Top News

உரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா?

நாம் அடிக்கடி நம் அரசியலில் கேட்கும் வார்த்தைகள், “ எங்களுக்கு அபிவிருத்தி முக்கியம் இல்லை; உரிமையே முக்கியம்”. “ உரிமையில்லாத அபிவிருத்தியால் பயன் இல்லை.” “ அபிவிருத்திக்காக சோரம்போக முடியாது.” “இரண்டும் தேவை”. “ அபிவிருத்தி தேவைதான் அதற்காக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது”. போன்றவையாகும்.

அவ்வாறு உரிமை வேறு, அபிவிருத்தி வேறு என்றால், உரிமை என்றால் என்ன? அதிகமானவர்களிடத்தில் பதில் இல்லை. எங்களுக்கு அபிவிருத்திகளைவிட உரிமைதான் முக்கியம் என்று மேடைகளில் பேசுகின்ற அரசியல்வாதிகளும் இதுவரை உரிமை என்றால் என்னவென்று கூறவில்லை. அவர்களுக்கும் தெரியுமோ தெரியாது.

ஒரு பாடசாலையில் வகுப்பறைக் கட்டம் இல்லாமல், தளபாடங்கள் இல்லாமல் மரத்தின் கீழ் நிலத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் பாடசாலைக்கட்டிடம் பெறுவது உரிமையா அல்லது உரிமையிலிருந்து வேறுப்பட்ட அபிவிருத்தியா?

ஒரு ஊரில் குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் தண்ணீர் வசதி பெறுவது உரிமையா? உரிமையோடு தொடர்பில்லாத அபிவிருத்தியா? அவை உரிமை இல்லையென்றால் உரிமை என்றால் என்ன?

மறைந்த தலைவர் அபிவிருத்தி செய்யமாட்டோம். ரோட்டுப் போடமாட்டோம், பாலம் கட்டமாட்டோம், வீடுதரமாட்டோம், உணவுமுத்திரை தரமாட்டோம், உத்தியோகம் தரமாட்டோம்; என்று மேடைகளில் முழங்கினார். நாங்களும் அவருடன் சேர்ந்து பலமேடைகளில் அதனைப் பேசியிருக்கின்றோம். ஆனால் ஒரு மேடையிலாவது அபிவிருத்தி உரிமையல்ல; அல்லது அபிவிருத்தி வேறு, உரிமை வேறு அல்லது உரிமையைப் பெற்ற பின்புதான் அபிவிருத்தி செய்வோம்; என்று கூறவில்லை.

அவர் இன்னும் சொன்னார், அதாவது “ எதுவும் செய்யமாட்டோம்” என்றும் சொன்னார். ‘எதுவும் செய்யமாட்டோம்’ என்றால் எதற்காக அரசியல்கட்சி? ஆனாலும் சொன்னார். மக்களும் வாக்களித்தனர்.

சரி, எதுவும் செய்யமாட்டோம், என்றவர் எதுவும் செய்யாமல் இருந்தாரா? அபிவிருத்தி செய்யமாட்டோம், என்றவர் அபிவிருத்தி செய்யாமல் இருந்தாரா? உத்தியோகம் தரமாட்டோம் என்றவர் உத்தியோகம் தராமல் இருந்தாரா? இல்லை. அவ்வாறாக இருந்தால் அவர் அவ்வாறு சொன்னதற்கு வேறுபொருள் இருந்திருக்க வேண்டும்.

அபிவிருத்திவேறு, உரிமை வேறு என்றால் அவர் உரிமைகளையெல்லாம் பெற்றுத்தந்தபின்னா அபிவிருத்திசெய்ய ஆரம்பித்தார்? அவ்வாறு உரிமைகள் பெற்றுத்தந்ததன் பின்தான் அபிவிருத்தி செய்தார் என்றால் அவ்வாறு உரிமைகள் பெற்றாகியதன்பின் இன்னும் என்ன உரிமை பெறுவதைப்பற்றி இவர்கள் பேசுகின்றார்கள். எந்த உரிமையையைப் பெறுவதற்காக அபிவிருத்தியைப் கடந்த 18 வருடமாக பின்தள்ளுகிறார்கள்?

எனவே, அபிவிருத்தி என்றால் என்ன? உரிமை என்றால் என்ன? என்பதில் நமக்குள் குழப்பமிருப்பது புரிகிறதல்லவா? இதுதான் இந்த அரசியல்வாதிகளின் பலம்.

