Top News

முஸ்லிம் கட்சிகள் நடுநிலையாக இருக்க வேண்டும்- பஷீர் சேகு தாவூத்

நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முஸ்லிம் கட்சிகள் நடுநிலையாக இருக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது;

நாட்டு மண்ணில் அதிகாரம் இடித்து நாட்டப்பட்டுள்ளது. இத்தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் நடுநிலை பேணல் அவசியமாகும்.இவ்வாறான நிலைமைகளில் சிறுபான்மைத் தலைமைகள் பிரிவினைகளைக் கடப்பதுவும், கை கட்டியபடி இரு தரப்பையும் பார்த்து புன்முறுவல் பூப்பதுவும் அவசியமான அரசியல் தந்திரமாகும்.

ரணில் விக்கிரமசிங்க நடத்திய ஊடக சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்; “முப்படைகளும் பொலிஸாரும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ‘எண்ணத்திற்கு’ ஆதரவாக இருப்பது அவசியம்”, என்ற தோரணையில் கருத்து வெளியிட்டிருப்பது கவனிப்புக்குரியது.

பெரும்பான்மை எண்ணம் என்பது, மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதை, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மாற்றியிருக்கிறது.எனவே,தற்போது நாடாளுமன்ற சம நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றத்துக்கு பாதுகாப்புத் தரப்பு அங்கீகாரம் வழங்கத் தொடங்கிவிட்டது என்பதை, ஹக்கீம் கணக்கில் எடுக்கவும் வேண்டும்.

ஐ.தே.கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் தமது ஆதரவாளர்களை அணிதிரட்டி வந்து கொழும்பில் கோஷமிடுவது முஸ்லிம்களுக்கு பாதுகாப்புப் பிரச்சினையை ஏற்படுத்தும்.மற்றும் கலவர சூழலைப் பயன்படுத்தி நாட்டுக்குள் புகுவதற்கு காத்திருக்கும் வெளிச் சக்திகளுக்கு கால்வாய் வெட்டிக் கொடுப்பதற்கு முஸ்லிம்களின் இரத்தம் தேவைப்படும் காலமிது என்பதை, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களைக் கடந்து புரிந்து கொள்வதும் அவசியமாகும்.

இனி இலங்கையின் அரசியலும், நிர்வாகமும் துடுப்பிழந்த படகாய் இந்துமாக் கடலில் தத்தளிக்கப் போகிறது என்பதை – தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் தலைவர்கள் உணரும் தேவையே இன்றைய சிறுபான்மை அரசியலில் முக்கியமானதாகும்.

இதனை உணராதுவிட்டால், எந்த நாட்டுப் படையும் எந்த நேரத்திலும் நாட்டுக்குள் உள்நுழையும் என்பதை, ஆக்கிரமிப்பு வரலாற்றை அறிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள்.
puthithu 
Previous Post Next Post