ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று கொழும்பில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதுடில்லியில் மூடிய அறைக்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் ஏனைய சந்திப்புகளின் நோக்கங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரியப்படுத்தியுள்ளாதாக தெரியவருகின்றது.
இந்திய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரம் கலந்துகொண்ட இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இதன் போது ஜனாதிபதிக்கு பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடனான சந்திப்புகள் குறித்தும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. மேலும் இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையில் மூடிய அறைக்குள்ளும் ஒரு சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே கலந்துகொண்டதாக அந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தன்னைக் கொல்ல இந்திய புலனாய்வு அமைப்பான "றோ" சதித் திட்டம் தீட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக வெளிவந்த தகவல் தொடர்பாக மூடிய அறைக்குள் பேசப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும் இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய இருதரப்பு பேச்சுக்களின் போது இந்த விவகாரம் பேசப்பட வில்லை .
இதேவேளை உள் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற இலங்கை -– இந்திய கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்தல் மற்றும் தடைகளை நீக்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய திட்டம், திருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரம், பலாலி மற்றும் மத்தள விமான நிலைய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து இரு தரப்பு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விளக்கமளித்துள்ளார். குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் மூடிய அறைக்குள் பேசப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இதன் போது பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.