மறைந்த தலைவர் “எதுவும் செய்யமாட்டோம்” என்று சொன்னார். மக்கள் வாக்களித்தனர். எனவே, இந்த மக்களுக்கு எதுவும் செய்யத்தேவையில்லை. கரங்கா காணியை மீட்கத் தேவையில்லை, கல்முனை புதியநகரம் கட்டத்தேவையில்லை, ஒலுவில் பிரச்சினை தீர்க்கத்தேவையில்லை, ......... எதுவும் செய்யத்தேவையில்லை; என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஒன்றும் செய்யாவிட்டால்தான் இந்த மக்கள் வாக்களிப்பார்கள்; என்று எண்ணிவிட்டார்கள். மக்களும் ஆம் நாங்கள் அவ்வாறுதான். எங்களுக்கு ஒன்றும் செய்யத்தேவையில்லை. நாங்கள் வாக்களிப்போம்; என்று நிருபிக்கின்றார்கள்.

பின்னால் வந்த “ சப்த வெடிலும்” , ‘ நீங்களும் ஒன்றும் செய்யாமல்தானே வாக்குப்பெறுகிறீர்கள்; நீங்கள் அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமலிருக்கிறீர்கள், நான் ‘ யாவாரம்’ தெரிந்தவன், எனவே அபிவிருத்தியே செய்யமுடியாத அமைச்சை எடுத்து யாவாரம் செய்கிறேன்.

அப்பப்ப வந்து சத்தம்போடுவேன். என்னைக் ‘குட்டி அஷ்ரப்’ என்று எழுவதற்கு கூலியாட்கள் வைத்திருக்கிறேன்; ஏமாந்த மக்கள் உங்களுக்கு போட்டு மிகுதியை எனக்குப்போடுவார்கள்’ என்று ஒரு அரசியல் யாவாரம் நடக்கிறது.

உரிமை என்றால் என்ன?
——————————-
உரிமை என்பது மிகவும் ஆழமான சொல். அது தொடர்பாக எத்தனையோ சர்வதேச உடன்படிக்கை வந்துவிட்டன. சுருக்கமாக, உரிமை என்பது, “moral or legal entitlement to do or have something”; அதாவது, ஒன்றைச் செய்வதற்கு அல்லது பெறுவதற்கு சமூகப்பெறுமானங்களின் அடிப்படையில் அல்லது சட்டரீதியாக உங்களுக்கு இருக்கின்ற உரித்துத்தான் “ உரிமை”யாகும்.

உரிமை பலவகைப்படும். சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் என பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் மேலும் பிரிவுகள் இருக்கின்றன. உயிர்வாழும் உரிமை, மதத்தை பின்பற்றும் உரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை..... இவ்வாறு நீண்ட பட்டியல் இருக்கின்றன.

உதாரணமாக, உயிர்வாழ்வதற்கான உரிமை எனும்போது வெறுமனே உயிர் வாழுதல் என்பது பொருளல்ல. அதற்கு மேலதிகமாக கௌரவமாக வாழுதல் என்ற பொருளையும் அது உள்ளடக்குகின்றது. கௌரவமாக வாழுதல் என்பதை மேலும் வியாக்கியானப்படுத்தும்போது கல்வி, சுகாதாரம், வாழ்விடம், தொழில் போன்ற உரிமைகள் அதற்குள் உள்வாங்கப்படுகின்றன. சில அறிஞர்களுக்கு மத்தியில் இவற்றில் சில கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இதனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

இவ்வாறான உரிமைகளுள் சில முன்னுரிமைக்குரியவைகளாக கொள்ளப்படுகின்றன. சிலர் அவ்வாறு வகைப்படுத்த முடியாது; என்றும் வாதிடுகின்றனர். ஆனாலும் நடைமுறையில் அவ்வாறுதான் உள்ளன. அவற்றிற்கு கோட்பாட்டு ரீதியான காரணம் என்பதைவிட நடைமுறையான காரணங்கள் இருக்கின்றன.

அதேநேரம் சில உரிமைகள் கட்டுப்படுத்த முடியாத முழுமையான உரிமைகள். சில கட்டுப்படுத்தக்கூடிய உரிமைகள். உதாரணமாக ‘ சித்திரவதைக்கெதிரான உரிமை முழுமையானது. அரசோ, யாரோ, யாரையும் எந்தக்காரணம்கொண்டும் சித்திரவதை செய்யமுடியாது. ஆனால் உயிர்வாழும் உரிமை முழுமையல்ல. கட்டுப்படுத்தக் கூடியது. மதத்தைப் பின்பற்றுவது முழுமையான கட்டுப்படுத்த முடியாத உரிமை. மதத்தை பிரச்சாரம் செய்வது கட்டுப்படுத்தக்கூடிய உரிமை. பேச்சுச் சுதந்திரம் கட்டுப்படுத்தக்கூடிய உரிமை.

