அடுத்த மாதம் ஈரான் மீதான பொருளாதார தடை விதிப்பு மற்றும் சீனாவுக்கு எதிரான வரி அதிகரிப்பு என்பவற்றின் தாக்கம் உலக சந்தையில் எரிபொருள் விலையில் மேலும் தாக்கம் செலுத்தும். இது இலங்கைக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். டொலர் பெறுமதி அதிகரிப்பும் எனக்கு தலையிடியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடமான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த மே 11ஆம் திகதி எரிபொருள் விலைகளைத் தீர்மானிக்க விலைச் சூத்திரமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதேபோல் ஜூன் மாதம் 10 ஆம் திகதி இது குறித்து ஆராயும் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களே சர்வதேச சந்தையின் நிலைமைகளை கருத்தில் கொண்டு விலை சூத்திரத்தை தயாரிக்கின்றனர்.
விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்திய பின்னர் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் நாளாந்தம் எரிபொருள் விலைகள் அதிகரிக்கின்றன.
மேலும் சில நாடுகளில் வாராந்தம் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றன. சில நாடுகள் மாதாந்தம் மாற்றம் செய்கின்றனர். ஆனால் இலங்கையில் அவ்வாறு செய்ய முடியாது. அதேபோல் விலை சூத்திரம் மாற்றப்படுகின்றது என்பதற்காக இந்தியாவில் அதனை வெளிபடுத்த எவரும் கூறுவதில்லை. நீங்கள் மட்டுமே விலை சூத்திரத்தை கேட்கின்றீர்கள்.
மேலும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தால் அங்கிருந்து பெற முடியாமல் போகும் . குளிர் காலம் என்பதால் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள்களின் பயன்பாடு அதிகமாகவிருக்கும். எனவே நவம்பர் மாதம் என்ன நடக்கும் என்பதை சகல உலக நாடுகளும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
மறுபக்கத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி பலமடைந்து ஏனைய நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதுவும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்குக் காரணமாகும். அதேபோல் சீனாவின் மீதான அதிகரிப்பை அமெரிக்கா கையாண்டு வருகின்றது. இவை அனைத்தின் தாக்கமும் இலங்கை போன்ற நடுத்தர நாடுகளுக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கும். இவ்வாறான நிலையில் அரசாங்கமாக நாம் மக்களுக்கு எவ்வாறான நிவாரணங்களை வழங்க முடியும் என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
என்ன விலை சூத்திரத்தைக் கொண்டுவந்தாலும் உலகில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதற்கான தீர்வை யார் பெற்றுக் கொடுப்பது என்றே நாம் பார்க்க வேண்டும். எரிபொருள் விலைகள் குறித்த சர்ச்சைக்கு முகங்கொடுத்திருந்தாலும் பொருளாதாரத்தை எவ்வாறு முன்நகர்த்திச் செல்வது, மக்களுக்கு எப்படியான நிவாரணங்களை வழங்குவது என்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
-Vidivelli