அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாணசபை அமைச்சரும் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தருமான எம் எஸ் உதுமாலெப்பை இராஜினாமாச் செய்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.
இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராகவும், உதுமாலெப்பைக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்த மன்சூர், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவினால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதுமாலெப்பை தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாவுல்லாவுக்கும் உதுமாலெப்பைக்கும் கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு விரிசலடைந்ததையடுத்து ஏற்கனவே பிரதித்தவிசாளர் பதவியை உதுமாலெப்பை இராஜினாமாச் செய்திருந்ததும் அதன் பின்னர் அக்கரைப்பற்று கிழக்கு வாசலில் இரண்டு சாராருக்குமிடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
உதுமாலெப்பைக்கு ஏற்பட்டிருந்த அநியாயங்கள் தொடர்பில் விசாரணை செய்து உண்மை நிலையை கண்டறிவதற்கு விசாரணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் இருவருக்குமிடையிலான முரண்பாடுகள் வளர்ந்ததன் விளைவே மன்சூரின் அதிரடி நீக்கமும், உதுமாலெப்பையின் இராஜினாமாவும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்தடுத்த நாட்களில் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறி புதிய பயணமொன்றை தொடங்குவார் என நம்பப்படுகின்றது.