இந்தப்பின்னணியில் நமது அரசியல் பார்வைக்கு வருவோம்.

இப்பொழுது சிந்தியுங்கள்! கல்விக்காக பாடசாலைக்கட்டிடம் கட்டுவது நமது உரிமையா? இல்லையா? சுகாதாரத்திற்காக வைத்தியசாலை வசதிகளைப் பெறுவது நமது உரிமையா? இல்லையா? குடிப்பதற்காக, குளிப்பதற்காக தண்ணீர் வசதி பெறுவது நமது உரிமையா? இல்லையா? பிரயாணம் செய்வதற்காக பாதை வசதிகளைப் பெறுவது நமது உரிமையா? இல்லையா?

சில உரிமைகள் கண்ணால் காணக்கூடிய அபிவிருத்தி வடிவத்தில் இருக்கின்றன. சில கண்ணால் காணமுடியாத, அறிவால் உணரக்கூடிய வடிவத்தில் இருக்கின்றன. உதாரணம் பாதுகாப்பு.

மறைந்த தலைவர் ஏன் எதுவும் செய்யமாட்டேன்; என்று சொன்னார்? அன்று எங்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. உயிர்களுக்கு உத்தரவாதமிருக்கவில்லை. வட கிழக்கு இணைக்கப்பட்டு அரசியல் அடிமையாக்கப்பட்டிருந்தோம். பாராளுமன்றத்தில்கூட குரல் கொடுக்கமுடியாமல் நம் வாய்களுக்குப் பூட்டுப்போடப்பட்டிருந்தது.

அந்த சூழ்நிலையில் தலைவர் கண்ணுக்குத் தெரியக்கூடிய அபிவிருத்தியடன் தொடர்புடைய உரிமைகளுக்கு மக்கள் முன்னால் முக்கியத்துவத்தைக் குறைத்து கண்ணால் காணமுடியாத மேற்சொன்ன பாதுகாப்பு, பேச்சுச் சுதந்திரம், இணைந்த வட கிழக்கில் நாம் மாட்டியிருந்த அடிமைத்தளயில் இருந்து நம்மை மீட்டல், அதிகாரப் பகிர்வில் நமது அக்கறைகள் உள்வாங்கப்படுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கினார்.

அன்றைய காலகட்டத்தில் அரசியல் மேடைகளில் இந்தளவு உரிமை தொடர்பான விளக்கத்தைக் கொடுத்திருந்தால் மக்கள் புரிந்திருப்பார்களா? மறுபுறத்தில் ஆளும் கட்சியான ஐ தே கட்சிக்காரர்கள் அபிவிருத்தியோடு தொடர்புபட்ட உரிமைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள்; உரிமை என்ற சொல்லைப் பாவிக்காத போதிலும்கூட.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். எல்லா உரிமைகளையும் அனுபவிப்பதற்கு நாம் முதலில் உயிர்வாழ வேண்டும். வயலுக்கு சென்ற கணவன் திரும்பி வருவானா என்று தெரியாமல் நாள்பூராகவும் பதைபதைப்புடன் மனைவி, வியாபாரத்திற்கு சென்ற மகன் திரும்பி வருவானா என்று தெரியாமல் முந்தானையை ஏந்தி துஆவுடன் தாய்; வெளியே சென்ற சகோதரன் திரும்பிவருவானா? என்று தெரியாமல் நிம்மதி இழந்த சகோதரி; என்று அன்றைய சூழ்நிலை ஒரு பயங்கரமாகும்.

அந்த மக்களிடம் அவ்வாறு பேசாமல் வேறு எவ்வாறு பேசுவது? உலகத்திலே எதுவும் செய்யமாட்டோம்; என்று பகிரங்கமாக பேசி வாக்குப்பெற்ற கட்சிகள் ஏதாவதுண்டா? அல்லது அவ்வாறு பேசிய கட்சிகள்தான் உண்டா? ஆனால் எங்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் பேசியது. மக்களும் ஒன்றும் செய்யமாட்டோம்; என்று சொன்ன கட்சிக்கு வாக்களித்தார்கள்.

