ஒலுவில் துறைமுகத்தை அண்டியுள்ள பகுதியில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகமாக ஒலுவில் துறைமுகம் மாற்றியமைக்கப்படுமென துறைமுகங்கள், துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுக அபிவிருத்தி, மணல் அகழ்வு மற்றும் கடலரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று புதன்கிழமை (03) ஒலுவில் துறைமுகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஒலுவில் துறைமுகம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது. இதனை அபிவிருத்தி செய்து நாட்டிற்கு வருமானம் ஈட்டக் கூடியதாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மர்ஹூம் அஷ்ரப்பினால் இப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஏற்படுத்தப்பட்ட இத் துறைமுகம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கைக்கமைய துறைமுகத்திலிருந்து படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதற்கு தடையாகவுள்ள மணலை அகற்றுவதற்கு தற்காலிக தீர்வாக துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பல் இங்கு வந்துள்ளது.
இதற்கான நிரந்தர தீர்வாக அமைச்சரவை தீர்மானம் பெற்று இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அந்த வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்போது பிரச்சினை தற்காலிகத் தீர்வாக மணல் அகழ்வதா? இல்லையா? என்பது. எப்படியும் இன்னும் மூன்று, 04 மாதங்களில் நிரந்தர தீர்வாக முழுமையாக மணல் அகழப்பட்டு திருத்துவதாகவும், சுமார் 50 மில்லியன் டொலர் செலவிட்டு இந்தத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான கடன் செலுத்தப்படுகின்றது.
நிரந்தரத் தீர்வோடு இங்கு கப்பல்கள் வரவேண்டும். வர்த்தகம் நடைபெற வேண்டும். உங்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கமையவே இந்தத் துறைமுகம் கொண்டுவரப்பட்டது.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாங்கள் இத் துறைமுகத்தை முன்கொண்டு செல்வோம். நிரந்தர தீர்வு எட்டுவதற்காக உங்கள் பிரச்சினைகளை ஆராய்வதற்கு பிரதேச செயலாளர் தலைமையில் கடலோரம் பேணல் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் மீனவர்கள், பொது மக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து குழு அமைத்து இதற்கான தீர்வை முன்வைக்க வேண்டும்.
நுழைவாயிலை மூடும் மணலை அகற்றி இங்கு மீன் பிடிப்பதற்கான வசதிகளோடு கப்பல் வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக் கப்பல் 365 நாட்களும் இங்கு தரித்து நின்று மணலை கரைக்கு சேர்க்கும் நடவடிக்கை எடுக்கும்.
இத் துறைமுகத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள நஷ்டஈடுகளை 02 மாத காலத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுக மீள் குடியேற்றக் கிராமத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை பொதுத் தேவைக்கு வழங்குவதற்கு ஒப்படைக்குமாறும், ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணியை பாடசாலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், துறைமுக அதிகார சபையின் தலைவரை அமைச்சர் கேட்டுள்ளார்.
இக் கலந்துரையாடலில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம். நஸீர், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் உட்பட இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Post a Comment