வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன், தனக்குக் கிடைத்த செய்தியை உறுதிப்படுத்தாமல், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளார்.இதனால் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவிடம் அவர் முறையாக வாங்கிக் கட்டியுள்ளார்.
இணையத்தளத்தில், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் மகன் தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கும், அமைச்சர்களுக்கும், அவைத் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்கு மாகாண முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில் தெரிவித்துள்ளதாவது,
யாழ்ப்பாணம் வர்த்தக நிலையத்தில் திருட்டு, வடக்கு மாகாண சபை முக்கிய பிரமுகரின் மகனும் சிக்கினார் என்ற தலைப்பில் இணையத்தளத்தில் வெளியான செய்தியை எனக்கும் வடக்கு மாகாண அமைச்சர்கள், அவைத் தலைவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பியதற்கு எனது நன்றிகள்.
வடக்கு மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகளில்தான் தாங்கள் திறம்பட, ஆக்கபூர்வமாக விடயங்களை விளங்கிச் செயற்படாத் தன்மை இருக்கின்றது என்று நான் இதுவரை தங்களைப் புரிந்து கொண்டேன். ஆனால் அந்த விடயப் பரப்புக்களுக்கு அப்பாலும் அதே வடிவில் தான் செயற்படுகிறீர்கள் என்பதை மேற்படிச் செய்தியை அனுப்பியதன் மூலம் உணர்கின்றேன்.தங்கள் ஊதுகுழல் இணையத்தளத்தில் ஒரு செய்தியை வரவைத்து அதைப் பரப்பி அரசியல் லாபம் தேடும் தங்கள் நோக்கத்தையிட்டு நான் பரிதாப்படுகின்றேன்.
எனது மகனுக்கு 26 வயது. அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவரோ அல்லது மாகாண சபையில் நான் அங்கம் வகிப்பதன் மூலம் ஏதாவது நன்மை பெற்றவரோ அல்லர். அவரது நடவடிக்கைகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் தனித்துவமானவர் என்று கூறி நான் தப்ப எண்ணுகின்றேன் என்று கருதவேண்டாம். ஒருவரின் தனிப்பட்ட விடயங்களையோ அல்லது அவரின் குடும்ப அங்கத்தவர்களின் விடயங்களையோ அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது அரசியல் நாகரிகம் அல்ல.அதன் அடிப்படையில்தான் உங்கள் குடும்ப விடயங்கள் பலவற்றையும், தங்களது வீட்டில் தற்போது நடக்கும் விடயங்களைப் பலர் எமக்கு எடுத்துக் கூறியதோடு, சபையில் பேசுமாறும் வேண்டியபோது நான் அவ்வாறான அநாகரிக அரசியலைச் செய்ய விரும்பாமையால் அவை பற்றிப் பேசுவதில்லை. இனிமேலும் பேச போவதுமில்லை.தங்கள் ஊதுகுழல் இணையத்தில் வெளியான விடயத்துக்கு வருகின்றேன். அதில் கூறப்பட்டுள்ள விடயங்களைப் பிழையென என்னால் நிரூபிக்க முடியும். தனிப்பட்ட முறையில் நிரூபிக்காமல் பகிரங்கமாகவே நிரூபிக்கத் தயாராக உள்ளேன்.
ஏற்கனவே மாகாண சபையின் கடந்த 5 ஆண்டு செயற்பாட்டில் நடைபெற்ற ஊழல்கள், செயற்பாட்டுத் திறன்னின்மை, அதிகார முறைகேடு, அசட்டையீனமான நிறைவேற்றுச் செயற்பாடுகள் போன்றவற்றைப் பகிரங்கமாக விவாதிப்பதற்கு தங்களை வருமாறு பல தடவைகள் நான் அழைத்திருந்தேன். தாங்கள் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதாகக் கூறுவது உண்மையானால், அதேபோல் தங்கள் கூற்றுக்கள் உண்மையானதும் நேர்மையானதுமானால், இந்த விடயம் உள்ளடங்களாக வடக்கு மாகாண சபையின் செயற்பாடு தொடர்பில் ஒரு பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என்று மீண்டும் சவால் விடுகின்றேன்.அதேநேரம் தாங்கள் அனுப்பிய செய்தியைத் திசை திருப்புவதாகக் கருதினால், அந்த விடயத்தை முதலில் விவாதித்து அதன் பின்னர் ஏனைய விடயத்துக்குள் செல்லவும் நான் முழுமையான சம்மதத்தைத் தெரிவிக்கின்றேன். தங்களிடமிருந்து இதற்கு உறுதியான பதிலை எதிர்பார்க்கின்றேன் – என்றுள்ளது.