பொலன்னறுவை மாவட்டத்தில் தம்பாளை, ஓனாகம கிராமங்களுக்கு அருகிலுள்ள சின்னவில்லு, வேரோடை மற்றும் கௌதர் ஓடையில் சுமார் 70 வருடகாலமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மக்களின் விவசாயக் காணிகளை வன பரிபாலன திணைக்களம் உரிமை கோரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பான்மையாக முஸ்லிம் விவசாயிகளும் சிங்கள விவசாயிகளும் இப்பிரதேசங்களில் நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வன பரிபாலன திணைக்களம் விவசாயிகளுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்துள்ளது.
இப்பகுதிகளுக்கு நேற்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் நேரடி விஜயம் மேற்கொண்டனர்.
அமைச்சர்களிடம் குறிப்பிட்ட விவசாயிகள் இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
குறிப்பிட்ட விவசாய நிலங்களுக்கு காணி உறுதியும் காணி அனுமதிப்பத்திரங்களும் உள்ளன எனவும் ஒரு சில நிலங்களுக்கே அனுமதிப்பத்திரம் இல்லை என அமைச்சர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். வன பரிபாலன திணைக்களம் அண்மையில் புல்டோசர் மூலம் விவசாய நிலங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினர்.
விவசாயிகளின் முறைப்பாடுகளை செவிமடுத்த அமைச்சர்கள் இவ்விவகாரம் தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா, பிரதேச செயலாளர், வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவிடம் கலந்துரையாடலை மேற்கொண்டு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர்.
விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்கள் நிலவிய யுத்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலையிலும் தாங்கள் தொடர்ந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் விவசாயிகள் அமைச்சர்களிடம் முறையிட்டதுடன் தங்களது விவசாயக்காணிகளை அபகரிப்பதற்குப் புனித பூமியென்றும், வன பரிபாலன திணைக்கள சொத்து எனவும் காரணங்கள் கூறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமும் பைசர் முஸ்தபாவும் விவசாயிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது பௌத்த பிக்குகளும் அவ்விடத்துக்கு வந்து விவசாய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். இதற்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என அவர்களிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.