தலைவர் இன்னும் ஒன்றும் சொன்னார். “ நாம் எதுவும் செய்யமாட்டோம்; முஸ்லிம் சமூகமே நீ ஒற்றுமைப்படு; அனைத்தும் உன்காலடிகளுக்குத் தேடிவரும்; என்றார்.

இதன் பொருளென்ன? மக்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தார்கள் என்பதற்காக ஒன்றும் செய்யாமல் இருந்தால் எல்லாம் தேடிவருமா? ஒரு துரும்பும் வராது. நானே இந்த வசனத்தை எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கின்றேன். ஆனால் எல்லாம் வந்தது. சுயமாக வரவில்லை. தலைவர் எல்லாம் செய்தார். கொண்டுவந்தார்.

வெட்டுப்புள்ளித் திட்டத்தைக் மாற்றினார். புலிகள் முஸ்லிம்களுக்கு செய்த அட்டகாசத்தை உலகிற்கு சொன்னார். முஸ்லிம்களும் தமிழர்களே! வணக்கஸ்தலம் மாத்திரம்தான் வேறு; என்று இந்தியாவே சொன்னபோது இல்லையென மறுத்து முஸ்லிம்கள் தனித்துவ சமூகமென நிறுவினார்.

பல்கலைக்கழகம் கொண்டுவந்தார். துறைமுகம் கொண்டுவந்தார். ( அவர் மரணித்தபின் கட்டியவர்கள் விட்டதவறினால் இன்று பாதிக்கப்பட்டுள்ளோம்; என்பது வேறுவிடயம்). கல்விக்கல்லூரி கொண்டுவந்தார். அஷ்ரப் வைத்தியசாலை நிறுவினார். ( பெயர் பிந்தியது) பாடசாலைக் கட்டிடங்கள் கட்டினார்....... பட்டியல் நீளும்.

இவையெல்லாம் தாமாக வரவில்லை. அவர் கொண்டுவந்தார். இங்கு நம் சிந்தனைக்கு எடுக்கவேண்டியது, எதுவும் செய்யமாட்டேன் என்றவர் எல்லாம் செய்தார்; ஒற்றுமைப்பட்டால் தானாகவரும் என்றார்; எதுவும் தானாக வரவில்லை. அனைத்தும் அவர் கொண்டுவந்தார்.

எனவே, இந்த வசனங்களை அன்றைய சூழலில் மக்களை ஒற்றுமைப்படுத்த பாவித்தாரேயொழிய அவ்வாறு செயற்படவில்லை. அபிவிருத்தி செய்யமாட்டேன் என்றுதான் சொன்னாரேதவிர அபிவிருத்தி உரிமையில்லை; என்று சொல்லவில்லை. சட்டம் தெரிந்தவர் அவ்வாறு சொல்லவும் முடியாது.

இதைப்புரிந்துகொள்ளாமல் அபிவிருத்தி வேறு, உரிமை வேறு, அது முதல், இது பின்னர் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருக்கின்றோம். 18 வருடங்கள் வீணாக்கப்பட்டிருக்கின்றன.

எவ்வளவுதான் ஒற்றுமைப்பட்டாலும் செய்யத்தெரியாதவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.ஒற்றுமைப்பட்டதற்காக தாமாக வராது. அன்று தலைவர் அந்த ஒற்றுமைப் பலத்தை சந்திரிக்காவுக்கு முட்டுக்கொடுத்துத்தான் ஆயிரக்கணக்கானவர்களுக்கு துறைமுகத்தில் வேலை கொடுத்தார்.

இன்று பல கட்சிகள் இருந்தபோதும் அதிகப்பெரும்பான்மையான வாக்குகளை அந்தக் கட்சிக்குத்தானே வழங்குகிறீர்கள். இந்த அரசாங்கத்தில் அந்தக்கட்சியின் பலம் என்பது அன்று சந்திரிக்காவுக்கு நாம் முட்டுக்கொடுத்தபோது இருந்த பலத்தைவிட யதார்த்தத்தில் அதிகமாகும். சாதித்ததென்ன?

சாதித்திருக்கின்றோமா? இழந்திருக்கின்றோமா?
புதியமுறையில் மாகாணசபைத் தேர்தல் நடந்தால் பிரதிநிதித்துவத்துவத்தை இழக்கப்போகின்றோம் நாம் கையுயர்த்தியதால்.

