மீள்குடியேற்ற அமைச்சுக்கு அடுத்த ஆண்டு பாதீட்டில் 6ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.இருப்பினும், அந்த நிதி பெருமளவில் வெட்டிக் குறைக்கப்பட்டு ஆயிரத்து 750 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்படக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கில் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் பெரு மளவு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அமைச்சுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மீள்குடியேற்ற அமைச்சுக்கு 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் 900 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் அந்த அமைச்சுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டிருந்தபோதும், நடப்பு ஆண்டுக்கு குறைவான நிதியே வழங்கப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டியும், வடகிழக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த பிரதேசங்களில் அடிப்படைத் தேவைகளை முழுமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பெரும் தொகை நிதி தேவை என்பதை வலியுறுத்தியும் மீள்குடியேற்ற அமைச்சு அடுத்த ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் ரூபா தேவை என்று நிதி அமைச்சுக்கு கோரிக்கை சமர்பித்திருந்தது.
நிதி அமைச்சு 6 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவே வழங்க முடியும் என்று அறிவித்திருந்தது நாடாளுமன்ற நிதிக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கடந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்றது. மீள்குடியேற்ற அமைச்சுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 6ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று இந்தக் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில நாள்களுக்கு முன்னர் நிதி அமைச்சில் நடந்த கலந்துரையாடலில், மீள்குடியேற்ற அமைச்சுக்கு அடுத்த ஆண்டு பாதீட்டில் ஆயிரத்து 750 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.