருப்பவர் எனவும் மேலும் இருவர் பட்டத்திற்குரிய இளவரசரின் பாதுகாப்பு விடயங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தி நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது. சவூதியின் ஏற்றுக்கொள்ளல் என்பது உண்மையை வெளிக்கொணருவதற்கான செயற்பாடாகக் கருத முடியாது என வாதிடும் லண்டன் மன்னர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் அன்ரீஸ் கிரே மறுதலிப்பதற்கான நியாயங்களை சவூதி அரேபியாவுக்கு வழங்குவதற்கான கதைகளையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
கஷோக்கி காணாமல் போனதிலிருந்து அடையாளப்படுத்திக்கொள்ளாத துருக்கிய அதிகாரிகள் சிறுகச் சிறுக அவர் கொல்லப்பட்ட தகவல்களை வெளியிட்டு வந்தனர் சில தகவல்கள் தெளிவானவையாக இருந்ததோடு சில தகவல்கள் கொடூரமானவையாகவும் இருந்தன. அல் ஜெஸீராவிடம் பேசிய தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத துருக்கிய அதிகாரி துணைத் தூதரகத்தினுள் வைத்து கஷோக்கி கொல்லப்பட்டமை தொடர்பில் 11 நிமிட ஒலிப்பதிவு துருக்கிய அதிகாரிகளிடம் இருந்ததாக அவர் தெரிவித்தார். கொலையாளிகள் ஊடகவியலாளரைக் கொல்வதற்கு முன்னர் விசாரணையின்போது அவரது விரல்களைத் துண்டித்ததாகவும் பின்னர் அவரது தலையைத் துண்டித்ததோடு உடலையும் துண்டு துண்டாக வெட்டியதாகவும் அந்த ஒலிப்பதிவினை மேற்கோள்காட்டி கடந்த வாரம் துருக்கிய அரச சார்பு செய்திப் பத்திரிகையான யெயினி சபாக் தகவல் வெளியிட்டது. அவ்வாறு ஆதாரங்கள் எதுவும் இருந்தால் அதனை வெளியிடுமாறு ட்ரம்ப் துருக்கியிடம் கோரியுள்ளார்.
இவ்வாறு விடயங்களை கசிந்தமையே சவூதி அரேபியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டமைக்கான காரணமாகும் என பகுப்பாய்வாளரான தோஹா நிறுவகத்தின் முரண்பாடு மற்றும் மனிதாபிமான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் சுல்தான் பரகத் தெரிவித்தார். சவூதி அரேபியா தற்போது பலிக்கடாக்களை தயார் செய்துள்ளது. துருக்கி சரியான ஆதாரங்களை வெளியிடுமானால் சவூதி மன்னர் சல்மானினால் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கு தொடர்ச்சியாக ஆதரவாக இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.