சம்மாந்துறையில் கரங்காவை இழந்திருக்கின்றோம்! 
பொத்துவிலிலும் பல கரங்காக்களை இழந்திருக்கின்றோம்!
ஒலுவிலில் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கின்றோம்!
கல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை இழந்திருக்கின்றோம்! ......
இவ்வாறு நீண்டதொரு பட்டியல்.

கண்ணுக்குத் தெரியாத உணரக்கூடிய உரிமை எதைப்பெற்றோம். கண்ணுக்குத் தெரியக்கூடிய அபிவிருத்தி உரிமை எதைப்பெற்றோம்.

எனவே, செய்யத்தெரியாதவர்களுக்குப் பின்னால் சமூகம் ஒற்றுமைப்பட்டும் பிரயோசனம் இல்லை. ஒற்றுமைப்படாவிட்டாலும் பிரயோசனம் இல்லை.

இப்பொழுது “ நானும் இருக்கிறன் சின்னக்குட்டி” தலவருக்குப்பின் அவர்தான் அஷ்ரபாம். அவரும் இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகத்தின்நிலை அதோகதியாம்.

என்ன சாதித்தார் என்றுதான் சொல்லகிறார்கள் இல்லை.

முசலியில் மஹிந்த ஆட்சியில் பறிகொடுத்த பன்னிரண்டாயிரம் ஏக்கர் காணியை மீட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

நல்லாட்சியில் பறிகொடுத்த ஒரு லட்சம் ஏக்கரை மீட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

இடம்பெயர்ந்த மக்களையெல்லாம் மீள்குடியேற்றிவிட்டதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

முசலிக்கென்று இருக்கின்ற சிலாவத்துறை வைத்தியசாலையையாவது உருப்படியாக அபிவிருத்தி செய்ததனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

கிழக்கு மாகாணத்தைக் குடிசை ( குடில்) இல்லாத மாகாணமாக்குவேன்; என்றார். அவ்வாறு ஆக்கியதனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

கிழக்கிலங்கையில் பறிகொடுத்த காணிகளை மு கா மீட்கவில்லை; நான் மீட்டுத் தருவேன்; என்றார். அவ்வாறு மீட்டுத் தந்தனால் குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

மாகாணசபை சட்டத்திற்கு கையுயர்த்தியதற்காக குட்டி அஷ்ரப் ஆனாரா? அல்லது

கணக்காய்வாளர் நாயகம் அறிவித்தாரே! அதற்காக குட்டி அஷ்ரப் ஆனாரா?

எதற்காக என்று சொல்லிவிட்டு குட்டி அஷ்ரப் என்றால் பரவாயில்லை.

எனவே, சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். பல விடயங்களில் இவர்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றது. ஆனால் யார் சமூகத்தை அதிகம் ஏமாற்றுவது என்பதில் மட்டும் போட்டி இருக்கின்றது.

போராளிகள் இதனைப் புரியாமல் அடித்துக் கொள்கிறீர்கள். எதையும் செய்யாமல் இருப்பதை மறைப்பதற்காக பாவிக்கும் உத்திகள்தான் உரிமை வேறு அபிவிருத்தி வேறு என்று வேறு பிரிப்பதும் உங்களைக் குழப்புவதும்.

யாராவது உங்களிடம் உரிமை வேறு, அபிவிருத்தி வேறு என்று கூறினால் உரிமை என்றால் என்ன? என்று கேளுங்கள். உரிமை பத்துக் கிலோ ஒவ்வொரு ஊருக்கும் தரச்சொல்லுங்கள்.

உரிமை என்றொரு சாமானே உலகில் கிடையாது. அது சடப்பொருள் அல்ல. ஒன்றைச் செய்வது அல்லது பெறுவது நமது உரிமை. அது உணரக்கூடியதாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரியக்கூடியதாக இருக்கலாம்.

அபிவிருத்தி கண்ணுக்குத் தெரியக்கூடியது.

எனவே, அபிவிருத்தியும் உரிமையே!!!
உரிமை, அபிவிருத்தி என்பது இரண்டு அல்ல. ஒன்றே!

வாகனமும் காரும் இரண்டல்ல. ஒன்றே.

வாகானத்தில் ஒரு வகை கார். இன்னொரு வாகை லொறி. இன்னொரு வகை பஸ். ஆனால் எல்லாம் வாகனமே!
அதேபோன்றுதான் உரிமையில் அபிவிருத்தியும் அடங்கும். பாதுகாப்பும் அடங்கும். எல்லாம் அடங்கும்.


-வை எல் எஸ் ஹமீட்
Previous Post Next Post